பீஜிங்: நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன் கடந்த 2023ல் பிரதமராக பதவியேற்றார். அவர் பிரதமராக பதவியேற்ற பின்னர் முதல் முறையாக சீனா சென்றுள்ளார். சீனாவில் உள்ள ஷாங்காய் நகரில் தொழிலதிபர்கள், அதிகாரிகள் ஆகியோரை சந்தித்து பேசினார். இந்த நிலையில் நேற்று பீஜிங்கில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து பேசினார். வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், காலநிலை போன்ற துறைகளில் ஒத்துழைப்பை ஆராய்வது குறித்து ஜின்பிங்கிடம் லக்ஸன் கூறினார்.
மேலும் பசிபிக் பிராந்தியத்தில் பதற்றங்களை குறைப்பதன் அவசியம் குறித்தும் உக்ரைன் போர் போன்ற உலகளாவிய சவால்களை தீர்க்க சீனா ஆற்ற வேண்டிய பங்கின் முக்கியத்துவம் குறித்தும் ஜின்பிங்குக்கு லக்ஸன் விளக்கினார் என்று அவரது அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சீனாவுடன் நெருக்கம் காண்பித்ததற்காக பசிபிக் பெருங்கடல் நாடான குக் தீவுக்கான நிதியுதவியை நியூசிலாந்து நிறுத்தி வைத்ததாக ஊடகங்களில் செய்தி வெளியான நிலையில் சீன அதிபர் ஜின்பிங்கை நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் சந்தித்துள்ளார்.