மானாமதுரை: மானாமதுரை வைகை ஆற்றில் நிலாச்சோறு திருவிழா நேற்றிரவு நடைபெற்றது. இதில் பொதுமக்கள் குடும்பம், குடும்பமாக கலந்துகொண்டு `குளிர்நிலா’ வெளிச்சத்தில் சைவ, அசைவ உணவுகளை சாப்பிட்டு விடிய, விடிய உரையாடி மகிழ்ந்தனர். சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள ஆனந்தவல்லி சோமநாதர் – வீரஅழகர் கோயிலில் சித்திரை திருவிழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் சுவாமி – அம்பாள் திருவீதி உலா நடைபெற்றது. கடந்த 8ம் தேதி திருக்கல்யாணம், 9ம் தேதி தேரோட்டம் நடைபெற்றது. வைகை ஆற்றில் அழகர் இறங்கும் முக்கிய நிகழ்ச்சி 12ம் தேதி நடைபெற்றது.
இந்த விழாவையொட்டி வைகை ஆற்றில் நிலாச்சோறு சாப்பிடும் பாரம்பரிய நிகழ்ச்சி நேற்றிரவு நடைபெற்றது. முன்னதாக, பொதுமக்கள் அதிகாலை முதலே ஆடு, கோழி, மீன் இறைச்சி கடைகளில் குவிந்தனர். அங்கிருந்து தங்களுக்கு வேண்டிய இறைச்சிகளை வாங்கி வந்து சுவையான உணவு வகைகளை சமைத்தனர். பின்னர், நிலாச்சோறு நிகழ்ச்சிக்காக நேற்றிரவு மானாமதுரை வைகை ஆற்றில் ஏராளமானோர் குவிந்தனர். அங்கு காட்சியளித்த வீரஅழகரை தரிசித்து விட்டு குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களுடன் கூடிஅமர்ந்து நிலா வெளிச்சத்தில் சைவ, அசைவ உணவு வகைகளை ஒரு பிடி பிடித்தனர்.
இது குறித்து மானாமதுரையை சேர்ந்த சிவக்குமார் கூறியதாவது: ஆனந்தவல்லி சோமநாதர் கோயிலில் விழா நடைபெறும் நாட்களில் அசைவ உணவுகளை தவிர்த்துவிடுவோம். வீரஅழகர் ஆற்றில் இறங்கிய மறுநாள் (நேற்று) மானாமதுரை கிராமத்தார் மண்டபடியில் காட்சியளித்தார். பின்னர், மீண்டும் ஆற்றில் இறங்கி இரவில் தங்கினார். இதையொட்டி நிலாச்சோறு விழா நடைபெறும். இதில் ஆற்று மணல் பரப்பில் சொந்த, பந்தங்களுடன் கூடிஅமர்ந்து சைவ, அசைவ உணவு, இனிப்பு பதார்த்தங்களை உண்டு மகிழ்வோம். விடிய, விடிய பேசி இரவுப் பொழுதை இனிதாக கழிப்போம். கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். இது மறக்க முடியாத நிகழ்வாகும். இவ்வாறு கூறினார்.