மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எதிரொலி: தொப்பூர் கணவாயில் விபத்து உயிரிழப்பு குறைந்தது
2023-02-04@ 10:20:21

தர்மபுரி: தர்மபுரி மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட நடவடிக்கைகளால், தொப்பூர் கணவாயில் விபத்துகளும், உயிரிழப்புகளும் குறைந்துள்ளது. கடந்தாண்டு நிகழ்ந்த 50 விபத்துகளில் உயிரிழப்பு 9 ஆக குறைந்துள்ளது. தர்மபுரி மாவட்டம், தொப்பூர் கணவாய் வழியாக பெங்களூருவில் இருந்து சேலம், கோவை வழியாக தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இருவழிச்சாலையாக இருந்த இந்த சாலை, கடந்த 2008ம் ஆண்டு நான்கு வழிச்சாலையாக விரிவுபடுத்தப்பட்டது. தேசிய நெடுஞ்சாலையில், தொப்பூர் பகுதி தர்மபுரி மற்றும் சேலம் மாவட்டங்களுக்கு இடையே அமைந்துள்ள ஒரு மலை பகுதியாகும். தினமும் சுமார் 25 ஆயிரம் வாகனங்கள் இந்த வழியாக பயணிக்கின்றன. பெங்களூருவில் இருந்து வரும் அனைத்து பயணிகளும், இந்த வழியாகவே செல்கின்றனர். சரிவான மலைப்பாதை என்பதால், இங்கு மாதத்திற்கு சராசரியாக 13 விபத்துக்கள் நடந்து வந்தன.
பெரும்பாலான விபத்துகள், சேலம் மார்க்கத்தில் மட்டுமே நடந்துள்ளன. கட்டமேடு முதல் தோப்பூர் போலீஸ் குவார்ட்டர்ஸ் வரை ‘எஸ்’ வளைவு மற்றும் 2 ஆபத்தான வளைவுகள் மற்றும் ஒரு குறுகிய பாலம் கொண்ட தொடர்ச்சியான செங்குத்தான தாழ்வான சாலையாக உள்ளது. இந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதால், பல மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மாவட்ட குற்றப் பதிவுப் பணியகத்தின் (டிசிஆர்பி) தரவுகளின்படி, கடந்த 12 ஆண்டுகளில் 734 விபத்துகள் நடந்துள்ளன. அதில் 244 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 863 பேர் காயமடைந்தனர். இது தவிர, பெரும் பொருளாதார இழப்பும் ஏற்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்ட நிர்வாகம் சார்பில் நடந்த மாவட்ட சாலை பாதுகாப்பு குழுவின் விரிவான ஆலோசனைக்கு பிறகு, தொப்பூர் வனச்சாலை பிரிவில் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை மேம்படுத்த, மாவட்ட நிர்வாகத்தால் 27 விதமான தற்காலிக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
இது தவிர, தொப்பூர் கணவாயில் இருந்து சேலம் மாவட்டம் ரயில்வே மேம்பாலம் வரை, சுமார் 7 கிலோமீட்டர் அளவிற்கு உயர்மட்ட பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பாலம் அமைக்கப்பட்ட பின்னர், முற்றிலும் விபத்துக்களே இல்லாத சாலையாக மாறும் என்ற நிலை உருவாகும்.இதுபற்றி தர்மபுரி வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் கூறியதாவது: தொப்பூர் கணவாயில் விபத்துகளை தடுக்க, மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சாலையோரம் 100 சோலார் எல்இடி ஒளிரும் விளக்குகள், 10 ஆயிரம் ரிப்ளக்டர்கள், இரு இடங்களில் ஹைமாஸ் விளக்குகள் பொருத்தப்பட்டு, மஞ்சள் வண்ண கோடு வரைதல், சிறுபாலங்களை உயர்த்துதல் போன்றவை கட்டமைக்கப்பட்டது. மேலும், கணவாய் சாலையில் வாகனங்கள் யு டர்ன் திரும்புவது தடுக்கப்பட்டது. ஒலிபெருக்கியில் 24 மணி நேர எச்சரிக்கை ஒலிபரப்பு, சென்டர் மீடியன் சுவர் உயரத்தை அதிகரித்தல், கனரக வாகனங்களை இடதுபுறமாக செல்ல சாலை நடுவே பிளாஸ்டிக் தடுப்புகள் போன்றவை அமைக்கப்பட்டது.
கடந்த ஜூலை 2021ம் ஆண்டு முதல் 2022 டிசம்பர் மாதம் வரை, தொப்பூர் கணவாய் பகுதியில் அதிவேகமாக சென்ற 7,720 வாகன ஓட்டிகளுக்கு, ஸ்பீடு ரேடார், கன்-கன் என்ற நவீன கருவி மூலம் இ-சலான் வழியாக 47.28 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. டிரக், கனரக வாகன ஓட்டிகளிடையே தொப்பூர் கணவாய் விபத்துக்கள் குறித்த விழிப்புணர்வு வீடியோக்கள், சுமார் ஒரு லட்சம் டிரைவர்களுக்கு வாட்ஸ்அப் குரூப் மூலம் பகிரப்பட்டுள்ளது. தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டதன் விளைவாக, கடந்த 2022ம் ஆண்டு நிகழ்ந்த 50 விபத்துக்களில் 9 உயிரிழப்பு மட்டுமே ஏற்பட்டுள்ளது. இதுவே கடந்த 2019ம் ஆண்டில், 57 விபத்துகளில் 23 உயிரிழப்புகள் நடந்தது. தொப்பூர் கணவாய் பகுதியில், மாவட்ட நிர்வாகத்தால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக, விபத்துகள் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் செய்திகள்
தருமபுரி அருகே பண்ணையில் மின்னல் தாக்கியதால் 5,000 கோழிகள் தீயில் கருகி நாசம்
ரூ.24.98 கோடி நிதி ஒதுக்கீடு: வைகை அணை-பேரணை இடையே பாசன கால்வாய் சீரமைப்பு பணி தீவிரம்
கம்பத்தில் இருந்து கேரள மாநிலத்தின் புதிய வழித்தடங்களில் அரசு பஸ் இயக்கப்படுமா?: ஏலத்தோட்ட தொழிலாளர்கள், விவசாயிகள், மக்கள் எதிர்பார்ப்பு
காவல்துறையில் பயன்படுத்தும் வாகனங்களை எஸ்பி., ஆய்வு
பைக்காரா அணையின் கரையோரத்தில் இறந்து கிடந்த பெண் புலி
குன்னூர் ரன்னிமேடு ரயில் நிலையம் பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகள்
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி