Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

நியூசியுடன் முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து அதிரடி ரன் குவிப்பு: ஹேரி புரூக் மிரட்டல் சதம்

கிறிஸ்ட்சர்ச்: நியூசிலாந்து சுற்றுப்பயணம் சென்றுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 319 ரன் எடுத்துள்ளது. அந்த அணியின் ஹேரி புரூக் அவுட்டாகாமல் 132 ரன்னுடன் களத்தில் உள்ளார். நியூசிலாந்து நாட்டுக்கு பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் சென்றுள்ளது. அங்கு, நியூசி அணியுடன் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து பங்கேற்கிறது.

நேற்று முன்தினம் துவங்கிய முதல் டெஸ்டின் முதல் நாளில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ், பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய நியூசி துவக்க வீரரும் கேப்டனுமான டாம் லாதம் சிறப்பாக ஆடி 47 ரன் குவித்தார். மற்றொரு துவக்க வீரர் டெவோன் கான்வே 2 ரன்னில் ஆட்டமிழந்தார். 3வது வீரராக களம் புகுந்த கேன் வில்லியம்சன் பொறுப்புடன் ஆடி 93 ரன் குவித்தார். கடைசியில் நியூசி அணி 8 விக்கெட் இழப்புக்கு 319 ரன் குவித்தது.

நேற்று 2ம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த நியூசி, 29 ரன் சேர்த்து மேலும் 2 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இதையடுத்து நியூசி ஸ்கோர் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 348 ஆக இருந்தது. பின், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சை துவக்கியது. துவக்க வீரர் ஜாக் கிராவ்லி 12 பந்துகளை சந்தித்து பூஜ்யத்தில் வீழ்ந்தார். 3 விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஜேகப் பெத்தெல் 10 ரன்னிலும், பின் வந்த ஜோ ரூட் பூஜ்யத்திலும் வீழ்ந்தனர்.

மற்றொரு துவக்க வீரராக களமிறங்கிய பென் டக்கெட்டும், ஹேரி புரூக்கும் நிதானமாகவும் பொறுப்புடனும் ஆடி அணியின் ஸ்கோரை மளமளவென உயரச் செய்தனர். பென் 46 ரன்னில், ஓரூர்க்கியின்பந்தில் கான்வேயிடம் கேட்ச் தந்து அவுட்டானார். பின் வந்த ஒல்லி போப் 77 ரன் சேர்த்தார். இங்கிலாந்து அணி, 74 ஓவர் முடிவில், 5 விக்கெட் இழப்புக்கு 319 ரன் குவித்து வலுவான நிலையில் உள்ளது. ஹேரி புரூக் 163 பந்துகளை எதிர்கொண்டு, 2 சிக்சர், 10 பவுண்டரிகள் விளாசி, அவுட்டாகாமல் 132 ரன்னுடன் களத்தில் உள்ளார்.

கேப்டன் பென் ஸ்டோக்ஸ் அவுட் ஆகாமல் 37 ரன் எடுத்துள்ளார். நியூசிலாந்தின் நாதன் ஸ்மித் 2, டிம் சவுத்தீ, மேட் ஹென்றி, வில் ஓரூர்க்கி தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தனர். தற்போது, நியூசி அணியை விட, இங்கிலாந்து 29 ரன்கள் பின் தங்கி உள்ளது. இருப்பினும், 5 விக்கெட்டுகள் மீதமுள்ளதால் 3ம் நாளான இன்று பெரியளவில் ரன்களை இங்கி வீரர்கள் குவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

* 150வது டெஸ்டில் ஜோ ரூட் டக்அவுட்

இங்கிலாந்து நட்சத்திர பேட்ஸ்மேன் ஜோ ரூட்டுக்கு, நியூசியுடனான நேற்றைய போட்டி, 150வது டெஸ்ட். இந்த போட்டியில் சிறப்பாக ஆடி ரன் குவிப்பில் சாதனை படைப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், 4 பந்துகளை தடுமாற்றத்துடன் எதிர்கொண்ட ஜோ ரூட் ரன் எடுக்காமல் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். இதற்கு முன், 150வது போட்டியில் டக் அவுட்டான ஆஸி முன்னாள் கேப்டன் ரிக்கி பான்டிங், மற்றொரு ஆஸி வீரர் ஸ்டீவ் வாக் உடன் இந்த பட்டியலில் தற்போது ஜோ ரூட்டும் இணைந்துள்ளார்.