செஸ்டர்லீ: இங்கிலாந்து சென்றுள்ள நியூசிலாந்து ஆடவர் அணி 4 ஆட்டங்களை கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. செஸ்டர்-லீ-ஸ்டீரிட் நகரில் முதல் ஆட்டம் நடந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் களம் கண்ட நியூசி 20ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 139ரன் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கிளென் பிலிப்ஸ் 41, ஈஷ் சோதி 16ரன் எடுத்தனர். இங்கி அணியின் லூக் வுட், அறிமுக வீரர் பிரிடண் கேர்ஸ் தலா 3விக்கெட் அள்ளினர். தொடர்ந்து 140ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் கண்ட இங்கிலாந்து 14ஓவரிலேயே இலக்கை கடந்தது. அந்த அணி 3 விக்கெட் இழப்புக்கு 143ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசியை வென்றது. இங்கி வீரர்கள் டேவிட் மாலன் 54, ஹாரி புரூக் 43*, வில் ஜாக்ஸ் 22 ரன் விளாசினர். இந்த வெற்றியின் மூலம் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலைப் பெற்றுள்ள நிலையில் 2வது டி20 ஆட்டம் இன்று மான்செஸ்டரில் நடக்கிறது.