ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் காற்று மற்றும் மழையின் வேகம் சற்று குறைந்துள்ளது. இதனால் பள்ளிகள் திறக்கப்பட்டன. படகு சவாரியும் தொடங்கியது. நீலகிரி மாவட்டத்தில் முன்னதாகவே பருவமழை துவங்கியது. கடந்த மாதம் துவங்கி 10 நாட்களுக்கும் மேல் கனமழை பெய்தது.
காற்றுடன் கூடிய மழை பெய்த நிலையில் பல்வேறு பகுதிகளில் மரங்கள் விழுந்தும், மண் சரிவு ஏற்பட்டும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கியது. இதனால், விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பு மழையின் தாக்கம் குறைந்து வெயில் அடித்தது.
இந்நிலையில், மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. கடந்த ஒரு வாரமாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து நீலகிரி மாவட்டத்தில் கூடலூர், பந்தலூர், ஊட்டி மற்றும் குந்தா போன்ற பகுதிகளில் பெய்து வருகிறது. குறிப்பாக ஊட்டி மற்றும் குந்தா பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் ஊட்டி மற்றும் குந்தா போன்ற பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசியது. இதில், பல்வேறு பகுதிகளிலும் சாலை ஓரங்களில் இருந்த மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டன.
பல இடங்களில் வாகனங்கள் மீது மரங்கள் விழுந்தன. மின் கம்பங்கள் மீது மரங்கள் விழுந்ததால் கம்பங்கள் சேதம் அடைந்து மின் விநியோகம் பாதிக்கப்பட்டது. மாணவர்களின் பாதுகாப்பு கருதி ஊட்டி, கூடலூர், குந்தா மற்றும் பந்தலூர் ஆகிய தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு நேற்று முன்தினம் மாவட்ட நிர்வாகம் விடுமுறை அளித்தது. மேலும், படகு இல்லம் உட்பட வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு சுற்றுலா தலங்களும் பாதுகாப்பு கருதி மூடப்பட்டன.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு முதல் காற்றின் வேகம் சற்று குறைந்தது. மழையும் குறைந்து தற்போது லேசான காற்றுடன் கூடிய சாரல் மழை மட்டும் பெய்து வருகிறது. மழை குறைந்த நிலையில் 3 நாட்களுக்கு பின் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. பல்வேறு பகுதிகளில் மேகமூட்டம் மற்றும் சாரல் மழை பெய்து வருவதால் குளிரின் தாக்கம் அதிகமாக உள்ளது. ஊட்டியில் நேற்று மழை சற்று குறைந்த நிலையில், படகு இல்லம் திறக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் வழக்கம்போல் படகு சவாரி செய்தனர்.
மழை காரணமாக சுற்றுலா பயணிகள் வருகை சற்று குறைந்து காணப்பட்டது. பெரும்பாலான சுற்றுலா பயணிகள், வெம்மை ஆடைகளுடன் வலம் வருகின்றனர். பிளாஸ்டிக் போர்வை மற்றும் குடைகளுடன் சுற்றுலா தலங்களில் அவர்கள் வலம் வந்தனர். நீலகிரி மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு (மில்லி மீட்டரில்) வருமாறு: ஊட்டி 19, நடுவட்டம் 44, கிளன்மார்கன் 41, பார்சன்ஸ்வேலி 106, குந்தா 19, அவலாஞ்சி 207, எமரால்டு 68, அப்பர் பவானி 99, கூடலூர் 55, தேவாலா 58, பந்தலூர் 54.
சுற்றுலா தலங்கள் மூடல்
ஊட்டி, குந்தா போன்ற பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பெய்து வரும் நிலையில், சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தொட்டபெட்டா, அவலாஞ்சி, 8வது மைல், பைன் பாரஸ்ட், கேர்ன் ஹில் மற்றும் சூட்டிங் மட்டம் ஆகிய சுற்றுலா தலங்கள் நேற்றும் மூடப்பட்டன.