சேலம்-நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற காளிப்பட்டி கந்தசுவாமி கோயிலில் நாளை தைப்பூசத்திருவிழா தேரோட்டம்
2023-02-04@ 10:21:05

சேலம்: சேலம்-நாமக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற காளிப்பட்டி கந்தசுவாமி கோயில் தைப்பூசத்திருவிழா திருத்தேரோட்டம் நாளை (5ம்தேதி) கோலாகலமாக நடக்கிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளும் இந்த விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும், துரிதகதியில் செய்யப்பட்டு வருகிறது. சேலம்-நாமக்கல் மாவட்ட எல்லையில் இருக்கும் காளிப்பட்டி கந்தசுவாமி கோயில், பல நூற்றாண்டு பழமை வாய்ந்தது. மேற்கு பார்த்த சன்னதியில் மூலவர் பாலதண்டாயுதபாணியாக காட்சியளித்து, பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் கடித்தவர்களை, இத்தலத்திற்கு அழைத்து வந்து பூஜை செய்தால் நிவாரணம் கிடைக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. வழக்கமாக அனைத்து முருகன் கோயில்களிலும், திருநீறு பிரசாதமாக வழங்கப்படும். ஆனால் இங்கு மட்டும், கரும்பு சோகையை எரித்த கருநீறு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இது விஷ ஜந்துக்களின் பிடியில் இருந்து, பக்தர்களை காக்கும் மருத்துவ குணம் கொண்டது என்கின்றனர் முன்னவர்கள். இதேபோல் கிராமிய மணம் மாறாமல் திகழும் முருகன் கோயில் என்ற பெருமையும், காளிப்பட்டி கந்தசுவாமி கோயிலுக்கு உண்டு.
இப்படி பல்வேறு சிறப்புகள் கொண்ட காளிப்பட்டி கந்தசுவாமி கோயிலில், ஆண்டு தோறும் நடக்கும் தைப்பூசத்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த விழாவில் சேலம், நாமக்கல் மட்டுமன்றி இதர மாவட்டங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து முருகனை வழிபட்டுச் செல்வது வழக்கமாக உள்ளது. நடப்பாண்டு தைப்பூச விழாவிற்கான கொடியேற்றம் கடந்த 1ம்தேதி நடந்தது. இதையடுத்து சிறப்பு அபிஷேகம், மின் அலங்காரத்துடன் சுவாமி திருவீதி உலா நிகழ்ச்சிகள் நடந்தது. இதையடுத்து இன்று (4ம்தேதி) புனர்பூச நட்சத்திரத்தில், சுவாமிக்கு திருக்கல்யாண வைபோக விழா நடக்கிறது. இதையொட்டி பகல் 1மணிக்கு சுவாமி, சந்தனக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார். பக்தி இன்னிசை நிகழ்ச்சிகளும் நடக்கிறது. முக்கிய நிகழ்வான தைப்பூசத்திருவிழா, நாளை (5ம்தேதி) காலை 5மணிக்கு சிறப்பு அபிஷேகத்துடன் தொடங்குகிறது.
காலை 6மணிக்கு சொர்க்கவாசல் திறப்புடன் அன்னதானம் வழங்கப்படுகிறது. தொடர்ந்து மதியம் 2.45மணிக்கு தைப்பூசத்திருவிழா ேதரோட்டம் கோலாகலமாக நடக்கிறது. இரவு 7மணிக்கு மின் அலங்காரத்துடன் சுவாமி திருவீதி உலா நடக்கிறது. இதையொட்டி பக்தர்களின் வசதிக்காக அனைத்து ஏற்பாடுகளையும் ேகாயில் நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகள் செய்துள்ளனர். இது குறித்து கோயில் நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகள் கூறியதாவது: காளிப்பட்டி கந்தசுவாமி கோயிலில் தைப்பூசத்திருவிழா, பல நூறாண்டுகள் கடந்து மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தேர்உற்சவம் மற்றும் மாட்டுத்தாவணி, திருவிழா நீதிமன்றத்துடன் 8நாட்கள் விழா நடைபெறும். கடந்த 1ம்தேதி, கொடியேற்றத்துடன் தொடங்கிய தைப்பூசத்திருவிழா 8ம்தேதி வரை நடந்து நிறைவு பெறுகிறது. இதில் முக்கிய நிகழ்வான தைப்பூசவிழா பொங்கல் வழிபாடு, திருத்தேரோட்டம் போன்றவை நாளை (5ம்தேதி) வெகுவிமரிசையாக நடக்கிறது.
இந்த விழாவில் திரளும் ஆயிரக்கணக்கான பக்தர்களை கருத்தில் கொண்டு, அவர்களுக்கான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் முழுமையாக செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் எவ்வித சிரமும் இல்லாமல், கந்தசுவாமியை தரிசிப்பதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளது. தேரோட்டத்தை தொடர்ந்து, 6ம்தேதி இரவு 7மணிக்கு முத்துப்பல்லக்கில் சுவாமி திருவீதி உலா நடக்கிறது. அன்றைய தினம் சிறப்பு சந்தனக்காப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலிக்கிறார். 7ம்தேதி மயில்வாகனத்தில் முத்து பல்லக்கில் சுவாமி வலம் வருகிறார். தொடர்ந்து அதிகாலை 3மணிக்கு சத்தாபரண மகாமேருவாக, சுவாமி திருவீதி உலா வருகிறார். 8ம்தேதி வசந்தவிழா மற்றும் பல்வேறு கிராமிய கலைநிகழ்ச்சிகளுடன் காளிப்பட்டி கந்தசுவாமி கோயில் தைப்பூசத்திருவிழா நிறைவு பெறுகிறது. இவ்வாறு நிர்வாகிகள், அதிகாரிகள் கூறினர்.
மேலும் செய்திகள்
தருமபுரி அருகே பண்ணையில் மின்னல் தாக்கியதால் 5,000 கோழிகள் தீயில் கருகி நாசம்
ரூ.24.98 கோடி நிதி ஒதுக்கீடு: வைகை அணை-பேரணை இடையே பாசன கால்வாய் சீரமைப்பு பணி தீவிரம்
கம்பத்தில் இருந்து கேரள மாநிலத்தின் புதிய வழித்தடங்களில் அரசு பஸ் இயக்கப்படுமா?: ஏலத்தோட்ட தொழிலாளர்கள், விவசாயிகள், மக்கள் எதிர்பார்ப்பு
காவல்துறையில் பயன்படுத்தும் வாகனங்களை எஸ்பி., ஆய்வு
பைக்காரா அணையின் கரையோரத்தில் இறந்து கிடந்த பெண் புலி
குன்னூர் ரன்னிமேடு ரயில் நிலையம் பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகள்
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி