சென்னை: அடுத்த 2 மாதங்களுக்கு டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை 10 முதல் 20 சதவீதம் வரை குறையும் என டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் கடந்த ஜூன் மாதம் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் தற்போது 4,800 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. இந்த கடைகளின் மது விற்பனை மூலம் நாளொன்றுக்கு ரூ.110 முதல் 120 கோடி வரை வருமானம் கிடைப்பதாக கூறப்படுக்கிறது. இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலங்களில் பல லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள்.
இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை நேற்று தொடங்கியது. இதற்காக ஐயப்பன் கோயில் நடை நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று கார்த்திகை மாதம் பிறந்ததால் பெரும்பாலானோர் சபரிமலை செல்ல மாலை அணிந்து விட்டனர். இதனால் அவர்கள் 41 நாட்கள் சுத்த விரதத்தில் இருப்பார்கள். இந்த கால கட்டத்தில் மது, புகையை நினைத்து கூட பார்க்க மாட்டார்கள். இதன் காரணமாக அடுத்த 2 மாதங்களுக்கு மது விற்பனை குறைய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து டாஸ்மாக் அதிகாரிகள் கூறியதாவது: ஆண்டுதோறும் கார்த்திகை மாதங்களில் விற்பனை குறைவது வழக்கம்தான். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக சபரிமலை செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. ஒரு நாளைக்கு குறிப்பிட்ட அளவு பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி, முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டும் அனுமதி என கட்டுப்பாடுகள் இருந்தது. ஆனால் தற்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால் அதிகளவில் பக்தர்கள் சபரிமலை செல்லவுள்ளனர். இன்று முதல் மாலை அணித்து விரதம் இருக்க தொடங்கி விடுவார்கள். இதன் காரணமாக மது விற்பனை 10 முதல் 20 சதவீதம் வரை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை உள்ளிட்ட நகர்புறங்களில் அதிகளவில் மாலை போடுவோர் இருக்க மாட்டார்கள் ஆனால் கிரமப்புறங்களில் அதிகமானோர் ஐயப்பனுக்கு மாலை போடுவார்கள். இதனால் கிரமப்புறங்களில் அதிகளவில் விற்பனை சரியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.