பெங்களூரு: உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை 2 முக்கிய போட்டிகள் நடக்கிறது. பெங்களூருவில் நாளை காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெறும் 35வது லீக் போட்டியில், நியூசிலாந்து-பாகிஸ்தான் மோதுகின்றன. நியூசிலாந்து 7 போட்டியில் 4ல் வென்றுள்ளது. கடைசி 3 போட்டியில் தோல்வி அடைந்துள்ளது. நாளை வெற்றி பெற்றால் தான் அரையிறுதி வாய்ப்பை வலுப்படுத்திக்கொள்ள முடியும். மறுபுறம் பாகிஸ்தான் 7 போட்டியில் 3ல் வெற்றி, 4ல் தோல்வி கண்டுள்ளது. நாளை கட்டாயம் வெற்றி பெற்றால் தான் அரையிறுதி வாய்ப்பை தக்க வைக்க முடியும். தோல்வி அடைந்தால் வாய்ப்பை இழந்து நடையை கட்டவேண்டியது தான்.
இதனால் இரு அணிகளும் வெற்றி நெருக்கடியில் களம் இறங்குவதால் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இரு அணிகளும் இதுவரை 115 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் 60ல் பாகிஸ்தான், 51ல் நியூசிலாந்து வென்றுள்ளன. ஒரு போட்டி டையில் முடிந்துள்ளது. 3 ஆட்டம் கைவிடப்பட்டுள்ளது. உலக கோப்பையில் 9 முறை மோதியதில் 7-2 என பாகிஸ்தான் முன்னிலை வகிக்கிறது. அகமதாபாத்தில் நாளை மதியம் 2 மணிக்கு தொடங்கி நடக்கும் மற்றொரு போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து-ஆஸ்திரேலியா மோதுகிறது. முதல் 2 போட்டியில் தோற்ற ஆஸ்திரேலியா கடைசி 4 போட்டியில் வென்றுள்ளன. நாளை வெற்றிபெற்றால் அடுத்ததாக ஆப்கன், வங்கதேசத்துடன் தான் மோத வேண்டி உள்ளது. இதனால் அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.
இதனிடையே மேக்ஸ்வெல் காயத்தாலும், மிட்செல் மார்ஷ் சொந்த காரணங்களுக்காக நாடு திரும்பியதாலும் நாளைய போட்டியில்ஆடவில்லை. மறுபுறம் இங்கிலாந்து 5 தோல்வியுடன் அரையிறுதி வாய்ப்பை இழந்துவிட்ட நிலையில் மீதமுள்ள 3 போட்டியிலும் வென்று பட்டியலில் 7வது இடத்திற்குள் நுழைந்தால்தான் 2025ல் பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன் டிராபி தகுதிபெற முடியும். இதனால் தோல்வியில் இருந்து மீண்டு வெற்றிபாதைக்கு திரும்ப போராடும். இரு அணிகளும் இதுவரை 155 முறை மோதி உள்ளன. இதில் 87 ஆஸி, 63ல் இங்கிலாந்து வென்றுள்ளது. 2 போட்டி டையில் முடிந்துள்ளது. 3 கைவிடப்பட்டுள்ளது. உலக கோப்பையில் 9 முறை மோதியதில் 6-3 என ஆஸி. முன்னிலையில் உள்ளது.