நிதியாண்டு முடிவதால் சொத்து வரி வசூலை தீவிரப்படுத்த மாநகராட்சி முடிவு: வரி செலுத்தாத 5 லட்சம் பேரிடம் வசூல் செய்ய அதிரடி நடவடிக்கை
2023-03-19@ 00:14:51

சென்னை: நிதியாண்டு முடிவதால் சொத்து வரி வசூலை தீவிரப்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. எனவே, வரி செலுத்தாத 5 லட்சம் பேரிடம் வசூல் செய்ய அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி ஒரு வார்டுக்கு தினமும் 100 பில்கள் என இலக்கு நிர்ணயம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாநகராட்சியாக ெசன்னை மாநகராட்சி திகழ்கிறது. கோடிக்கணக்கான மக்கள் வசிக்கும் சென்னை மாநகராட்சியில் பல ஆயிரம் கட்டிடங்கள், வீடுகள் உள்ளன. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மட்டும் சுமார் 13 லட்சத்து 31 ஆயிரம் சொத்து உரிமையாளர்கள் உள்ளனர். சென்னை மாநகராட்சிக்கு முக்கிய வருவாய் இனமாக சொத்து வரிதான் இருக்கிறது. மாநகரின் பல்வேறு கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும், பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு மாதம்தோறும் ஊதியம், ஓய்வு பெற்றோருக்கு ஓய்வூதியம் வழங்குவதில் சொத்து வரி வருவாய் முக்கியமானதாக உள்ளது. இந்த சூழ்நிலையில், திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக பருவமழை காலத்தில் மழைநீர் தேங்காமல் இருக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தையும் பொதுமக்கள் பாராட்டியிருந்தனர்.
இதுதவிர பல்வேறு திட்டங்களை சென்னை மாநகராட்சி செயல்படுத்தி வருவதற்கு, பொதுமக்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது. இதுபோன்ற மக்கள் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்களைச் சென்னை மாநகராட்சி செயல்படுத்தி வரும் அதேநேரம், வருவாயை அதிகரிக்கவும் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வருவாய் இருந்தால் திட்ட பணிகளை வேகமாக முடிக்க முடியும் என்பதால் இதில் அதிக கவனம் செலுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. குறிப்பாக, வரி பாக்கியை முறையாகச் செலுத்தாமல் இருக்கும் நபர்களிடம் இருந்து வரியைப் பெறும் நடவடிக்கைகளிலும் சென்னை மாநகராட்சி தீவிரமாக இறங்கியுள்ளது. பெருந்தொகையைக் கட்டாமல் வரி பாக்கி வைத்துள்ளவர்களை கண்டறிந்து, அவர்களிடம் இருந்து வரி வசூல் செய்யும் நடவடிக்கையில் மாநகராட்சி இறங்கியுள்ளது. சென்னையில் உள்ள 13.31 லட்சம் சொத்து உரிமையாளர்களிடமிருந்து அந்தந்த முதல் அரையாண்டின் வரியை ஏப்ரல் 15ம் தேதிக்குள்ளும், 2ம் அரையாண்டின் வரியை அக்டோபர் 15க்குள்ளும் முழுமையாக வசூலிக்க வேண்டும் என்று வருவாய் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வரி செலுத்தாதவர் மீது சென்னை மாநகராட்சி சட்ட பிரிவின் படி நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
தற்போதுள்ள கட்டிடங்களில் கூடுதலாக கட்டினாலும், அதில் மாற்றங்கள் ஏற்படுத்தினாலும், கட்டிடத்தின் குடியிருப்புத் தன்மை மற்றும் உபயோகத் தன்மை மாறினாலும் சென்னை மாநகராட்சிக்கு 15 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என்ற உத்தரவு உள்ளது. சென்னை மாநகராட்சி சொத்து உரிமையாளர்களிடம் இருந்து ஒவ்வொரு அரையாண்டுக்கும் தலா ₹750 கோடி என ₹1,500 கோடி வரை வசூலிக்க இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இதற்காக சொத்து வரியை ஒவ்வொரு