SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆற்காட்டில் சாலைகளில் உள்ள சுகாதாரமற்ற தின்பண்ட கடைகளை ஆய்வு செய்ய வேண்டும்-நகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்

2023-02-01@ 14:30:25

ஆற்காடு :  ஆற்காட்டில் சாலை ஓரத்தில் சுகாதாரமற்ற முறையில் இயங்கும் தின்பண்ட கடைகளில்  அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என நகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
ஆற்காடு நகராட்சியின் சாதாரண கூட்டம் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அரங்கில் நகராட்சி தலைவர் தேவி பென்ஸ்பாண்டியன் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் பவளக்கொடி சரவணன், ஆணையாளர் பார்த்தசாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது, பொன் ராஜசேகர் (திமுக): தெருக்களில் வைக்கப்பட்டுள்ள சின்டெக்ஸ், மோட்டார் ஆகியவை பழுது ஏற்பட்டால் அதை பழுது பார்ப்பதில்லை. நகராட்சி பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகள்  நேரில் சென்று ஆய்வு செய்வதில்லை. கடந்த ஆட்சி காலத்தில் நகராட்சியில் டெண்டர் விசயத்தில் ஊழல் நடந்துள்ளது. அது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்.

ஆனந்தன் (திமுக): நகராட்சியில்  உள்ள 30 வார்டுகளிலும் தெருவிளக்குகள் அமைக்க டெண்டர் விடப்பட்டுள்ளது. பணிகளை விரைவில் தொடங்க வேண்டும். திமுக ஆட்சியில் நகராட்சி அலுவலகம் மேற்புறத்தில் தமிழ் வாழ்க என்ற பெயர்பலகை வைக்கப்பட்டது. அதனை மீண்டும் எரிய வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நகரில் பல இடங்களில் காவல்துறை சார்பில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. அது  போதுமானதாக இல்லை. எனவே நகராட்சி சார்பில் நமக்கு நாமே திட்டத்தில் கண்காணிப்பு கேமராக்களை தேவைப்படும் இடங்களில் பொருத்த வேண்டும்.

 செல்வம் (பாமக): வயது முதிர்வு காரணமாக இயற்கை மரணம் ஏற்பட்டால் அதை பதிவு செய்வதற்கு நகராட்சியில் டாக்டர் சான்று கேட்கின்றனர். இயற்கை மரணம் குறித்து சான்றுகள் கேட்டு விண்ணப்பித்தால் சுகாதார ஆய்வாளர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்து விசாரணை செய்து சான்று வழங்கலாம்.

சுகாதார அலுவலர் பாஸ்கர்: மருத்துவ சான்று இருந்தால் தான் பதிவு செய்ய முடியும். உங்களுடைய கருத்து அரசுக்கு கடிதம் மூலம் அனுப்பி வைக்கப்படும். தட்சணாமூர்த்தி (திமுக): ஆற்காடு நகரின் பெரும்பாலான சாலை ஓரங்களில் தின்பண்டக் கடைகள் அதிகமாக உள்ளன. சுகாதாரமற்ற முறையில் அஜினோமோட்டோ போன்றவை கலக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குணாளன் (திமுக): ஆற்காடு பஜார் பகுதியில் புதியதாக சிறுபாலம் கட்டும் பணி நடைபெறுகிறது. இதனால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு கனரக வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்கள் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி ஒன்றின் வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது. இதனால் சாலைகள் சேதமடைகிறது.ராஜலட்சுமி துரை (திமுக): பஸ் நிலையத்தில் திருநங்கைகள் இடையூறு அதிகமாக உள்ளது. பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகளிடம் அதிக தொல்லை கொடுக்கின்றனர். இதுகுறித்து காவல்துறைக்கு தெரியபடுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காமாட்சி பாக்யராஜ் (விசிக): தோப்புக்கானா தெற்கு தொடக்கப்பள்ளியில் கட்டிடம் மிகவும் பழுதடைந்துள்ளது. அதனை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும். தூய்மை பணியாளர்களுக்கு சீருடை, தொப்பி, கையுறை ஆகியவற்றை வழங்க வேண்டும். மயான கொள்ளை திருவிழா வரவுள்ளதால் கோயில் அருகிலும், பாலாற்
றிலும் தூய்மைப் பணிகள் முன்கூட்டியே செய்ய வேண்டும்.

தலைவர் தேவி பென்ஸ் பாண்டியன்: நகராட்சி கூட்டம் நடைபெறும் போது மட்டும், குறைகளை தெரிவிக்காமல் மற்ற நேரங்களிலும் வார்டு குறைகளை தெரிவித்தால் உடனுக்குடன் அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது. அதனை தொடர்ந்து நடந்த கூட்டத்தில் 2021-22ம் ஆண்டு நமக்கு நாமே திட்டத்தில் 22.50 லட்சம் மதிப்பீட்டில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி ஒன்றில் உள்ள பொதுவான சமையலறை கட்டிடத்திற்கு சுற்றுச்சுவர் கட்டும் பணிக்கு ஒப்பந்த புள்ளி வரவேற்கப்பட்டது. வரப்பெற்ற மூன்று ஒப்பந்த புள்ளிகளில் டி.சேதுராமன் என்ற ஒப்பந்ததாரருடைய மனைவி எஸ்.ஜோதி சேதுராமன் ராணிப்பேட்டை நகராட்சியின் 26வது வார்டு நகர மன்ற உறுப்பினராக உள்ளார்.

எனவே இந்திய தேர்தல் ஆணைய விதியின் படி நகர மன்ற உறுப்பினரின் ரத்த சொந்தங்கள் யாரும் அரசு திட்டங்களில் கலந்து கொள்ளக்கூடாது. எனவே டி.சேதுராமனின் ஒப்பந்த புள்ளி நிராகரிக்கப்பட்டது. இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலாற்றில் நடைபெற உள்ள மயான கொள்ளை திருவிழா முன்னிட்டு பொதுமக்கள் நலன் கருதி மின் விளக்கு, குடிநீர் வசதி, தற்காலிக கழிப்பறைகள் அமைக்க ₹1.50 லட்சத்திற்கு அனுமதி வழங்குவது உள்பட 28 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • gandhi-13

  ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

 • taipei-fashion-week-taiwan

  தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

 • kalifffo1

  தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

 • pak-123

  பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

 • cherry-blossom-tokyo

  டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்