‘முதல்வரின் முகவரி’ என்ற புதிய துறை மூலம் வேலூர் மண்டலத்தில் 2.50 லட்சம் புகார் மனுக்களில் 85% தீர்வு: மக்களின் பல்வேறு மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை
2023-02-08@ 00:53:39

* சிறப்புச்செய்தி
வேலூர் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் ‘‘முதல்வரின் முகவரி’’ மூலம் பெறப்பட்ட நிலுவையில் இருந்த புகார் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிரடி உத்தரவிட்டதையடுத்து உடனடியாக தீர்வு காணப்பட்டது.
திமுக அரசு புதிதாக பொறுப்பேற்ற பிறகு ‘‘உங்கள் தொகுதியில் முதல்வர்’’ என்ற திட்டத்தின் கீழ் முதல்வரால் பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய துறைகளுக்கு நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டு தீர்வு காணப்படும் என தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, வருவாய் துறையின் மூலம் தனிநபர் கோரிக்கைகளான பட்டா, சமூகப்பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஓய்வூதியங்கள், ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் வீடு கட்ட மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, கூட்டுறவு மற்றும் உணவுத்துறை, மின்வாரியம், உள்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட துறையின் கீழ் பல்வேறு மனுக்கள் பெறப்பட்டன.
அந்தவகையில், கடந்த காலங்களை பொறுத்தவரை மனுக்கள் மீதான நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந்தநிலையில், ‘உங்கள் தொகுதியில் முதல்வர்’, ‘முதல்வரின் உதவி மையம்’, ‘முதல்வரின் தனிப்பிரிவு’ மற்றும் ‘ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மேலாண்மை’ அமைப்பு உள்ளிட்டவைகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து கடந்த 2021ம் ஆண்டு நவம்பரில் ‘‘முதல்வரின் முகவரி’’ என்று பெயர் வைக்கப்பட்டது. மேலும், இதற்கான சிறப்பு அலுவலராக ஷில்பா பிரபாகர் சதீஷ் நியமிக்கப்பட்டார்.
அதன்படி, தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து மனுக்கள் ‘‘முதல்வரின் முகவரி’’ மூலமாக பெறப்பட்டு வருகிறது. இதன் சிறப்பு அம்சமாக முதல்வரே தனது நேரடி கட்டுப்பாட்டில் வைத்திருப்பதால், அவ்வப்போது முதல்வர் தனிப்பிரிவு, முதல்வரின் உதவி மையம், தலைமைச்செயலகத்தில் பொதுமக்களிடம் நேரடியாகவே மனுக்களை பெறுவது போன்ற செயல்பாடுகளில் முதல்வரே ஈடுபடுவது பொதுமக்களுக்கு தங்களின் புகார் மீதான நடவடிக்கைக்கு உடனடி தீர்வுக்காணப்படும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது. குறிப்பாக, கடந்த காலங்களில் முதல்வரின் தனிப்பிரிவில் ஆண்டுக்கு 3 லட்சம் மனுக்கள் பெறப்பட்டு வந்தன.
தற்போது அனைத்து குறைதீர் தளங்களும் ஒருங்கிணைக்கப்பட்டதன் காரணமாக 15 லட்சத்திற்கும் அதிகமான மனுக்கள் பெறப்படுகின்றன. அந்தவகையில் நடப்பாண்டில் முதல்வரின் முகவரி திட்டத்தின் கீழ், இதுவரை பெறப்பட்ட 17.70 லட்சம் மனுக்களில், 16.28 லட்சத்திற்கும் மேலான மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன. அதன்படி, ‘‘முதல்வரின் முகவரி’’ மூலம் பெறப்படும் மனுக்கள் மீது எப்போதும் தனி கவனத்தை முதல்வர் செலுத்தி வருகிறார். அந்தவகையில், சமீபத்தில் ‘‘கள ஆய்வில் முதல்வர்’’ என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்து வேலூர் மண்டலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். குறிப்பாக, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசு திட்டங்கள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.
