தமிழ்நாடு அரசின் தொடர் முயற்சியால் பருவமழை காலங்களில் மழைநீர் தேங்காத சென்னையை மக்கள் பார்ப்பார்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
2023-02-01@ 00:30:41

சென்னை: இனிவரும் ஆண்டுகளில் மழைநீர் தேக்கம் இல்லாத பருவமழை காலங்களை சென்னை வாழ் மக்கள் நிச்சயமாக பார்க்க இருக்கிறார்கள். அதற்காக இந்த அரசு மேலும் பல முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். பெருநகர சென்னை மாநகராட்சியின், ரிப்பன் கட்டிடத்தில் நேற்று மழை வெள்ளக் காலங்களில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கும் விழா நடந்தது.
அதில் பங்கேற்று பாராட்டு சான்றுகளை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: திமுக அரசு பொறுப்பேற்று 20 மாதங்கள் ஆகியிருக்கிறது. இதில், இரண்டு சாதனைகளை முக்கியமாக நாம் படைத்துள்ளோம். இதனால், மக்களிடத்திலே நமக்கு மிகப்பெரிய பாராட்டு கிடைத்திருக்கிறது. ஒன்று, கொரோனா என்ற கொடிய நோயை எதிர்த்து அதை வென்றோம். இரண்டாவது - மழை, வெள்ளத்தில் இருந்து மக்களை காத்தோம். பெருநகர சென்னை மாநகராட்சி, சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம், நீர்வளத்துறை, நெடுஞ்சாலைத்துறை, தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், காவல்துறை ஆகிய துறைகளை சார்ந்திருக்கக்கூடிய அதிகாரிகள், பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் அத்தனைபேரும் பாராட்டுக்குரியவர்களாக இன்றைக்கு விளங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
இவர்களையெல்லாம் ஒருங்கிணைத்து பணியாற்றியிருக்கக்கூடிய அமைச்சர் கே.என்.நேருவையும் நான் மனதார பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன். அதேபோல் சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட அமைச்சர்களான மா.சுப்பிரமணியன், சேகர்பாபுவும் இரவு பகல் பார்க்காமல் பணியாற்றினார்கள். அதேபோல் சென்னை மாநகர மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமாரும் 24 மணிநேரமும் இந்த மாநகருக்குள் சுற்றிச்சுழன்று பணிகளையெல்லாம் எந்த அளவிற்கு முடுக்கிவிட்டார்கள் என்பதை நேரடியாக நாமும் பார்த்தோம். அதேபோல் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி ஆற்றிய பணி என்பது மிகமிக மகத்தானது ஒன்று. தண்ணீர் நின்றால் - ஒரு மணி நேரத்தில் மோட்டார் வைத்து அதை அகற்றியது மாநகராட்சி. நீர் நிலைகளை தூர் வாரி வைத்திருந்தது நம்முடைய நீர்வளத்துறை. சாலைகளை உடனடியாக சரி செய்து கொடுத்தது நெடுஞ்சாலை துறை.
சீரான மின்சாரத்தை வழங்கியது மின்சார துறை. பொதுமக்களுக்கு எந்தவித இடைஞ்சலும் இல்லாமல் பார்த்துக் கொண்டது நம்முடைய காவல்துறை. இதைத்தான் நம்முடைய திராவிட மாடல் ஆட்சி என்று நாம் சொல்கிறோம்.
சேவை மனப்பான்மையோடு நீங்கள் பணியாற்றிய காரணத்தில்தான் இந்த பாராட்டும், இந்த பெருமையும், புகழும் இன்றைக்கு இந்த அரசாங்கத்திற்கு, இந்த மாநகராட்சிக்கு, நமக்கெல்லாம் வந்து சேர்ந்திருக்கிறது. துப்புரவு பணியாளர்கள் என்ற அந்த சொல்லையே மாற்றியது தலைவர் கலைஞர். தூய்மை பணியாளர் என்று மாற்றியது தலைவர் கலைஞர்தான். அந்தப் பணியின் கடினமான தன்மையை ஏற்றுக்கொண்டிருக்கக்கூடிய நீங்கள் சிறப்பாக பணியாற்றியிருக்கிறீர்கள். அதனால்தான் இந்த முகமலர்ச்சியோடு நம்முடைய அரசாங்கத்தை மக்கள் பார்க்கிறார்கள்.
2021ம் ஆண்டு நமது அரசு பொறுப்பேற்றதும் பருவமழையின்போது மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்த்த காரணத்தினால், இனி வரக்கூடிய காலக்கட்டங்களில் மழை வெள்ள பாதிப்பில் இருந்து சென்னை மாநகருக்கு நிரந்தர தீர்வினை உருவாக்க வேண்டும் என்று ஒரு முடிவு எடுத்தோம். அதனால், ஒரு ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி திருப்புகழ் தலைமையில் ஒரு வல்லுநர் குழுவை நாம் நியமித்தோம். மூன்று கட்டங்களாக நம்முடைய அரசிடம் அறிக்கை வழங்கினர். அந்த குழுவின் ஆலோசனைப்படி, பருவமழை துவங்குவதற்கு முன்பே இந்த பணிகளை முடிக்க உத்தரவு வழங்கினோம். 2021ம் ஆண்டு பருவமழையின்போது பெற்ற அனுபவத்தை கொண்டு, உடனடியாக நாம் எல்லா வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் குறுகிய காலத்தில் செய்து முடித்தோம். அதன் பயனை 2022ம் ஆண்டு பருவமழையின்போது கண்கூடாக பார்த்தோம்.
