வேட்பாளருக்கு ஆதரவு மட்டும் தான்; அதிமுக பிரசாரத்தை புறக்கணிக்கும் பாஜக?.. தேர்தல் குழு எங்கே என தேடும் அதிமுக நிர்வாகிகள்
2023-02-09@ 18:10:13

சென்னை: அதிமுகவின் தேர்தல் பிரசாரத்தை பாஜ நிர்வாகிகள் புறக்கணித்து வருகின்றனர். இது ஈரோடு இடைத்தேர்தலில் எதிரொலிக்கும் என்று கூறப்படுகிறது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக சார்பாக கே.எஸ்.தென்னரசு போட்டியிடுகிறார். இவருக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு நிறுத்திய வேட்பாளர் செந்தில் முருகன் வாபஸ் வாங்கிய நிலையில், எடப்பாடி தரப்பு மட்டும் வேட்பாளரை இரட்டை இலை சின்னத்தில் நிறுத்துகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27-ந் தேதி நடைபெற உள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சி, தேமுதிக வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதியில் பெரும் குழப்பங்களுக்கு இடையே அதிமுகவின் வேட்பாளராக தென்னரசு களமிறங்கி உள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலை முன்வைத்து அதிமுக ஓபிஎஸ், அதிமுக இபிஎஸ், பாஜக ஆகிய மூன்றும் பல்வேறு ஆட்டங்களை விளையாடின. அதிமுகவின் இரு அணிகளும் போட்டி போட்டுக் கொண்டு பாஜக ஆதரவுக்காக தவம் கிடந்தன.
பின்னர் ஒரு கட்டத்தில் பாஜகவை அதிமுக எடப்பாடி பழனிச்சாமி அணி கழற்றிவிட்டது. ஆனாலும் பாஜகவை விடாப்பிடியாக ஓபிஎஸ் அணி தொங்கி நின்றது. பின்னர் உச்சநீதிமன்றம் வரைக்கும் இந்த விவகாரமும் போனது. அப்போது அதிமுகவின் இரு அணிகளும் ஒன்றாக இணைய வேண்டும் என்ற பல்லவியை பாஜக பாடியது. உச்சநீதிமன்ற தலையீட்டுக்குப் பின்னர், வேட்பாளரை அதிமுக ஓபிஎஸ் அணி வாபஸ் பெற்றது. தற்போது எடப்பாடி பழனிச்சாமி அணியின் கை ஓங்கிய நிலையில் இருக்கிறது. அதிமுகவின் ஒருங்கிணைந்த வேட்பாளராக தென்னரசு இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார்.
இதை தொடர்ந்து தங்களது தேர்தல் பிரச்சாரத்தை அதிமுக தொடங்கியுள்ளது. எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மூத்த தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அதிமுக கூட்டணி கட்சிகளான தமாகா உள்ளிட்ட கட்சிகளும் ஆதரவு தெரிவித்து பிரச்சாரத்தில் கலந்து கொண்டு வருகின்றன. ஆனால் கூட்டணிக்கு நாங்கள் தான் தலைமை வகிப்போம் என கூறி அதிமுக உள்கட்சி விவகாரத்தில் பஞ்சாயத்தில் ஈடுபட்ட பாஜக இன்னும் அதிமுக வேட்பாளரின் தேர்தல் பிரச்சாரம் பக்கம் கூட எட்டிப்பார்க்கவில்லை என்ற தகவல் தேர்தல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இரட்டை இலை சின்னத்தை முடக்க நான் காரணமாக இருக்கமாட்டேன் என்று கூறி வந்த ஓ.பன்னீர்செல்வம் தனது வேட்பாளரை வாபஸ் பெற வைத்துவிட்டார். ஆனாலும் பிரச்சாரத்துக்கு அவருக்கு எடப்பாடி பழனிச்சாமி தரப்பு அழைப்பு விடுக்கவில்லை. இதனால் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் வரப்போவதில்லை. அதேநேரம் முக்கிய கூட்டணி கட்சியான பாஜக நிர்வாகிகள் யாரும் அதிமுக வேட்பாளரை ஆதரித்து எந்தவிதமான பிரச்சாரத்தையும் தொடங்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் அதிமுக வேட்பாளர் தென்னரசுவின் பிரச்சாரத்தில் கூட பாஜக கொடிகளை காணவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இடைத்தேர்தல் தேதி அறிவித்த உடனே கூட்டணியில் யாரையும் எதிர்பார்க்காமல் 14 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை பாஜ தலைவர் அண்ணாமலை அறிவித்தார். இதனால் பாஜக போட்டியிடப்போகிறதோ என்ற பரபரப்பு எழுந்தது. ஆனால் தற்போது அதிமுக வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அந்த குழுவில் இருந்த பட்டியல் அணி பொதுச் செயலாளர் விநாயகமூர்த்தி திமுகவில் இணைந்து அக்கட்சியினருக்கு அதிர்ச்சியை தந்தார். மேலும், நேற்று ஈரோட்டில் நடைபெற்ற அதிமுக கூட்டணி கட்சி கூட்டத்தில் பாஜ எம்எல்ஏ சரஸ்வதி மட்டும் தன்னந்தனியாக வந்து கலந்து கொண்டார்.
