SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ராகுலின் உறுதி

2023-01-29@ 00:47:15

2022 ம் ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், கன்னியாகுமரியில் தொடங்கி வைத்த இந்திய ஒற்றுமை பயணம் இப்போது ஜம்மு, காஷ்மீரில் நிறைவை எட்டியிருக்கிறது. அத்தனை தூரம், இத்தனை நாட்கள், இத்தனை மாநிலங்கள் வழியாக அசராமல் பயணம் செய்து தனது மன உறுதியை மக்கள் முன் காண்பித்து இருக்கிறார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி. தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்புதூரில் அவரது தந்தை ராஜிவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட இடத்தில் அஞ்சலி செலுத்தி விட்டு இந்த பிரமாண்ட யாத்திரையை ராகுல் தொடங்கினார்.

தமிழ்நாட்டில் 4 நாட்கள், கேரளாவில் 18, கர்நாடாகாவில் 21, ஆந்திராவில் 4, தெலங்கானாவில் 12, மகாராஷ்டிராவில் 14, மத்தியபிரதேசத்தில் 16, ராஜஸ்தானில் 18, அரியானாவில் 12, டெல்லியில் 2, உபியில் 5, பஞ்சாப் மாநிலத்தில் 11, இமாச்சலில் 1, ஜம்மு காஷ்மீரில் 11 என 149 நாட்கள் நடைபயணம் மேற்கொண்ட ராகுல் தனது ஒற்றுமை பயணத்தை இன்று முடிக்கிறார். நாளை அனைத்து கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடக்க இருக்கிறது. எத்தனை இடர் வந்தாலும், உடன் நடந்தவர்கள் இறந்தாலும், இமாச்சலில் ஆட்சியை பிடித்தாலும், குஜராத்தில் படுதோல்வி அடைந்தாலும் ராகுலின் நடைபயணம் தடைபடவில்லை. திட்டமிட்டபடி மட்டுமல்ல, அதைவிட வேகமாகவும் தனது பயணத்தை அவர் தொடர்ந்து இருக்கிறார்.

கொட்டும் மழையிலும், கொளுத்தும் வெயிலிலும், ஏன் நடுங்க வைக்கும் பனியிலும் அவர் அசந்து விடவில்லை, களைத்துவிடவில்லை. எடுத்துக்கொண்ட காரியத்தை வெற்றிகரமாக முடித்து காட்டியிருக்கிறார். தாடி வளர்த்த அவர் சதாம் உசேன் போல் இருக்கிறார் என்றார்கள். அசரவில்லை. இது ஒற்றுமை யாத்திரை இல்லை, நாட்டை பிளவுபடுத்தும் யாத்திரை என்றார்கள். எந்த விமர்சனங்களையும் அவர் கண்டுகொள்ளவில்லை. காதில் ஏற்றிக்கொள்ளவும் இல்லை. கன்னியாகுமரி முனையில் இருந்து காஷ்மீர் முனை வரை அவர் நடந்தே கடந்து இருக்கிறார்.

இந்த 150 நாட்களில் அவர் 3570 கிமீ கடந்து இருக்கிறார். முன்னாள் பிரதமர் சந்திரசேகர் 1983ல் 4260 கிமீ நடைபயணம் மேற்கொண்டார். அதேபோன்ற பயணம் இது. இந்த ஒற்றுமை யாத்திரையில் பொதுமக்கள் தன்னார்வத்துடன் வந்து பங்கேற்று இருக்கிறார்கள். பனி படர்ந்த ஜம்முவில் கூட கட்டுக்கடங்காத கூட்டம். வெறும் வெள்ளை நிற டிசர்ட்டில் ராகுல் பளிச்சென்று நடைபயணம் மேற்கொண்டார். பனிஹால் பகுதியில் சென்ற போது இருபுறமும் மக்கள் வெள்ளம். சுற்றிப்பார்த்தால் பாதுகாப்புக்கு வந்திருந்த காவலர்கள் யாரும் இல்லை.

உடனே உஷார் அடைந்த பாதுகாப்பு அதிகாரிகள் ராகுலுக்கு தகவல் தெரிவிக்க 27ம் தேதி ஒரு மணி நேரம் மட்டுமே நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது. அன்றைய பயணம் பாதுகாப்பு காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மீண்டும் புல்வாமா பகுதியில் இருந்து யாத்திரையை தொடங்கியிருக்கிறார் ராகுல். அங்கு 2019ல் தீவிரவாதிகள் தாக்குதலில் தங்கள் இன்னுயிரை நீத்த 40 சிஆர்பிஎப் வீரர்களுக்கு அவர் அஞ்சலி செலுத்தி தனது பயணத்தை மேற்கொண்டு இருக்கிறார். உறுதியான அவரது பயணம் இன்று நிறைவு பெறுகிறது. தனது உறுதித்தன்மையை இந்த நடைபயணம் மூலம் அரசியல் எதிரிகளுக்கு உணர்த்தி இருக்கிறார் ராகுல்.

Like Us on Facebook Dinkaran Daily News
 • freddie-cyclone

  மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!!

 • patrick-day-1

  அயர்லாந்தில் புனித பாட்ரிக் தினத்தை ஆடல், பாடலுடன் கொண்டாடிய மக்களின் புகைப்படங்கள்..!!

 • france-123

  பிரான்ஸில் ஓய்வூதிய சீர்திருத்தத் திட்டத்திற்கான போராட்டத்தில் வன்முறை: சாலைகளில் வாகனங்களை தீயிட்டு கொளுத்தியதால் பதற்றம்..!!

 • sydney-world-record

  புதிய உலக சாதனை: சிட்னியில் 40 மணி நேரத்திற்கு மேல் அலைச்சறுக்கு செய்து வீரர் அசத்தல்

 • padmavathi-kumbabhishekam-17

  சென்னை பத்மாவதி தாயார் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்.. .சாரல் மழையில் கண் குளிர தரிசனம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்