ஈரோடு: போலி அமெரிக்க டாலர் வழங்கிய நைஜீரியர் கைது செய்யப்பட்டார். ஈரோடு மாவட்டம், கொளத்துப்பாளையம் அருகே தேவம்பாளையத்தை சேர்ந்த அசோக்குமார் (36). இவர் ஈரோட்டில் டிராவல்ஸ் ஏஜென்சி நடத்தி வந்தார். 3 மாதங்களுக்கு முன்பு டிராவல்ஸ் ஏஜென்சியை மூடிவிட்டு, வேறொரு நிறுவனத்தில் மார்க்கெட்டிங் வேலை பார்த்து வருகிறார்.
இருப்பினும், அசோக்குமாரின் இணையதள விளம்பரத்தை பார்த்து வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் அசோக்குமாரை தொடர்பு கொண்டால், அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன் நைஜீரியாவில் உள்ள லாகோஸ் மாநிலத்தை சேர்ந்த நாதன் இகேக்சுக்வு (42) என்பவர் அசோக்குமாரை தொடர்பு கொண்டு, கர்நாடகா மாநிலம் பெங்களூரு கே.ஆர்.புரத்தில் தங்கி ஜவுளி தொழில் செய்வதாகவும், மருத்துவ சிகிச்சைக்காக அவசரமாக 500 டாலர் அமெரிக்க மதிப்பிற்கு இந்திய பணம் தேவை என கேட்டுள்ளார்.
அவரை ஈரோடு மேட்டூர் சாலைக்கு வரவைத்து, 500 அமெரிக்க டாலரை பெற்று, 48 ஆயிரம் ரூபாய் வழங்கியுள்ளார். அவர் சென்ற பின்னர்தான் அவர் கொடுத்த அமெரிக்க டாலர் போலியானது என தெரிந்தது. இதுபற்றி ஈரோடு எஸ்பி ஆபீசில் அசோக்குமார் புகார் அளித்தார். இதையடுத்து தனிப்படை போலீசார் பெங்களூரு கே.ஆர்.புரத்தில் பதுங்கியிருந்த நாதன் இகேக்சுக்வுவை நேற்று முன்தினம் கைது செய்து நீதிமன்ற உத்தரவுப்படி நேற்று சென்னை புழல் சிறையில் அடைத்தனர். அவர் மீது ஏற்கனவே கோவை காட்டூர் பகுதியில் போலி வெளிநாட்டு கரன்சிகளை வழங்கி ஏமாற்றிய வழக்கு நிலுவையில் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.