அவருடன் வேறு நிர்வாகிகள் யாரும் வரவில்லை. அவர் எடப்பாடி பழனிச்சாமியிடம் பேசிவிட்டு சென்று விட்டாராம். இதுதவிர பாஜ தலைவர் அண்ணாமலையோ மற்றும் மாநில முக்கிய நிர்வாகிகளோ, மூத்த தலைவர்களோ யாரும் பிரச்சாரத்துக்கு செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவனுக்கு ஆதரவு தெரிவித்த மநீம கூட அங்கு தங்களது சார்பில் நிர்வாகிகளை நியமித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அதிமுக கூட்டணியில் முக்கிய கட்சியான பாஜக தங்களது சார்பில் யாரும் பிரச்சாரத்துக்கும் அனுப்பிவைக்கவில்லை, தனியாகவும் பிரச்சாரத்தை தொடங்கவில்லை என்பது அதிமுகவினர் மத்தியில் கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது.
இதனால் எடப்பாடி பழனிச்சாமியை தமிழக பாஜ ஒட்டுமொத்தமாக புறக்கணித்துள்ளது தெரியவந்துள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தல், நாடாளுமன்ற தேர்தல்களில் எடப்பாடி பழனிச்சாமி தன்னை ஒரு மாஸ் தலைவராக காட்டிக் கொண்டு தான் சொன்ன சீட்களை மட்டுமே வாங்கி கொண்டு நிற்கவேண்டும் என்று நிர்ப்பந்தம் செய்தார். அதனால் இந்த முறை எதிர்க்கட்சியாக அதிமுக உள்ளது. திமுக கூட்டணிக்கு மக்களிடம் நல்ல பெயர் உள்ளது. அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் என்று பல்வேறு தரப்பினரும் களம் இறங்கியுள்ளனர்.
அதிமுக இன்றுதான் வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தையே நடத்துகிறது. இந்தநிலையில் பாஜக எந்த வகையிலும் அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரத்தை இன்று வரை செய்யவில்லை. இந்தநிலையில் பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆன்லைன் மீட்டிங்கில் பேசிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதில் அதிமுகவுக்கு பாடம் புகட்ட வேண்டும். அப்போதுதான் சட்டப்பேரவை தேர்தலில் நமக்கு உரிய மரியாதை கிடைக்கும். கேட்கும் சீட்டுகளும் கிடைக்கும். நாம் சொன்னபடி கேட்காமல், எந்த அணியையும் இணைக்காமல் தான் நினைத்ததுபோலத்தான் நடப்பேன் என்று எடப்பாடி செயல்படுகிறார்.
இதனால் அதிமுகவுக்கு பாடம் புகட்ட காங்கிரசுக்கு வாக்களிக்க வேண்டும் என்று பேசியுள்ளனர். இதுவும் அதிமுக நிர்வாகிகளை கடும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. தற்போது தேர்தல் நடப்பதால் அமைதியாக உள்ள அதிமுகவினர், தேர்தல் முடிந்து முடிவுகள் வெளியாகட்டும், அப்போது நாங்கள் யார் என்பதை பாஜகவுக்கு காட்டுகிறோம் என்று கூறி வருகின்றனர். ஆனால் பாஜக தொண்டர்களோ, எந்த பிரசாரத்துக்கும் செல்லாமல் சொந்த வேலைகளை தொடர்ந்து செய்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்
பெண்களுக்கான பொற்காலம் ...இலவச பேருந்து, மாதம் ரூ.1000 உரிமைத் தொகை, சிறப்பு புத்தொழில் இயக்கம் : பட்ஜெட்டில் அசத்தல்!!
செப்.15ல் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் தொடக்கம்... தமிழக பட்ஜெட்டில் A டூ Z அசத்தல் அறிவிப்புகள்!!
அண்ணாசாலையில் மேம்பாலம்.. தீவுத்திடலில் திறந்தவெளி தியேட்டர்..: தமிழக பட்ஜெட்டில் சென்னைக்கான அசத்தல் அறிவிப்புகள்!!
ஈரோட்டில் 'தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயம்' , மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.30,000 கோடி அளவில் வங்கிக்கடன் : தமிழக பட்ஜெட் 2023
தஞ்சையில் மாபெரும் சோழர் அருங்காட்சியகம்.. அனைத்து மாவட்டங்களிலும் புத்தக திருவிழா : தமிழக பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்புகள்!!
தமிழ்நாடு அரசின் 2023-24ம் நிதியாண்டிற்கான பொது பட்ஜெட் தாக்கல் : பட்ஜெட்டை புறக்கணித்து அதிமுகவினர் வெளிநடப்பு!!
பிரான்ஸில் ஓய்வூதிய சீர்திருத்தத் திட்டத்திற்கான போராட்டத்தில் வன்முறை: சாலைகளில் வாகனங்களை தீயிட்டு கொளுத்தியதால் பதற்றம்..!!
புதிய உலக சாதனை: சிட்னியில் 40 மணி நேரத்திற்கு மேல் அலைச்சறுக்கு செய்து வீரர் அசத்தல்
சென்னை பத்மாவதி தாயார் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்.. .சாரல் மழையில் கண் குளிர தரிசனம்..!!
தென்னாப்பிரிக்காவை தாக்கிய ஃப்ரெடி புயலால் உருக்குலைந்த மலாவி : பலி எண்ணிக்கை 326 ஆக அதிகரிப்பு!!
துபாயில், 700 அடி உயர கட்டடத்தின் மாடியில் ஹெலிபேட் மீது விமானத்தை தரையிறக்கி சாகசம்..!!