SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் காங். வேட்பாளருக்கு கமல் ஆதரவு

2023-01-26@ 01:20:16

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி ஆதரவு கொடுப்பதாக நேற்று அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து கட்சி தலைவர் கமல்ஹாசன் அளித்த பேட்டி:
ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மற்றும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், மதிமுக, விசிக, இந்திய, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டுகள், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக், மமக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, தவாக, பார்வர்டு பிளாக் ஆகிய கட்சிகளின் சார்பில் போட்டியிடும் எனது நண்பரும், பெரியாரின் பேரனுமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரிப்பது என்ற முடிவை மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ஆமோதித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. அவரது வெற்றிக்காக நானும், எனது கட்சியினரும் வேண்டிய உதவிகள் செய்வோம்.

தனது தனிப்பட்ட வாழ்க்கையின் இக்கட்டான சூழ்நிலையில், தனது சொந்த துயரத்தையும் மீறி மக்கள் பணி செய்ய மீண்டும் தேர்தல் களத்தில் இறங்கி இருக்கும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை மனதார பாராட்டுகிறேன். இன்றைய அரசியல் சூழலில் மதவாத சக்திகள் முழு பலத்துடன் எதிர்க்கப்பட வேண்டியவர்கள் என்பதில் மக்கள் நீதி மய்யத்துக்கு எள்முனையளவும் கருத்து வேறுபாடு இல்லை. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளருக்கு மக்கள் நீதி மய்யம் நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பது என்று முடிவு செய்துள்ளோம்.

மண், மொழி, மக்களை காக்க கட்சி கோடுகளை அழித்துவிட்டு கரம் கோர்க்க நானும், மக்கள் நீதி மய்யமும் தயங்கியதில்லை. அனைவரும் ஒருங்கிணைந்து மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை வெற்றிபெற செய்து, மதவாத சக்திகளுக்கு பாடம் புகட்ட வேண்டும். தமிழ்நாடு சமத்துவத்தின், சகோதரத்துவத்தின், சமூகநீதியின் மண் என்பதை மீண்டும் இந்தியா முழுக்க ஓங்கி ஒலிக்க செய்வோம். ஒன்றுகூடுவோம், வென்று காட்டுவோம். தமிழ்நாடு வாழ்க. நடைபெற இருக்கும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தலில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் பொறுப்பாளராக ஆ.அருணாசலத்தை நியமித்துள்ளேன். இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • erode-senthilbalaji-8

  சூடுபிடித்தது ஈரோடு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம்..!!

 • athisayangal

  நிலநடுக்கத்தை எதிர்த்து வானுயர்ந்து நிற்கும் பொறியியல் அதிசயங்கள்

 • perunad

  பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!

 • turkeydeath11

  துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!

 • lantern-festival-china

  உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்