மதுரை: ‘பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைப்பதால் போலீசார் இரவு-பகலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டியுள்ளது, தேவையில்லாமல் சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தக் கூடாது’ என ஐகோர்ட் கிளை நீதிபதி தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே காயாமொழியைச் சேர்ந்த சக்திவேல், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருச்செந்தூர் தாலுகாவில் 7 இடங்களில் விநாயகர் சிலையை வைத்து வழிபாடு நடத்திய பின்னர் ஊர்வலமாக கொண்டு சென்று திருச்செந்தூர் கடலில் கரைக்க அனுமதிக்குமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அரசு பிளீடர் திலக்குமார், கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் திருவடிக்குமார் ஆகியோர் ஆஜராகி, ‘‘அரசாணைப்படி ஒரு மாதத்திற்கு முன்பே அனுமதி கோரி மனு அளிக்க வேண்டும். தீயணைப்புத்துறை உள்ளிட்டவற்றில் தடையின்மை சான்று பெற்ற பிறகே அனுமதிக்க முடியும். மனுதாரர்கள் கடைசி நேரத்தில் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். ஏற்கனவே மாவட்டத்தின் பல இடங்களில் அனுமதிக்கப்பட்டு, ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் மேலும் பல இடங்களுக்கு அனுமதித்தால், விழா முடியும் வரை அனுமதி கேட்டு வந்து கொண்டே இருப்பார்கள். அதனால் தேவையில்லாத சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படும்’’ என்றனர்.
அப்போது நீதிபதிகள், ‘‘பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைப்பதால் தேவையில்லாமல் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படக் கூடாது. சிலைகளை பாதுகாக்க போலீசார் இரவு, பகலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டியுள்ளதே? சாதாரண விஷயத்தை கூட பெரிதாக்குகிறார்களே’’ என்றனர். பின்னர் நீதிபதிகள், ‘‘அனுமதி கோரும் மனுதாரர் மனுவை, அதிகாரிகள் அரசாணை மற்றும் விதிகளை பின்பற்றி பரிசீலிக்க வேண்டும். மனுதாரர் தரப்பு விதிகளை பின்பற்றி நடக்க வேண்டும்’’ என்றனர்.