துணை நிற்போம்
2023-01-28@ 00:29:11

தமிழகத்தில் கடந்த 2006-ம் ஆண்டு இயற்றப்பட்ட உணவு பாதுகாப்பு மற்றும் தரச்சட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு தடை விதித்து உணவு பாதுகாப்பு துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்திருந்தார். ஆண்டுதோறும் இந்த உத்தரவு தொடர்பான ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு வந்த நிலையில், இதனை மீறியதாக, சில நிறுவனங்களுக்கு எதிராக குற்ற நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. இதனை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், உணவு பாதுகாப்பு மற்றும் தரத்தை உறுதிசெய்வதற்காக கொண்டுவரப்பட்ட உணவு பாதுகாப்பு மற்றும் தரச்சட்டத்தில் புகையிலையை உணவுப்பொருளாக சுட்டிக்காட்டவில்லை. சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள் விளம்பர தடை சட்டத்தை பொறுத்தவரை, புகையிலை பொருட்கள் விளம்பரப்படுத்துதலை முறைப்படுத்துவது பற்றித்தான் தெரிவிக்கப்பட்டுள்ளது எனக்கூறி குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை ரத்து செய்து, தீர்ப்பளித்தது. இதையடுத்து இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மிக விரைவில் மேல்முறையீடு செய்யப்படும் என தமிழக அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு, வரவேற்புக்குரியது. புகையிலை பொருட்களை பயன்படுத்துவதால் நுரையீரல் புற்றுநோய், மார்பக புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவதாக மருத்துவர்கள் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இதை, அலட்சியப்படுத்தாமல், இளைய சமுதாயத்தினரை காப்பது நமது கடமை. நலமான வாழ்வுக்கு பகையாகிப்போன, புகையிலை பொருட்களால் ஆண்டுதோறும் 60 லட்சம் பேர் உயிரிழப்பதாகவும், இவர்களில் 6 லட்சம் பேர் புகையிலை பொருட்களை பயன்படுத்தாதவர்கள் என்றும் புள்ளிவிவரம் கூறுகிறது. அதாவது, அருகில் இருப்பவர் புகைத்து, வெளியேவிட்ட புகையை சுவாசித்ததாலேயே நோய் பாதிப்பு ஏற்பட்டு 6 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர் என்பதுதான் வேதனைக்குரிய விஷயம்.
உலக அளவில் தவிர்க்கக்கூடிய மரணங்கள் நிகழ காரணமாக இருப்பதில் முதலிடம் வகிப்பது புகையிலை பொருட்கள்தான். புகையிலை பொருட்களை பயன்படுத்துவதால், எத்தனை வருடங்களில் பாதிப்பு ஏற்படும் என்று யாராலும் சொல்ல முடியாது. அவரவர் உடல் அமைப்பு, நோய் எதிர்ப்பு சக்திக்கு ஏற்ப, இந்த பாதிப்பு மாறுபடுகிறது. ஒருசிலருக்கு சில வருடங்களிலேயே பாதிப்பு ஏற்படுகிறது. இன்னும் சிலருக்கு, 20-25 ஆண்டுகள் கழித்துகூட பாதிப்பு ஏற்படுகிறது.
அதேசமயம், புகையிலை பொருட்களை பயன்படுத்துவதை நிறுத்தும்போது ஒரு சில நிமிடங்களில் இருந்தே இந்த பாதிப்பு, நம்மை விட்டு, விலக தொடங்கிவிடுகிறது. எனவே, புகையிலை பொருட்களை தவிர்ப்பது நல்லது. அதை இன்றே, இப்போதே செய்வது நல்லது. உயிரை குடிக்கும் புகையிலை பொருட்கள் பயன்படுத்துவதை விட்டொழிப்பது ஒன்றே நாட்டுக்கும், வீட்டுக்கும் நாம் செய்யும் பெரிய சேவை ஆகும். எனவே இந்த முயற்சியில், தமிழக அரசின் நடவடிக்கைக்கு நாம் அனைவரும் துணை நிற்போம்.
மேலும் செய்திகள்
வழிகாட்டும் முதல்வர்
சீருடை சிங்கங்கள்
கருணை உள்ளம்
விலக்கு வேண்டும்
ராகுலை குறிவைப்பது ஏன்?
பாதை மாற்றும் போதை
மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!!
அயர்லாந்தில் புனித பாட்ரிக் தினத்தை ஆடல், பாடலுடன் கொண்டாடிய மக்களின் புகைப்படங்கள்..!!
பிரான்ஸில் ஓய்வூதிய சீர்திருத்தத் திட்டத்திற்கான போராட்டத்தில் வன்முறை: சாலைகளில் வாகனங்களை தீயிட்டு கொளுத்தியதால் பதற்றம்..!!
புதிய உலக சாதனை: சிட்னியில் 40 மணி நேரத்திற்கு மேல் அலைச்சறுக்கு செய்து வீரர் அசத்தல்
சென்னை பத்மாவதி தாயார் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்.. .சாரல் மழையில் கண் குளிர தரிசனம்..!!