நிலக்கோட்டை : நிலக்கோட்டை அருகே விளாம்பட்டியை சேர்ந்த இளையராஜா மகன் யோகேஸ்வரன் (13). இவர் கடந்த ஆக.26ம் தேதி விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார், மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட யோகேஸ்வரன் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தொடர்ந்து பெற்றோரின் சம்மதத்துடன் அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.
இதையடுத்து யோகேஸ்வரனின் உடலை சொந்த ஊரான விளாம்பட்டிக்கு கொண்டு வந்து அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு நடத்தினர். மாவட்ட கலெக்டர் பூங்கொடி கலந்து கொண்டு யோகேஸ்வரனின் உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து டிஎஸ்பி செந்தில்குமார், தாசில்தார் தனுஷ்கோடி மற்றும் பொதுமக்கள் பலர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். உடல் உறுப்பு தானத்தின் மூலம் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு வாழ்வளிக்கும் அரும்பணியில் நாட்டின் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு தொடர்ந்து விளங்கி வருகிறது.
மூளைச்சாவு நிலையை அடைந்த துயர சூழலில் அவர்களின் உடல் உறுப்புகளை தானமாக அளித்திட முன்வரும் குடும்பங்களின் தன்னலமற்ற தியாகங்களால்தான் இந்த சாதனை சாத்தியமாகியுள்ளது. தம் உறுப்புகளை ஈந்து பல உயிர்களை காப்போரின் தியாகத்தினை போற்றிடும் வகையில் தமிழகத்தில் இறந்த பின் உடல் உறுப்பு தானம் செய்பவர்களுக்கு அவர்களின் இறுதி சடங்கில் அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.