புதுடெல்லி: அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பதவி நீக்கத் தீர்மானம் கொண்டு வர ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த யஷ்வந்த் வர்மா வீட்டில் கடந்த மார்ச் மாதம் தீ விபத்து ஏற்பட்ட போது மூட்டை மூட்டையாக பணக்கட்டுகள் எரிந்து நிலையில் கண்டுபிடிக்கப்பட்டன. இதையடுத்து அவர் அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். அவர் மீதான விசாரணை அறிக்கையை உச்ச நீதிமன்றம், ஒன்றிய அரசு மற்றும் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்து உள்ளது. அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, அவரை ராஜினாமா செய்ய வற்புறுத்தினார்.
ஆனால் நீதிபதி யஷ்வந்த் வர்மா அதற்கு இணங்கவில்லை. இந்த நிலையில் வரும் நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரில் நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை மூன்றாவது வாரத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பதவி நீக்கத் தீர்மானம் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் கொண்டு வரப்பட வேண்டும். அந்த தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு மூன்றில் இரண்டு பங்கு எம்.பி.க்களின் ஆதரவு தேவைப்படும்.
* பொது நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் முதலில் எதிர்கொண்டவர் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி வி. ராமசாமி. 1993ல் இந்த தீர்மானத்திற்கு நாடாளுமன்றத்தில் தேவையான ஆதரவு கிடைக்கவில்லை.
* கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் சவுமித்ரா சென்னுக்கு எதிராக மாநிலங்களவையில் 2011ல் தீர்மானம் நிறைவேறியது. ஆனால் அவர் உடனே பதவி விலகினார்.