*ஆண்டுதோறும் புலிகள் கணக்கெடுப்பு; மாவட்ட வன அலுவலர் தகவல்
ஊட்டி : நீலகிரி வனக்கோட்டத்தில் வன பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில் ஊழியர்களுக்கு ரோந்து பணி மேற்கொள்ளுதல், வனவிலங்குகள் நடமாட்டம் கண்காணித்தல், வன உயிரின மாதிரிகள் சேகரித்தல் மற்றும் கையாளுதல் பயிற்சி அளிக்கப்பட்டது. நீலகிரி வனப்பரப்பு மிகுந்த மாவட்டமாக விளங்கி வருகிறது. இந்த வனங்கள் முதுமலை புலிகள் காப்பகம், முக்கூருத்தி தேசிய பூங்கா, வன கோட்டங்கள் பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.
இந்த வனங்களில் புலி, யானை, சிறுத்தை, கரடி, காட்டுமாடு, நீலகிரி வரையாடு, நீலகிரி மார்ட்டின் மற்றும் பல்வேறு வகை பறவையினங்கள், மான்கள் உள்ளன. இதுதவிர ஈட்டி, தேக்கு, சந்தனம் உள்ளிட்ட பல்வேறு அரிய வகை விலையுயர்ந்த மரங்கள், அரிய தாவரங்கள் உள்ளிட்ட ஏராளமானவை உள்ளன. நீலகிரி வன கோட்டத்தில் ஊட்டி வடக்கு, தெற்கு, குந்தா, கோரகுந்தா, நடுவட்டம், பார்சன்ஸ்வேலி, பைக்காரா, குன்னூர், கோத்தகிரி, கட்டபெட்டு உள்ளிட்ட 13 வனச்சரகங்கள் உள்ளன. நீலகிரி வன கோட்டத்தில் கடந்த காலங்களில் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை புலிகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வந்தன. இந்த சூழலில் தற்போது இக்கோட்டத்தில் கணிசமான அளவு புலிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சாலைகள், தேயிலை தோட்டங்கள், அணைகளை ஒட்டிய பகுதிகளில் புலிகள் நடமாட்டத்தை அடிக்கடி காண முடிகிறது.
இதேபோல் அண்மை காலங்களில் பவாரியா வேட்டை கும்பல் ஊடுருவி புலி வேட்டையாடியது, விஷம் வைத்து புலி கொல்லப்பட்ட சம்பவங்கள் நடைபெற்ற நிலையில் ேவட்டை கும்பல் ஊடுருவதை தடுக்கும் நோக்கில் நீலகிரி வன கோட்டத்தில் கண்காணிப்பு மற்றும் ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல புலிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் இக்கோட்டத்தில் ஆண்டுதோறும் புலிகள் கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டில் வரும் டிசம்பர் மாதம் இக்கணக்கெடுப்பு நடைபெற உள்ளது. இந்நிலையில் நீலகிரி வன கோட்டத்தில் ரோந்து பணிகளை தீவிரப்படுத்தி அவற்றை எம்-ஸ்ட்ரைப்ஸ் ஆப் (M-Stripes) பதிவு செய்ய வசதியாக முதற்கட்டமாக 30 காவல் சுற்று பகுதிகளுக்கு 30 பிரத்யேக கைபேசிகள் வழங்கும் நிகழ்ச்சி ஊட்டி கேர்ன்ஹில் வனத்தில் நடந்தது.
மாவட்ட வன அலுவலர் கௌதம் தலைமை வகித்து வன ஊழியர்களுக்கு கைபேசிகளை வழங்கினார். தொடர்ந்து, இவற்றை பயன்படுத்தி ரோந்து பணிகள் மேற்கொள்ளுதல், வனங்களில் ெபாருத்தப்படும் கேமராக்கள் மூலம் வனவிலங்குகள் நடமாட்டம் குறித்து தீவிரமாக கண்காணிப்பதற்கும் வன ஊழியர்கள், வேட்டை தடுப்பு காவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
மேலும் புலிகள் கணக்கெடுப்பிற்கும் இந்த ஆப்பை பயன்படுத்துவது குறித்தும் விளக்கப்பட்டது. வன உயிரின மாதிரிகள் சேகரித்தல் மற்றும் கையாளுதல் தொடர்பாகவும் பயிற்சி அளிக்கப்பட்டது.
இதில் உதவி வன பாதுகாவலர் தேவராஜ், முதுமலை தெப்பகாடு வன கால்நடை மருத்துவர் ராஜேஷ்குமார், வனச்சரக அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட வன அலுவலர் கௌதம் கூறுகையில், ‘‘நீலகிரி வன கோட்ட வனங்களில் வனம் மற்றும் வனவிலங்குகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
அதனை நவீனப்படுத்தும் வகையில் எம்-ஸ்ட்ரைப்ஸ் ஆப் மூலம் ரோந்து பணிகள் மேற்கொள்வது குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் புலிகள் கணக்கெடுப்பு குறித்த பயிற்சியும் அளிக்கப்பட்டது. இதற்காக முதற்கட்டமாக 30 சுற்று காவல் பகுதிகளுக்கு கைபேசிகள் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 29 பகுதிகளுக்கு விரைவில் வழங்கப்படும்’’ என்றார்.