இதுவே எதிர்பார்ப்பு
2023-02-01@ 00:27:22

ஆண்டுதோறும் ஜனவரி மாத இறுதியில் அந்த ஆண்டுக்கான முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கும். அதைதொடர்ந்து பொது பட்ஜெட் கூட்டத்தொடரின் அமர்வுகள் நடக்கும். இந்த வகையில் ஒன்றிய அரசின் நடப்பாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்கிறார். இது நடப்பாண்டுக்கான பட்ஜெட் என்றாலும், எதிர்வரப்போகும் 2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக தாக்கல் செய்யப்படும் நிறைவு பட்ஜெட் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நேற்று நடந்த நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில், ஏழைகள் முன்னேற்றத்திற்கு பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் 2047ல் நவீன இந்தியா என்ற இலக்கோடு ஒன்றிய அரசு பயணிக்கிறது என்றும் ஜனாதிபதி உரை நிகழ்த்தினார். பொதுவாக நவீனம் என்றாலே, அது வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே சாத்தியமானது என்பது ஒரு எழுதப்படாத விதி. இதை மாற்ற வேண்டும். நவீன இந்தியாவில் நடுத்தர மக்களுக்கும் கரம் கொடுத்து, அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும். அதை கருத்தில் கொண்டு ஒன்றிய நிதியமைச்சரின் பட்ஜெட் இருக்க வேண்டும் என்பது ஒட்டுமொத்த மனங்களிலும் எண்ண ஓட்டமாக நிறைந்து நிற்கிறது.
இந்தியாவில் ஏழை, எளிய மக்கள் தொகை எந்த அளவுக்கு அதிகமாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு நடுத்தர மக்களின் எண்ணிக்கையும் உள்ளது. இந்த எண்ணிக்கையானது ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. 2027ல் இந்தியாவின் மக்கள் தொகை சீனாவை மிஞ்சிவிடும். அப்போது இங்குள்ள நடுத்தர வர்க்கத்தின் எண்ணிக்கையும் அமெரிக்கா, ஐரோப்பா, சீனாவை முந்திவிடும் என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளது. ஒரு அரசு நினைத்தால் நிச்சயமாக இந்த நடுத்தர மக்களை, வசதி படைத்தவர்களாக மாற்ற முடியும். இதற்கு வருமான வரி வரம்பை உயர்த்த வேண்டும் என்பதே பெரும்பாலான நடுத்தர குடும்பங்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதனால் ரூ.5லட்சம் வரை வருமானவரி விலக்கு என்ற அறிவிப்பு நடப்பு பட்ஜெட்டில் இருக்கும் என்பது அவர்களின் எதிர்பார்ப்பு.
இதேபோல் நடுத்தர குடும்பத்தினருக்கு மற்றொரு பிரச்னையாக இருப்பது வேலைவாய்ப்பு. நாட்டில் வேலை வாய்ப்பு விகிதம் அதிகரித்து வந்தாலும் அது நடுத்தர குடும்பங்களை சென்று சேர்வதில் பல்வேறு சிக்கல்களும் உள்ளது. எனவே இதை கருத்தில் கொண்டு நடப்பு பட்ஜெட்டில் வேலை வாய்ப்புகளை மேலும் அதிகரிப்பதற்கான அறிவிப்பு வரும் என்றும் அவர்கள் நம்புகின்றனர். சுகாதார காப்பீடு ஒவ்வொருவருக்கும் அவசியம் என்ற விழிப்புணர்வு பரவலாக ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இதற்கான ஜிஎஸ்டி வரி குறைப்பு உள்ளிட்ட சலுகைகள், அதை முழுமையாக சாத்தியமாக்கும் என்ற ஆவலோடும் ஏராளமான குடும்பங்கள் காத்திருக்கின்றன.
இந்தியாவை பொறுத்தவரை சொந்த வீடு வாங்க வேண்டும் என்பதும் இன்றுவரை பெரும்பாலான நடுத்தர குடும்பங்களுக்கு நிறைவேறாத கனவாகவே உள்ளது. அப்படியே கனவு மெய்ப்பட பெரும் முயற்சிகள் எடுத்தாலும் பெரும் சவால்களை கடந்து சொந்த இல்லத்திற்குள் செல்ல வேண்டியுள்ளது. எனவே வீடு வாங்கும் அளவுக்கு அதிக தள்ளுபடியுடன் வீட்டுக்கடன், வீட்டுக்கடனுக்கான வட்டி குறைப்பு போன்ற அறிவிப்புகள் வெளியாகும் என்று பலத்த ஆர்வமும் ஏற்பட்டுள்ளது. ஆக மொத்தத்தில் நவீன இந்தியாவை உருவாக்கும் திட்டங்களும், அது சார்ந்த பட்ஜெட்டும் நடுத்தர மக்களை சிகரத்தில் ஏற்றாவிட்டாலும் சிரமம் இல்லாத நல்வாழ்வுக்கு வழிகாட்ட வேண்டும்.
மேலும் செய்திகள்
பழிவாங்கும் அரசியல்
பசுமையான மாநிலம்
பயப்படும் பாஜ
வழிகாட்டும் முதல்வர்
சீருடை சிங்கங்கள்
கருணை உள்ளம்
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!