பெங்களூரு: பெங்களூரு மாநகரில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று அதிகாலை வரை பெய்த கனமழை மாநகர மக்களின் வாழ்க்கையை புரட்டி போட்டது. வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் கடும் அவதிக்கு ஆளாகினர். பல்வேறு பகுதிகள் தனித்தனி தீவு போல் காட்சியளிக்கிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் பேரிடர் மீட்பு படை, மாநகராட்சி ஊழியர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலம் முழுவதும் பத்து நாட்களாக லேசான கோடைமழை பெய்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக பெங்களூரு நகரம், பெங்களூரு ஊரகம், சிக்கபள்ளாபுரா, கோலார், ராம்நகரம் மாவட்டங்களில் கோடைமழை அதிகமாக பெய்து வருகிறது.
பெங்களூரு மாநகரில் கடந்த சனிக்கிழமை கன மழை பெய்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை 7.30 மணிக்கு தொடங்கிய மழை நேற்று அதிகாலை வரை கொட்டி தீர்த்தது. தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் அவதிக்குள்ளாகினர். இதனால் வீடுகளுக்குள் புகுந்த தண்ணீரை வெளியேற்ற குடியிருப்பு வாசிகள் பெரும்பாடுபட்டனர். ராஜாஜிநகர், மல்லேஸ்வரம், சாந்திநகர், ஸ்ரீராம்புரம், சிவாஜிநகர், உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் சாலைகளில் வெள்ளம் போல் ஓடியது. மழை காரணமாக கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
மாநகரின் முக்கிய காய்கனி மார்க்கெட்டாக இருக்கும் கே.ஆர்.மார்க்கெட் முழுவதும் மழை நீர் தேங்கியது. இதனால் பார்க்கும் இடமெல்லாமல் சகதியாக காட்சியளித்தது. சில இடங்களில் சாலைகளில் மரங்கள் வேரோடு சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டதால் அங்குள்ள மக்களை பேரிடர் மீட்பு படையினர் ரப்பர் படகுகளில் மீட்டு அழைத்து வந்தனர். சாந்திநகரில் உள்ள சி.சி.பி அலுவலகத்திலும் தண்ணீர் புகுந்துள்ளது. அலுவலகத்தின் தரை தளத்தில் முழங்கால் அளவு தண்ணீர் நிரம்பிவுள்ளது. காலை வரை நீர் குறையவில்லை. தண்ணீர் புகுந்ததால் சில கோப்புகள் சேதமடைந்துள்ளது.