SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழ்நாடு நகர எரிவாயு விநியோக கொள்கை-2023 அரசின் பல்வேறு திட்டம் மற்றும் கொள்கைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்

2023-03-19@ 00:14:53

சென்னை: தமிழ்நாடு நகர எரிவாயு விநியோக கொள்கை-2023 உள்ளிட்ட, பல்வேறு அரசு திட்டங்கள் மற்றும் கொள்கைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். சென்னை தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள ‘தமிழ்நாடு எத்தனால் கொள்கை-2023’, ‘தமிழ்நாடு நகர எரிவாயு விநியோகக் கொள்கை 2023”, “தமிழ்நாடு சரக்கு போக்குவரத்துக் கொள்கை மற்றும் ஒருங்கிணைந்த சரக்கு போக்குவரத்துத் திட்டம் 2023” மற்றும் “தமிழ்நாடு தொழில் நுட்ப ஜவுளி, மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களிலிருந்து செயற்கை இழை நூல், மற்றும் செயற்கை இழை துணி மற்றும் ஆடை தயாரிப்புகளுக்கான சிறப்புத் திட்டம்” ஆகியவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (மார்ச் 18ம் தேதி) வெளியிட்டார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் நிர்ணயித்துள்ள, தமிழ்நாட்டினை 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார வளர்ச்சி என்ற இலக்கினை 2030ம் ஆண்டிற்குள் அடைந்திட பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அரசு பொறுப்பேற்றது முதல் இதுவரை 209 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ₹2.34 லட்சம் கோடிக்கான முதலீடு ஈர்க்கப்பட்டு, 3,49,261 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது (இன்று) பல்வேறு கொள்கைகள் மற்றும் திட்டங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு எத்தனால் கொள்கை 2023

தமிழ்நாட்டை பசுமை பொருளாதாரம் மற்றும் குறைந்த செலவில் மாற்று பசுமை எரிபொருளுக்கான முதலீட்டு மையமாக மேம்படுத்துதல் இக்கொள்கையின் நோக்கமாகும். எத்தனால் கலந்த பெட்ரோலை ஊக்குவிப்பதற்கான காரணிகள் உபரி பருவத்தில், சர்க்கரை ஆலைகளின் செயல்திறனில் மறுமலர்ச்சி எற்பட்டு இதனால் சர்க்கரை ஆலைகளின் பணப்புழக்கம் அதிகரிக்கும். எனவே, விவசாயிகளுக்கு தரப்படவேண்டிய விளைபொருள் கொள்முதலுக்கான நிலுவைத் தொகை தாமதமின்றி, வழங்கிட இயலும். வடிப்பாலை கரையக்கூடிய உலர் தானிய பொருட்கள் ஆகியன கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படும், எரிபொருள் இறக்குமதியில் வெளிநாடுகளை சார்ந்து இருத்தல் குறையும். இக்கொள்கை ஐந்து ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும். \

நகர எரிவாயு விநியோகக் கொள்கை 2023

தொழிற்சாலைகளுக்கும், வாகன பயன்பாட்டிற்கும், 2.30 கோடி வீடுகளுக்கும் குழாயின் மூலம் இயற்கை எரிவாயு வழங்க இக்கொள்கை மூலம் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், இதன்மூலம் சுமார் ₹35,000 கோடி முதலீடு 8 ஆண்டுகள் கால அளவில் ஈர்க்கப்படும். நகர எரிவாயு விநியோகத்திற்கான உட்கட்டமைப்பை விரைவாகச் செயல்படுத்துவதை உறுதி செய்தல், விரைவான அனுமதிகளை வழங்குதல், இயற்கை எரிவாயு பயன்பாட்டைப் படிப்படியாக ஊக்குவிக்க தேவையான விதிகள், ஒழுங்குமுறைகளை உருவாக்குதல், பாதுகாப்பான மற்றும் தடையில்லா இயற்கை எரிவாயுவினை விநியோகிக்க தேவையான உட்கட்டமைப்பை நகர எரிவாயு விநியோக நிறுவனங்கள் பராமரிக்க வலியுறுத்துதல், மீன்பிடிக் கப்பல்கள் மற்றும் தொலைத்தொடர்பு துறையில் திரவ இயற்கை எரிவாயுவை எரிபொருளாக ஏற்றுக்கொள்ள ஊக்குவித்தல் ஆகியவை இக்கொள்கையின் நோக்கமாகும்.

சரக்கு போக்குவரத்து கொள்கை மற்றும் ஒருங்கிணைந்த சரக்கு போக்குவரத்துத் திட்டம் 2023

சரக்கு போக்குவரத்து துறையில் புதிய தொழில் நுட்ப உத்திகளை செயற்படுத்துதல், திறன் மேம்படுத்துதல், நிலைப்பு தன்மையை உறுதி செய்தல் ஆகியவற்றிற்கு ஊக்கமளிக்கப்படும். சரக்கு போக்குவரத்து செயல் திட்டம் மூலம் மூன்று பெருவழி தடங்களில் மட்டுமே, 50 செயல்திட்டங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் அடுத்த பத்தாண்டுகளில் ₹63,000 கோடி அளவிற்கு செயல் திட்டங்களும், 1.6 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பும் ஏற்படுத்தப்படும்.

தமிழ்நாடு தொழில்நுட்ப ஜவுளி, மறுசுழற்சி பொருட்களிலிருந்து செயற்கை இழை  

புதிய தலைமுறை ஜவுளி பிரிவுகள் (தொழில் நுட்ப ஜவுளி, செயற்கை இழை நூல்) மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களிலிருந்து செயற்கை இழை நூல் மூலம் சுழற்சிப் பொருளாதாரத்தை ஊக்குவித்தல், ஆடை உற்பத்தியில் பெரும் வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், குறிப்பாக பெண்களுக்கு அதிக அளவிலான வேலைவாய்ப்புகள் வழங்குதல், பெரிய திட்டங்களுக்கு சற்றே குறைவாக உள்ள முதலீடுகளுக்கும் அதிக அளவிலான ஊக்கத் தொகை வழங்குதல், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டினை ஊக்குவித்து, இத்துறையை பல்வகைப்படுத்துதல், மாநிலம் முழுவதும், முக்கியமாக தொழில்ரீதியாக வகை செய்யப்பட்டுள்ள ‘பி’ மற்றும் ‘சி’ வகை மாவட்டங்களில் சமச்சீரான தொழில் மேம்பாடு ஆகியவை குறித்து விளக்குகிறது. இந்த நிகழ்ச்சியில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் இறையன்பு, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணன், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஜெய முரளிதரன், தொழில் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • freddie-cyclone

    மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!!

  • patrick-day-1

    அயர்லாந்தில் புனித பாட்ரிக் தினத்தை ஆடல், பாடலுடன் கொண்டாடிய மக்களின் புகைப்படங்கள்..!!

  • france-123

    பிரான்ஸில் ஓய்வூதிய சீர்திருத்தத் திட்டத்திற்கான போராட்டத்தில் வன்முறை: சாலைகளில் வாகனங்களை தீயிட்டு கொளுத்தியதால் பதற்றம்..!!

  • sydney-world-record

    புதிய உலக சாதனை: சிட்னியில் 40 மணி நேரத்திற்கு மேல் அலைச்சறுக்கு செய்து வீரர் அசத்தல்

  • padmavathi-kumbabhishekam-17

    சென்னை பத்மாவதி தாயார் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்.. .சாரல் மழையில் கண் குளிர தரிசனம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்