இனிவரும் ஆண்டுகளில், மழைநீர் தேக்கம் இல்லாத பருவமழை காலங்களை சென்னை வாழ் மக்கள் நிச்சயமாக பார்க்க இருக்கிறார்கள். இந்த அரசு மேலும் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. நம்பர் ஒன் முதலமைச்சர் - நம்பர் ஒன் தமிழ்நாடு - ஆகிய உயர்வும் பாராட்டும் என்பது ஒரு பக்கம் என்று சொன்னால், அந்த பாராட்டு தனிப்பட்ட ஸ்டாலினுக்கு கிடைத்த பாராட்டாக நான் கருதவில்லை. உங்களுடைய ஒவ்வொருடைய உழைப்பால்தான் அந்த பாராட்டும், அந்த பெருமையும் நமக்கு கிடைத்திருக்கிறது. அதை ஊருக்கு உணர்த்துவதற்காகத்தான் இந்த பாராட்டு விழாவை இன்றைக்கு நாம் வெளிப்படையாக நடத்திக் கொண்டிருக்கிறோம்.
இப்படி பாராட்டும் உள்ளம் அனைவருக்கும் வந்தாக வேண்டும். பாராட்டுவதை வெளிப்படையாகப் பாராட்ட வேண்டும். வெளிப்படையாக பாராட்டினால்தான், அறிவுறுத்தவும், கேள்வி கேட்கவும் நாம் உரிமை பெற்றிடமுடியும்.
அந்த வகையில், பெருநகர சென்னை மாநகராட்சி, சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம், நீர்வளத்துறை, நெடுஞ்சாலைத்துறை, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், காவல்துறை ஆகிய துறைகளின் அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் ஆகிய அனைவரையும் நான் இந்த நேரத்தில் மனதார பாராட்டுகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.கே.சேகர்பாபு, மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், தலைமை செயலாளர் இறையன்பு, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் சிவ் தாஸ் மீனா, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், நிலைக்குழு தலைவர்கள், மண்டல குழு தலைவர்கள், அரசு அலுவலர்கள், காவல்துறை அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
* ஜெர்மன், ஆசிய வளர்ச்சி வங்கி உதவியுடன் பணிகள்
ஆசிய வளர்ச்சி வங்கி நிதி உதவியோடு கொசஸ்தலையாறு வடிநில பகுதிகளில் 3 ஆயிரத்து 220 கோடி ரூபாய் மதிப்பில் 769 கிலோ மீட்டர் நீளத்திற்கும், ஜெர்மன் பன்னாட்டு வங்கி நிதி உதவியின்கீழ் கோவளம் வடிநிலம் பகுதிகளில் 1714 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 360 கிலோ மீட்டர் நீளத்திற்கும், உலக வங்கி நிதி உதவியோடு விடுபட்ட இடங்களில் 120 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 44.88 கிலோ மீட்டர் நீளத்திற்கும் புதிய மழைநீர் வடிகால்கள் அமைக்கக்கூடிய பணிகள் நடைபெற்று வருகின்றது என்றார்.
Tags:
Tamil Nadu Government's Continuous Effort Monsoon Period Rain Water Not Stagnant Chennai Chief Minister M.K.Stalin தமிழ்நாடு அரசின் தொடர் முயற்சி பருவமழை கால மழைநீர் தேங்காத சென்னை முதல்வர் மு.க.ஸ்டாலின்மேலும் செய்திகள்
ராகுல் காந்திக்கு சிறைத்தண்டனை விதித்து, மக்களவை உறுப்பினர் பதவியைப் பறித்திருப்பது ஜனநாயகப் படுகொலை: சீமான் கடும் கண்டனம்..!
சென்னையில் பொருட்கள் சேவை மற்றும் வரி மற்றும் மின் வழிச் சீட்டு குறித்த இணையவழி பயிற்சி
ராகுல் காந்தியை தகுதிநீக்கம் செய்த பாசிச நடவடிக்கைக்கு எனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்: முதல்வர் மு.க. ஸ்டாலின்
பின்தங்கிய பகுதிகளில் தொழிற்சாலைகள் தொடங்கப்படும்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்
மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகனம் நிறுத்துவதற்கு மெட்ரோ பயண அட்டை மட்டுமே ஏற்றுகொள்ளப்படும்: சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்
கர்நாடக இசைப் பாடகி பாம்பே ஜெயஸ்ரீக்கு மூளையில் ரத்தக் கசிவு அடைந்ததை அடுத்து இங்கிலாந்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதி!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!