ஊட்டி: நீலகிரி, கோவை மாவட்டத்துக்கு இன்றும் நாளையும் ரெட் அலார்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா உட்பட அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டு உள்ளன. ஊட்டி-கூடலூர் சாலையில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால் இரவு நேர போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.அரபிக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்தழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த 5 நாட்களாக நீலகிரி, கோவை மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, கூடலூர், பந்தலூர் மற்றும் குந்தா ஆகிய பகுதிகளில் பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. பல இடங்களில் மரங்கள் விழுந்தும், மண் சரிவு ஏற்பட்டும் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது. பல கிராமங்களில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. முத்தோரை பாலாடா, கப்பத்தொரை ஆடா போன்ற பகுதிகளில் விவசாய நிலங்களில் மழை நீர் தேங்கி நிற்பதால் காய்கறிகள் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
காற்றுடன் கூடிய மழை பெய்து வரும் நிலையில், சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பைன் பாரஸ்ட், சூட்டிங் மட்டம், பைக்காரா, தொட்டபெட்டா, அவலாஞ்சி, குன்னூர் லேம்ஸ் ராக், டால்பின் நோஸ் மற்றும் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா ஆகிய சுற்றுலா தலங்கள் மூடப்பட்டன. நேற்று மழை சற்று குறைந்து காணப்பட்டது. எனவே ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா ஆகியன சுற்றுலா பயணிகள் பார்வையிடப்பதற்காக திறக்கப்பட்டன. சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் சென்று பூங்காவை சுற்றிப்பார்த்து மகிழ்ந்தனர்.
இந்நிலையில் இன்றும் (29ம் தேதி), நாளையும் (30ம் தேதி) நீலகிரி மாவட்டத்தில் அதீத கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதைத்தொடர்ந்து, ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா மற்றும் படகு இல்லம் உள்பட அனைத்து சுற்றுலா தலங்களும் இன்றும், நாளையும் மூடப்படுகின்றன. ஊட்டியில் இருந்து கூடலூர் செல்லும் சாலையில் ஆகாச பாலம் அருகே சுமார் 30 அடி உயரத்திலிருந்து பாறைகள் மற்றும் மண் சரிந்து கொண்டிருப்பதால், எந்நேரமும் இந்த சாலையில் பெரிய அளவிலான நிலச்சரிவு ஏற்படும் அபாயம் நீடிக்கிறது. இதனால், இந்த வழித்தடத்தில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு பஸ்கள் பகல் நேரங்களில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த வழித்தடத்தில் இயக்கப்படும்.
அவசர தேவைகளுக்கு செல்லும் ஆம்புலன்ஸ், தீயணைப்புத் துறை வாகனங்கள் இந்த வழித்தடத்தில் பாதுகாப்புடன் இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. உள்ளூர் வாகனங்கள் போலீசாரின் அறிவுறுத்தலின் பேரில் அனுமதிக்கப்படும். பேரிடர் மீட்பு குழுவினர் உள்பட அனைத்து துறை அதிகாரிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். 2 நாட்களும் கனமழை பெய்யும் என்பதால் பொதுமக்கள் யாரும் தேவையின்றி வெளியில் வர வேண்டாம். சுற்றுலா பயணிகள் தடை செய்யப்பட்ட சுற்றுலா தலங்களுக்கு செல்ல வேண்டாம் என்று நீலகிரி மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்து உள்ளார்.
கோவை: கோவை மாவட்டத்திலும் பருவமழை தீவிரமடைந்துள்ளது. கோவை மாநகரில் நேற்று வெயில் தாக்கம் இருந்தது. மதியத்திற்கு மேல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து மழை பெய்ய துவங்கியது. மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதியான தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. மழை காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குளங்கள், குட்டைகள் வேகமாக நிரம்பி வருகிறது. சிறுவாணி அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. விரைவில் அணை நிரம்பும் நிலையுள்ளது. கோவை மாவட்டத்துக்கு இன்றும், நாளையும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பேரிடர் மீட்பு குழுவினர் உள்பட அனைத்து துறை அதிகாரிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
பாதிப்பு அதிகம் உள்ள இடங்கள் கண்டறிந்து அங்குள்ள மக்களை பாதுகாப்பாக முகாம்களில் தங்க வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருப்பதால், சித்திரைச்சாவடி அணை உள்ளிட்ட அணைக்கட்டுகள், குளங்களில் பொதுமக்கள், குழந்தைகள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சியில் வீடு சேதம்: தொடர் மழை காரணமாக நேற்று அதிகாலை கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகராட்சி 33வது வார்டுக்குட்பட்ட பெரியார் காலனி பகுதியில் அம்மாகண்ணு (65) என்ற கூலி தொழிலாளியின் வீடு இடிந்து சேதம் அடைந்தது. அப்போது வீட்டில் இருந்தவர்கள் வெளியேறியதால் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டது.
வால்பாறையில் மின்சாரம் துண்டிப்பு: கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டார பகுதிகளில் நேற்று கனமழை பெய்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கருமலை எஸ்டேட் சாலையில் மரம் முறிந்து விழுந்ததால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து சென்ற தீயணைப்பு துறையினர் மரத்தை அகற்றி, போக்குவரத்தை சீரமைத்தனர். ஷேக்கல்முடி, கல்லாறு, அக்காமலை உள்ளிட்ட எஸ்டேட் பகுதிகளில் மின் வயர்கள் மீது மரங்கள் விழுந்ததால், மின்சாரம் துண்டிக்கப்பட்டது.