Wednesday, February 21, 2024
Home » களைகட்டும் புத்தாண்டு கொண்டாட்டம் பாதுகாப்பு பணியில் 3 ஆயிரம் போலீசார் குவிப்பு: தாம்பரம் காவல் ஆணையரகம் தகவல்

களைகட்டும் புத்தாண்டு கொண்டாட்டம் பாதுகாப்பு பணியில் 3 ஆயிரம் போலீசார் குவிப்பு: தாம்பரம் காவல் ஆணையரகம் தகவல்

by Arun Kumar

தாம்பரம்: தாம்பரம் மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில், பொதுமக்கள் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் புத்தாண்டை கொண்டாடுவதற்கு 3,000 காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் மூலம் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தாம்பரம் மாநகர காவல் ஆணையரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தாம்பரம் மாநகர காவல் ஆணையரகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது :- தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் 2024ம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டம் எவ்வித அசம்பாவிதமும் நடக்காமல் மகிழ்ச்சியுடன் அமைவதற்கு தாம்பரம் மாநகர காவல்துறை சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

முக்கியமாக புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக வழிபாட்டுத் தலங்கள், கடற்கரைகள், மற்றும் கேளிக்கை விடுதிகள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேற்படி உயர் அதிகாரிகள் அறிவுரை மற்றும் ஆலோசனைப்படி துணை ஆணையர்கள் மற்றும் உதவி ஆணையர்கள் தலைமையில் அனைத்து காவல் நிலையங்களிலும் உள்ள காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள், ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை, காவல் ஆளிநர்கள் என மொத்தம் 3,000 பேர் பாதுகாப்பு பணியல் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் காவல் துறையினருக்கு உதவியாக சுமார் 160 ஊர்க்காவல் படையினரும் புத்தாண்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு இன்று இரவு 9 மணியிலிருந்து முக்கியமான சாலைகளான இசிஆர் சாலை, ஓஎம்ஆர் சாலை, வண்டலூர் – கேளம்பாக்கம் சாலை, மேடவாக்கம் – வேளச்சேரி பிராதான சாலை, 200 அடி ரேடியல் சாலை, ஜிஎஸ்டி சாலை, மதுரவாயல் புறவழிச்சாலை, வண்டலூர் வெளிவட்டச் சாலை மற்றும் மணிமங்கலம் ரோடு ஆகிய சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு அதிவேகமாக செல்வோர்களையும், பொதுமக்களுக்கு இடையூறாகவும், சட்டம் மற்றும் ஒழுங்கிற்கு பாதகம் ஏற்படுத்துவோர்களையும் தடுக்க மொத்தம் 150 இடங்களில் வாகன தணிக்கை குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் 20 சாலை பாதுகாப்பு குழுக்கள் இருசக்கர வாகனத்தில் ரோந்து சென்று பொதுமக்களுக்கு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வேண்டிய உதவிகளை மேற்கொள்வார்கள்.

மேலும் புத்தாண்டு கொண்டாடத்திற்கு அனுமதி பெற்ற கேளிக்கை விடுதிகள் மற்றும் ஓட்டல்களில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது கடைபிடிக்க வேண்டிய நன்னடத்தை விதிகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. பட்டாசு வெடிப்பது, நீச்சல் குளத்தில் குளிப்பது மற்றும் போதை வஸ்த்துக்களை பயன்படுத்துவது முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. இசிஆர், ஓஎம்ஆர், மதுரவாயல் பைபாஸ் சாலை, ஜிஎஸ்டி சாலை மற்றும் வண்டலூர் வெளிவட்ட சாலை போன்ற பகுதிகளில் பைக் மற்றும் ஆட்டோ வாகன பந்தயம் தடுப்பு நடவடிக்கையாக 12 கண்காணிப்பு சோதனை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் உள்ள 300 முக்கிய வழிபாட்டுதலங்களுக்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, இன்று மாலை முதல் நாளை வரை பொதுமக்கள் கடல் நீரில் இறங்கவோ, குளிக்கவோ அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால், கோவளம், முட்டுக்காடு, பனையூர், நைனார் குப்பம், உத்தண்டி உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் காவல் ஆளிநர்கள் மூலம் கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மணல் பகுதியிலும் தற்காலிக தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பலப்படுத்தப்படும். மேலும் குற்றத் தடுப்பு நடவடிக்கைககள் மேற்கொள்ளப்படும். கடற்கரை ஒட்டிய பகுதிகளில் தமிழ்நாடு காவல் துறை, கடலோர பாதுகாப்பு குழுமம் மற்றும் மீனவர்களுடன் இணைந்து தகுந்த பாதுகாப்பு நடவடிக்கையும், எச்சரிக்கை பதாகைகளும் பொருத்தப்பட்டு கடலில் மூழ்கி உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், அவசர மருத்துவ உதவிக்கு முக்கிய இடங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவு கூடும் இடங்களின் அருகில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் மருத்துவ குழுவினருடன் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்படும். குற்றத் தடுப்பு நடவடிக்கை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுத்தல் ஆகிய பணிகளுக்கு, தற்காலிக கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டும். பொது இடங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் உட்பட அனைத்து இடங்களிலும் பட்டாசுகள் வெடிக்க தடை செய்யப்பட்டுள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடத்துவதற்கும், ஒலி பெருக்கிகள் பயன்படுத்துவதற்கும் காவல்துறை மற்றும் இதர துறைகளில் அனுமதி பெற்ற பின்னரே நிகழ்ச்சி நடத்த வேண்டும்.

மீறுவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. தாம்பரம் மாநகர காவல் துறையினர், அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்து பொதுமக்கள் புத்தாண்டை சிறப்பாகவும், மற்றவர்களுக்கு சிரமமின்றியும், எவ்வித அசம்பாவிதமும் நிகழாமல் மகிழ்ச்சியுடன் கொண்டாட அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. மேலும், தாம்பரம் மாநகர காவல் துறையின் அறிவுரைகளை கடைபிடித்து புத்தாண்டை கொண்டாடுமாறு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

5 × 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi