சென்னை: இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலத்தில் உள்ள விக்ரம் லேண்டர் நேற்று மாலை 6.04 மணிக்கு நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இந்தியாவின் இந்த சாதனை நிகழ்வை உலகெங்கிலும் உள்ள இந்தியர்கள் அனைவரும் உற்சாகமாக கொண்டாடினர். இந்நிலையில் இஸ்ரோ திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் 1998ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரை படித்த, தாம்பரத்தில் உள்ள ஸ்ரீ சாய்ராம் கல்லூரியில் சந்திரயான் -3 தரையிறங்கும் நிகழ்வை பிரமாண்ட திரையில் மாணவ – மாணவிகள் நேரலையில் பார்க்க கல்லூரி நிர்வாகம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இதில் ஸ்ரீ சாய்ராம் கல்வி குழுமங்களின் தலைவர் சாய் பிரகாஷ் லியோ முத்து தலைமையில் 2000க்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் உற்சாகமாக பார்வையிட்டனர். அப்போது நிலவில் சந்திரயான்-3 தரை இறங்கியதை அடுத்து கல்லூரி மாணவ – மாணவிகள் கைதட்டி, தேசியக் கொடியை அசைத்து ஆரவாரம் செய்தனர். இதனை தொடர்ந்து கல்லூரி நிர்வாகம் சார்பில் அனைவருக்கும் இனிப்புகள் மற்றும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.