ஊட்டி: ஊட்டியில் மேற்கு மண்டல ஐஜி பவானீஸ்வரி நேற்று அளித்த பேட்டி: கேரளாவில் சில இடங்களில் மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் தென்படுகிறது. இதனால் எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. கேரள-நீலகிரி எல்லையில் அமைந்துள்ள 11 சோதனைச்சாவடிகளிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் நியமிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதிரடிப்படையினர் மற்றும் நக்சல் தடுப்பு பிரிவினர் வனப்பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த உள்ளதால், நீலகிரி உள்ளிட்ட மேற்கு மண்டல எல்லைக்குட்பட்ட மாவட்டங்களில் மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் இல்லை. மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட 8 மாவட்டங்களிலும் கிராம கண்காணிப்பு குழுவை புதுப்பித்து நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளோம். அதில் உள்ளூர் மக்கள் இணைக்கப்பட்டு தகவல் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தகவலின் அடிப்படையில் கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு ஐஜி பவானீஸ்வரி கூறினார்.