அதேபோல, ஆய்வின் போது, குடிநீர் மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், வருவாய்த்துறை வழங்கக்கூடிய சேவைகள், ஊரக மேம்பாடு, நகர்ப்புற வளர்ச்சி, சாலை மேம்பாடு, வாழ்வாதாரத்தை உயர்த்துதல், இளைஞர் திறன் மேம்பாடு, பொதுக்கட்டமைப்பு வசதிகள், கல்வி, மருத்துவம், குழந்தைகள் ஊட்டசத்து போன்ற முக்கிய துறைசார்ந்த திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் அவற்றின் பயன்கள் பொதுமக்களுக்கு முழுமையாக சென்றடைகிறாதா என்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு நடத்தினார். இதில் வேலூர் மண்டலத்தில், ‘‘முதல்வரின் முகவரி’’ மூலமாக பெறப்பட்ட மனுக்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த பின்னர், நிலுவையில் உள்ள மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து, ‘‘முதல்வரின் முகவரி’’ திட்டத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறியிருப்பதாவது: வேலூர் சுற்றுப்பயண கள ஆய்வில் முதல்வர் பொதுமக்களிடம் நேரடியாகவே, குறைகளை கேட்டறிந்தார். மேலும், முதல்வரின் முகவரி திட்டத்தை பொறுத்தவரையில் இதுவரை வேலூர் மண்டத்தில் அதாவது, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களை பொறுத்தவரை இதுவரை 2.50 லட்சத்திற்கு மேற்பட்ட புகார் மனுக்கள் பெறப்பட்டு அதில் 85 சதவீதம் வரை தீர்வுக்காணப்பட்டுள்ளது. 10 சதவீதம் வரை நிலுவையில் மனுக்கள் இருந்தன. 5 சதவீதம் மனுக்கள் மீது குறுக்கு விசாரணை உள்ளிட்டவை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், முதல்வர் நிலுவையில் உள்ள மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டதன்படி, உடனடியாக நிலுவை மனுக்கள் மீதான நடவடிக்கை எடுக்கப்பட்டு தற்போது தீர்வுக்காணப்பட்டுள்ளன. மேலும், பொதுமக்களிடம் இருந்து வரும் புகார் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
* சென்னையில் 43 ஆயிரம் மனுக்கள் தீர்வு
சென்னையை பொறுத்தவரை இதுவரை 65,844 மனுக்கள் பெறப்பட்டு, அதில் 42,865 மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், இதர மனுக்கள் மீது விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், வேலைவாய்ப்பு, கல்வி உள்ளிட்ட அதிகப்படியான மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தப்பட்டு தீர்வும் காணப்பட்டுள்ளன.
* தினசரி 2,500 மனுக்கள் பெறப்படுகிறது
முதல்வரின் முகவரி பிரிவில் தினசரி தபால் மூலம் 1500 மனுக்கள், மின்னஞ்சல் மூலம் 500 மனுக்கள், பொதுமக்கள் நேரடியாக முதல்வரிடமோ அல்லது முகாம் அலுவலகத்திலோ 500 மனுக்கள், செயலி மூலம் 100 மனுக்கள் என 2,500க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு வருகிறது.
* ‘முதல்வரின் முகவரி’ வரும் மனுக்கள் என்ன என்ன?
முதல்வரின் முகவரிக்கு பெரும்பாலும் வேலைவாய்ப்பு, பட்டா, முதியோர் ஓய்வூதியம், மாற்றுத்திறனாளிகளுக்கான ஊதியம், வீடு வேண்டி மனு அளித்தல் உள்ளிட்ட மனுக்கள் வருகின்றன.
* முதல்வரின் முகவரி புத்தகம்
தமிழகம் முழுவதும் மாவட்டந்தோறும் முதல்வரின் முகவரி புத்தகம் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் தொடங்கி வைத்தார். மேலும், இந்த புத்தகம் 3 மாதத்திற்கு ஒருமுறை (காலண்டுக்கு ஒருமுறை) மாவட்டத்தில் எடுக்கப்பட்ட புகார் மனு மீதான நடவடிக்கை என்ன என்பதை கணக்கிட்டு முதல்வரின் நேரடி பார்வைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதன் மூலம் மாவட்டத்தில் எடுக்கும் நடவடிக்கைகளை எளிதில் அறிந்துக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளன.
Tags:
2.50 Lakh Grievances 85% Resolved in Vellore Mandal 'Chief's Address' New Sector ‘முதல்வரின் முகவரி’ புதிய துறை வேலூர் மண்டலத்தில் 2.50 லட்சம் புகார் மனு 85% தீர்வுமேலும் செய்திகள்
‘இன்று உலக சிட்டுக்குருவி தினம்’ அழிந்து வரும் சிட்டுக்குருவியை பாதுகாக்க உறுதியேற்போம்....
நோயாளிகளை டாக்டர்கள் தொடாமலே ‘ஸ்மார்ட் நாற்காலி’ மூலம் சிகிச்சை: திருச்சி கல்லூரி மாணவன் அசத்தல்
ஒரே நாடு ஒரே கட்சியாக மாற்ற முயற்சி: அழிவுப் பாதையை நோக்கி ஜனநாயகம்.! சிபிஐ, அமலாக்கத்துறை மூலம் அடக்கப்படும் எதிர்ப்பு குரல்கள்
தேசிய அளவில் நடைபெற்ற துடுப்பு போடுதல் போட்டியில் அரசு பள்ளி மாணவி அசத்தல்: பல்வேறு போட்டிகளில் வெற்றிகளை குவிக்கும் மாணவர்கள்
சாலை விபத்துகளை தடுக்கும் ஆன்டி ஸ்லீப் கிளாஸ்: டிரைவர்கள் கண் மூடினால் அலாரம் அடிக்கும்
வடமாநில தொழிலாளர்கள் வதந்திக்கு முற்றுப்புள்ளி சாட்டையை சுழற்றிய தமிழ்நாடு அரசு: களத்தில் இறங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!
பாக்தாத் சர்வதேச மலர் திருவிழாவின் மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்!!
சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு
ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!