ஓபிஎஸ் அணியின் சார்பில் வைத்திலிங்கம் தலைமையில் 118 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு: பாஜவின் முடிவை பொறுத்தே வேட்பாளர் அறிவிப்பு
2023-01-29@ 00:53:33

சென்னை: ஓபிஎஸ் அணி சார்பில், வைத்திலிங்கம் எம்எல்ஏ தலைமையில் 118 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜ முடிவை பொறுத்தே வேட்பாளர் அறிவிப்பு இருக்கும் என ஓபிஎஸ் தரப்பினர் தெரிவித்துள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா மறைவை தொடர்ந்து, அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அதன்படி, திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். தேமுதிக சார்பில் ஈரோடு கிழக்கு மாவட்டச் செயலாளர் ஆனந்தும், அமமுக சார்பில் சிவபிரசாத்தும் போட்டியிடுகிறார்கள்.
அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தங்கள் அணி சார்பில் வேட்பாளர் களம் இறக்கப்படுவார்கள் என அறிவித்துள்ளனர். இருப்பினும் இதுவரை அவர்கள் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. வேட்பாளர் தொடர்பாக இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். வேட்பாளர் அறிவிப்பது தொடர்பாக எடப்பாடி பழனிசாமியும் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். ஓ.பன்னீர்செல்வம் தரப்போ பாஜ போட்டியிட்டால் அவர்களுக்கு ஆதரவு அளிப்போம். இல்லாவிட்டால் வேட்பாளரை நிறுத்துவோம் என தெரிவித்துள்ளது.
மேலும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பு பாஜவிடம் நேரடியாக ஆதரவு கோரியுள்ளது. இதில் பாஜ தனது நிலைப்பாட்டை இன்னும் வெளிப்படுத்தவில்லை. பாஜ தொடர்ந்து மவுனம் காத்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க, கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் என்ற முறையில் எனது கையெழுத்துடன் கூடிய ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரின் பெயரை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்க மறுக்கிறது. இதற்கு இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
இந்நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாகவும், உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்வது தொடர்பாகவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு நேற்று சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் ஆலோசனை நடத்தியது. இதில், எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு இணையாக வேட்பாளரை நிறுத்துவது குறித்தும், தொகுதியில் களப்பணி செய்வது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆலோசனையை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 118 பேர் அடங்கிய தேர்தல் பணிக்குழுவை ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். இந்த தேர்தல் பணிக் குழு எம்எல்ஏவாக உள்ள வைத்திலிங்கம் தலைமையில் செயல்படும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த குழுவில், முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன், மனோஜ் பாண்டியன் எம்எல்ஏ, முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், முன்னாள் எம்எல்ஏக்கள் ஜெசிடி.பிரபாகர், மனோகரன் உள்ளிட்ட 118 பேர் இடம்பெற்றுள்ளனர்.
* பாஜ கையில் முடிவு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள இல்லத்தில் ஆலோசனை மேற்கொண்டார். ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த ஜெ.சி.டி.பிரபாகர், ‘ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தலைமையில் 118 பேர் கொண்ட தேர்தல் பணி குழு அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜ எப்போது வேட்பாளரை அறிவித்தாலும் அவர்களுக்காக பணியாற்ற தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், பாஜ தேர்தலில் போட்டியிடவில்லை என்று அறிவித்தால் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வேட்பாளரை உடனடியாக அறிவிப்பார்’ என கூறினார்.
அவரை தொடந்து செய்தியாளர்களிடம் பேசிய சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன், ‘அதிமுகவை பொறுத்தவரை ஒருங்கிணைப்பாளர் பதவி மட்டுமே தற்போது உள்ளது. எனவே இரட்டை இலை சின்னத்திற்கு அதிகாரப்பூர்வமாக கையெழுத்திடும் உரிமை ஓ.பன்னீர்செல்வத்திடம் மட்டுமே உள்ளது. எடப்பாடி பழனிசாமி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் சின்னம் தொடர்பாக கொண்டு சென்றுள்ள முறையீடு எந்த வகையிலும் பொதுக்குழு வழக்குக்கு தடையாக இருக்காது’ என்றார்.
Tags:
OPS team Vaithilingam head 118 members election task force BJP's decision candidate ஓபிஎஸ் அணி வைத்திலிங்கம் தலைமை 118 பேர் தேர்தல் பணிக்குழு பாஜவின் முடிவை வேட்பாளர்மேலும் செய்திகள்
தொழில்நுட்ப வளர்ச்சியால் வருங்காலத்தில் உச்சநீதிமன்றத்திலும் தமிழில் வாதிடும் நிலை வரும் :ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜூ பேச்சு!!
கர்நாடக சட்டமன்ற தேர்தல்: 124 தொகுதிகளுக்கு முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்!!
கூட்டணி குறித்து கேட்காதீங்க... அது மேலிடம் பார்த்துக்கும்... அண்ணாமலை கப்சிப்
இபிஎஸ், ஓபிஎஸ்சை இணைத்து அதிமுகவுக்கு தலைமை ஏற்பேன்: சசிகலா பேட்டி
ராகுல் பதவி பறிப்பு அராஜக நடவடிக்கை: தமிமுன் அன்சாரி கண்டனம்
நாடு முழுவதும் காங்கிரசார் போராட்டம்
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி