குடியரசு கோலாகலம்
2023-01-26@ 00:17:28

இந்தியாவின் 74வது குடியரசு தின விழா, நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. தலைநகர் டெல்லியில் எப்போதுமே ராஜ் பாத் பகுதியில் தான் சுதந்திர தின, குடியரசு தின விழாக்கள் கொண்டாடப்படுவது வழக்கம். ஆங்கிலேயர் காலத்திய இந்த நடைமுறையை மாற்ற வேண்டுமென்பதற்காக ‘ராஜ் பாத்’ என்ற பெயர் தற்போது கர்தவ்யா பாத் (கடமை பாதை) என மாற்றப்பட்டுள்ளது. பெயர் மாற்றத்திற்கு பின் இங்கு நடக்கும் முதல் குடியரசு தின விழா இதுவாகும்.
இம்முறை குடியரசு தின விழா பல விசேஷ சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. எகிப்து அதிபர் சிசி இன்றைய குடியரசு தின விழாவில் பங்கேற்கிறார். எகிப்து நாட்டு அதிபர், நமது குடியரசு தின விழாவில் கலந்து கொள்வது இந்திய வரலாற்றில் இதுவே முதல்முறையாகும். நம் நாட்டு ராணுவப்படையோடு, எகிப்தை சேர்ந்த ராணுவ வீரர்களும் அணிவகுப்பில் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், ‘மேக் இன் இந்தியா’ என்பதற்கேற்ப உள்நாட்டு தயாரிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்திய தளவாடங்களே இம்முறை அணிவகுப்பில் இடம் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களுடன் முதன்முறையாக குடியரசு தின விழாவில் நமது வீரர்கள் பங்கேற்க உள்ளனர். வழக்கமாக அணிவகுப்பில் இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்திய பிரிட்டிஷ் கால 25 பவுண்டர் பீல்ட் கன் இடம் பெறும். இம்முறை 21 துப்பாக்கி சல்யூட் தேசி 105 மிமீ இந்திய பீல்ட் கன் பயன்படுத்தப்பட உள்ளது.
மேலும், எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த பெண் வீராங்கனைகளும் பங்கேற்கின்றனர். முதன்முறையாக அக்னிபாத் திட்டத்தில் சேர்க்கப்பட்ட வீரர்களும் பங்கேற்க உள்ளனர். அதேபோல் இந்திய கடற்படையின் பிரபலமான உளவு விமானமான ஐஎல்-38 தனது கடைசி அணிவகுப்பில் பங்கேற்க உள்ளது. இதற்கு பின் இந்த விமானம் கடற்படையால் விடுவிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்தாண்டு குடியரசு தின விழாவில் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்திக்கு அனுமதி தரப்படவில்லை. இதற்கு நமது முதல்வர் கடும் கண்டனத்தை தெரிவித்ததோடு, தமிழ்நாடு முழுவதும் அலங்கார ஊர்தியை வலம் வரச் செய்தார். இதையடுத்து இம்முறை ஒன்றிய அரசு தமிழ்நாடு அலங்கார ஊர்தியை அணிவகுப்பில் இடம் பெறச் செய்துள்ளது. விழாவை பார்வையிட சுமார் 50 ஆயிரம் பேர் ஆன்லைனில் புக் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழ்நாடு தலைநகர் சென்னையை பொறுத்தவரை, ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை 8 மணிக்கு தேசியக்கொடி ஏற்றி வைக்கிறார். இதைத்தொடர்ந்து ராணுவ வீரர்கள், காவல்துறையினரின் அணிவகுப்பு நடக்கிறது. விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று வீர தீர செயலுக்காக வழங்கப்படும் அண்ணா பதக்கங்கள், கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கம், காந்தியடிகள் காவலர் பதக்கங்கள் உள்ளிட்ட சிறப்பு விருதுகளை வழங்க உள்ளார். இதற்காக சென்னை மெரினா காமராஜர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் ஐந்தடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் குடியரசு தின விழா கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக கொண்டாடப்பட உளளது.
மேலும் செய்திகள்
வழிகாட்டும் முதல்வர்
சீருடை சிங்கங்கள்
கருணை உள்ளம்
விலக்கு வேண்டும்
ராகுலை குறிவைப்பது ஏன்?
பாதை மாற்றும் போதை
மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!!
அயர்லாந்தில் புனித பாட்ரிக் தினத்தை ஆடல், பாடலுடன் கொண்டாடிய மக்களின் புகைப்படங்கள்..!!
பிரான்ஸில் ஓய்வூதிய சீர்திருத்தத் திட்டத்திற்கான போராட்டத்தில் வன்முறை: சாலைகளில் வாகனங்களை தீயிட்டு கொளுத்தியதால் பதற்றம்..!!
புதிய உலக சாதனை: சிட்னியில் 40 மணி நேரத்திற்கு மேல் அலைச்சறுக்கு செய்து வீரர் அசத்தல்
சென்னை பத்மாவதி தாயார் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்.. .சாரல் மழையில் கண் குளிர தரிசனம்..!!