துபாய்: 9வது சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கிளைமாக்ஸ் நெருங்கிவிட்டது. நாளை மறுநாள் துபாயில் நடைபெறும் இறுதி போட்டியில் இந்தியா-நியூசிலாந்து மோதுகின்றன. 2000வது ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி பைனலில் இரு அணிகளும் மோதிய போட்டியில், நியூசிலாந்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தற்போது 25 ஆண்டுகளுக்கு பின் இரு அணிகளும் மீண்டும் பைனலில் மோத உள்ள நிலையில் அதற்கு இந்தியா பழிதீர்க்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நாக் அவுட் போட்டிகளில் நியூசிலாந்திடம் இந்தியா தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்து வருகிறது. கடந்த 37 ஆண்டுகளில் இந்தியா ஐசிசி தொடரில் நாக்அவுட் போட்டியில் ஒரே ஒரு அரையிறுதி போட்டியில் (2023 உலக கோப்பை) மட்டுமே வென்றுள்ளது.
அதன் பின்னர் நியூசிலாந்து அணியை இந்திய அணியால் எந்த ஒரு தொடரின் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டியில் வீழ்த்த முடியாமலே இருந்து வருகிறது. 2019 உலக கோப்பை அரையிறுதி, 2021ம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து இந்தியாவை வென்றது. மறுபுறம் நியூசிலாந்துக்கு இறுதி போட்டிகளில் தோல்வி தொடர் கதையாக உள்ளது. 2009 சாம்பியன்ஸ் டிராபி, 2015ல் உலக கோப்பை பைனல், 2021ல் டி20 உலக கோப்பை பைனலில் ஆஸி.யிடம் தோல்வி அடைந்துள்ளது. இருப்பினும் இந்தியாவுக்கு எதிராக நாக்அவுட் போட்டிகளில் அந்த அணி சிறப்பாக செயல்பட்டுள்ளது. இதனால் இந்தியாவுக்கு தலைவலியாக உள்ள நியூசிலாந்தை இந்த முறை வட்டியும் முதலுமாக இந்தியா பழிதீர்க்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அரையிறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் வெற்றிக்கு பின் 2 நாள் ஓய்வில் இருந்த இந்திய அணியினர் இன்று பயிற்சியை தொடங்கினர். கவுதம் கம்பீர் மேற்பார்வையில் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டனர். இதனிடையே இறுதி போட்டி டையில் முடிந்தால் யார் சாம்பியன் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அவ்வாறு போட்டி டையில் முடிந்தால் சூப்பர் ஓவர் பயன்படுத்தப்படும். மழையால் போட்டி பாதிக்கப்பட்டால் ரிசர்வ் டே உள்ளது. அடுத்த நாளில் ஆட்டம் தொடர்ந்து நடைபெறும். ஆனால் அன்றைய தினமும் மழை வந்தால் இரு அணிகளும் கூட்டு சாம்பியனாக அறிவிக்கப்படும். இல்லையெனில் குறைந்தபட்சம் சேசிங் அணி 20 ஓவர் பேட் செய்திருந்தால் ரன்ரேட் அடிப்படையில் வெற்றி அணி தீர்மானிக்கப்படும். ஆனால் துபாயில் வரும் ஞாயிற்றுக்கிழமை மழைக்கு வாய்ப்பு இல்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் போட்டிக்கு எந்த பாதிப்பும் இருக்காது.