அரையாண்டின் முதல் 15 நாட்களுக்குள் செலுத்துவோருக்கு, 5 சதவீதம் அல்லது 5,000 ரூபாய் வரை ஊக்கத்தொகை வழங்குகிறது. ஆனால் அவகாசம் அளிக்கப்பட்ட நாட்களுக்கு பின் சொத்து வரி செலுத்துவோருக்கு, இரண்டு சதவீத தனி வட்டி விதிக்கப்படுகிறது. பெரும்பாலான சொத்து உரிமையாளர்கள், மாநகராட்சிக்கு சொத்து வரி செலுத்தாமல் காலம் தாழ்த்தி வருகிறார்கள். இதனால் சொத்து வரி செலுத்தாதோர் குறித்த பட்டியலை, சென்னை மாநகராட்சி இணையதளத்தில் வெளியிட்டு வந்தது. இதில் பலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில் இந்த நிதியாண்டு நிறைவு பெற இன்னும் 15 நாட்களே உள்ள காரணத்தால் சொத்து வசூலை தீவிரப்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்திருக்கிறது. இதற்கான ஆய்வு கூட்டம் கடந்த 2 நாட்களுக்கு முன்பு, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் நடைபெற்றது. இதில், மாநகர வருவாய் அலுவலர்கள், உதவி வருவாய் அலுவலர்கள், வரி வசூலிப்பவர்கள், வரி கணக்கீட்டாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் சென்னை மாநகராட்சியில் இந்தாண்டு ₹1500 கோடி சொத்து வரி விரைவாக வசூலிக்க வேண்டும் என்று உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதனால் சொத்து வரி வசூல் நடவடிக்கை இன்னும் தீவிரமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து, சென்ைன மாநகராட்சி உயர் அதிகாரிகள் கூறியதாவது: சென்னை மாநகராட்சியில் மொத்தம் உள்ள 13.31 லட்சம் சொத்து உரிமையாளர்களில், 8.50 லட்சம் பேர் இதுவரை வரி செலுத்தி உள்ளனர். இதுவரை மொத்தம் வசூலாக வேண்டிய ₹1500 கோடியில் தற்போது வரை ₹1380 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. இன்னும் 5 லட்சம் பேர் வரி செலுத்தவில்லை. சென்னைக்கு சொத்து வரி வருவாய் மிகவும் முக்கியமானது. தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் சொத்து வரி வசூலில் சென்னை முதலிடம் பிடிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டு நிறைவு பெற இன்னும் 15க்கும் குறைவான நாட்களே உள்ள நிலையில், தீவிரமாக சொத்து வரி வசூல் செய்யும் பணிகளை இன்னும் வேகப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரு வார்டுக்கு தினசரி 100 பில்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த இலக்கை அனைத்து வரி வசூலிப்பவர்களும் அடைய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும் செய்திகள்
நிதிநிலை அறிக்கையில் ஊக்குவிக்கும் திட்டங்கள் தமிழ்நாட்டில் வேளாண்மை தொழில் புத்தாக்கம் பெறும்: தலைவர்கள் வரவேற்பு
ரூ.2.13 கோடி செலவில் புதுப்பொலிவு பெறும் ராயபுரம் மாடிப்பூங்கா: விரைவில் திறக்க ஏற்பாடு
விம்ஸ் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைக்கு சர்வதேச தரச்சான்று
கிண்டி மேம்பாலத்தில் விபத்து லாரியிலிருந்து டீசல் கசிந்து சாலையில் வழிந்தோடியது
மழை காரணமாக புழல் ஏரிக்கு நீர் வரத்து அதிகரிப்பு
போரூர் ஏரியில் ஆண் சடலம் மீட்பு: போலீசார் விசாரணை
சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு
ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!
ஈக்குவடார், பெருவில் சக்தி வாய்ந்த பூகம்பம் : 15 பேர் பலி
மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!!
அயர்லாந்தில் புனித பாட்ரிக் தினத்தை ஆடல், பாடலுடன் கொண்டாடிய மக்களின் புகைப்படங்கள்..!!