ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் இன்றும், நாளையும் அதீத கன மழை (ரெட் அலர்ட்) பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதற்கு ஏற்றார் போல், நேற்று முன்தினம் இரவு முதலே பலத்த சூறாவளி காற்றுடன் கூடிய சாரல் மழை பெய்து வருகிறது. ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் காற்றின் வேகம் அதிகமாக உள்ளது. தொடர்ந்து காற்று வீசி வருவதாலும், மழை பெய்து வருவதாலும் பல்வேறு பகுதிகளிலும் மரங்கள் விழுந்து பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இந்நிலையில், தற்போது கோடை சீசன் என்பதால் ஊட்டிக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கில் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.
இவர்கள் ஊட்டி அருகே தொட்டபெட்டா மற்றும் பைன் பாரஸ்ட் ஆகிய பகுதிகளுக்கு செல்கின்றனர். மழை பெய்யும் சமயங்களில் இப்பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்லும் போது, மரங்கள் விழுந்து விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று ஒரு நாள் மட்டும் தொட்டபெட்டா, பைன் பாரஸ்ட், அவாலஞ்சி, ஊட்டி படகு இல்லம் ஆகிய பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், கனமழையை எதிர்கொள்ளும் வகையில் நீலகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு, தேசிய பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர்.