பட்ஜெட்டில் சுங்கவரி விதிப்பு எதிரொலி வரலாறு காணாத வகையில் தங்கம் விலை உயர்வு: ஒரு சவரன் ரூ.44 ஆயிரத்தை கடந்தது; விற்பனையாளர்கள் தகவல்
2023-02-03@ 00:32:06

சென்னை: பட்ஜெட்டில் சுங்கவரியை அதிகரித்து ஒன்றிய அரசு அறிவித்துள்ளதால், தங்கம் விலை கடந்த இரு நாட்களாக வரலாறு காணாத வகையில் கிராமுக்கு ரூ.1,336 என அதிகரித்து, ஒரு சவரன் தங்கம் ரூ.44 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆனால், வரலாற்றில் இந்த விலை உயர்வுதான் அதிகம் என தங்க நகை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். உலக நாடுகள் மத்தியில், குறிப்பாக இந்தியாவில் தங்கம் ஒரு சிறந்த முதலீட்டு பொருளாக பார்க்கப்படுகிறது. கொரோனா கால கட்டத்துக்கு பிறகு தான் மக்கள் சேமிப்பதில் ஆர்வம் செலுத்த தொடங்கினர்.
நடுத்தர வர்க்கத்தினர் பெரும்பாலானோர் தற்போது, தங்கத்தில் சேமிக்கவே விரும்புகின்றனர். ஆனால், ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து வருகிறது. இன்னும் சில நாட்களில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.6000ஐ கடக்கும் என்று கூறப்படுகிறது. மக்கள் தங்கத்தை ஆபரணமாகவே வாங்க விரும்புகிறார்கள். தங்கம் என்றைக்குமே ஒரு சேமிப்பு என்பதாலும், எப்போது வேண்டும் என்றாலும் வங்கிகளிலோ, நிதி நிறுவனங்களிலோ அடகு வைத்து பணம் பெறலாம். எனவே, தங்கத்தில் செய்யப்படும் முதலீடும் ஒரு வகையில் லாபம் தரும் வணிகமாகவே கருதப்படுகிறது.
தங்கம் ஒரு சிறு சேமிப்புத் திட்டம் என்றும் கூறலாம். கொஞ்சம் கொஞ்சமாக சேமித்து வந்தால், ஒரு நாளில் அது மிகப் பெரிய தொகையாக நமக்கு கிடைக்கும். பணமாக சேர்த்து வைத்திருப்பது மிகவும் கடினம். அவசர தேவைக்கு நாம் பயன்படுத்தும் சூழல் ஏற்படும். இந்த சூழ்நிலையில், தங்கம் விலை கடந்த சில மாதமாக ஏறுவதும், இறங்குவதுமாக இருந்து வந்தது. அதன் பிறகு, தங்கம் விலை தொடர்ந்து உயர தொடங்கியது. தென் இந்தியாவில் தங்கத்தை பெண்கள் அதிகமாக பயன்படுத்துகின்றனர். குறிப்பாக, தங்கத்தை வைத்துள்ள அதிகம் வைத்துள்ள மாநிலத்தில், தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது.
மேலும், தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம். இந்நிலையில் தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகம். இந்நிலையில், சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் காரணமாக, கடந்த வாரத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.600 வரை அதிகரித்தது. எனினும் ஜனவரி 27, 28 ஆகிய நாட்களில் தங்கம் விலை குறைந்தது. 29, 30 ஆகிய தேதிகளில் தங்கம் விலையில் மாற்றம் எதுவும் இன்றி விற்பனையானது. ஆனால், கடந்த 31ம் தேதி தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.96 குறைந்து ரூ.42,704க்கு விற்பனையானது. மேலும், ஒரு கிராம் ரூ.12 குறைந்து ரூ.5,338க்கும் விற்பனை செய்யப்பட்டது. திடீரென குறைந்த தங்கத்தின் விலையால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஆனால், வரலாறு காணாத வகையில் தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து வருவது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த இரண்டு நாளில் மட்டும் தங்கத்தின் விலை 1,096 ரூபாய் அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் காலையில் சவரனுக்கு ரூ.176 அதிகரித்து ரூ.42,880க்கு விற்பனையாது. ஆனால், மாலையில் சவரனுக்கு ரூ.616 உயர்ந்து ஒரு சவரன் ரூ.43,320க்கு விற்பனையானது. இந்நிலையில், நேற்று ஒரே நாளில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது. குறிப்பாக, பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு தங்கத்தின் விலை குறையும் என எதிர்ப்பார்த்த நிலையில், ஒன்றிய அரசு தங்கம் இறக்குமதிக்கான சுங்கவரியை அதிகரித்தது.
இதனால், தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இனி தங்கத்தின் விலை குறைய வாய்ப்பில்லை என துறை சார்ந்த நிபுணர்கள் கூறுகின்றனர். நேற்று காலையில் ஒரு கிராம் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ரூ.5,475க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.480 அதிகரித்து ரூ.43,800க்கு விற்பனை செய்யப்பட்டது. இது இந்திய வரலாற்றில் புதிய உச்சத்தை தொட்டுள்ளதாக தங்க நகை விற்பனையாளர்கள் தெரிவித்தனர். இதற்கு முன்பு கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7ம்தேதி ஒரு கிராம் ரூ.5 ஆயிரத்து 416க்கும், ஒரு சவரன் ரூ.43 ஆயிரத்து 328க்கும் தங்கம் விற்பனை ஆனது தான் வரலாறு காணாத புதிய உச்சமாக பார்க்கப்பட்டது.
இந்நிலையில் தான் தற்போது ஒரு சவரன் தங்கம் விலை ரூ.44ஆயிரத்தை கடந்து அனைத்து தரப்பு மக்களுக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அதாவது, சென்னையில் தங்கத்தின் விலை நேற்று மாலை சவரனுக்கு ரூ.720 உயர்ந்துள்ளது. சவரன் ஒன்றுக்கு ரூ.720 உயர்ந்து ரூ.44,040க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.5,505 ஆக விற்பனை செய்யப்படுகிறது. பட்ஜெட் எதிரொலியாக தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் விரைவில் தங்கம் சவரன் விலை ரூ.45ஆயிரத்தை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து விலை உயர்வை சந்தித்து வந்த தங்கம் விலையானது கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் ரூ.2,760 உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு தொடர்ந்து நீடிக்கும் என்றும் தங்க நகை விற்பனையாளர்கள் தெரிவித்தனர். இதனால் நகை வாங்குவோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து தங்க நகை விற்பனையாளர்கள் கூறுகையில்,‘‘ஒன்றிய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரியில் மாற்றம் செய்யவில்லை. இதனால் தங்கத்தின் மீது முதலீட்டாளர்களின் பார்வை சென்றதன் விளைவால், தங்கம் விலை உயர்ந்திருக்கிறது. இனி வரக்கூடிய நாட்களிலும் விலையில் அதிரடி மாற்றம் இருக்கும். என்றார்கள்.
* தங்கம் விலை உயர்வு ஏன்?
தங்கம் விற்பனையாளர் கூறியதாவது: இந்தியாவிலும் குறிப்பாக தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவிலும் தங்கம் விற்பனை அதிகம் இருக்கும். குழந்தை பிறப்பது முதல் பல்வேறு நல்ல நிகழ்ச்சிகளுக்கு தங்கம் வாங்குவது நமது வழக்கமாக உள்ளது. தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக இருக்கிறது. இதனால்தான், தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பெண் குழந்தை என்றால் திருமணம் செய்து கொடுக்கும்போது பல சவரன் நகையை அணிவித்து அனுப்பும் வழக்கம் பல குடும்பங்களில் இன்றும் இருக்கிறது. ஆபத்து காலங்களில் அடகு வைப்பதற்கும் தங்க நகைகள் பயன்படுகிறது. பல்வேறு தரப்பட்ட மக்கள் அதிக அளவில் தங்கத்தில் முதலீடு செய்வதும் தங்கம் விலை உயர்வுக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக கூறப்படுகிறது’’ என்றார்.
வெள்ளி விலை நிலவரம்
கிலோ ரூ.77,800
கிராம் ரூ.77.80
+1,800 (கிலோவுக்கு)
Tags:
In the budget customs levy unprecedented gold price rise பட்ஜெட்டில் சுங்கவரி விதிப்பு வரலாறு காணாத தங்கம் விலை உயர்வுமேலும் செய்திகள்
தங்கம் விலை ஒரே நாளில் ரூ.560 உயர்ந்தது
இரக்கம் காட்டிய தங்க விலை... சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.43,760க்கு விற்பனை.. இல்லத்தரசிகளுக்கு சற்று ஆறுதல்!!
தங்கம் விலை கிடுகிடு உயர்வு சவரன் ரூ.44 ஆயிரத்தை தாண்டியது: ஒரே நாளில் ரூ.880 அதிகரிப்பு
சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ரூ.44,480க்கு விற்பனை
தங்கம் விலை மீண்டும் ஏறுமுகம் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.200 உயர்ந்தது
ஒருநாள் மட்டுமே பெயரளவுக்கு குறைந்த நிலையில் தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்தது: ஒரே நாளில் சவரனுக்கு ரூ.360 எகிறியது
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி