SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குடியரசு தின விழா தேநீர் விருந்துக்கு வருமாறு முதல்வருக்கு ஆளுநர் அழைப்பு: தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்

2023-01-26@ 00:16:09

சென்னை: தமிழ்நாட்டில் ஆளுநர் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளநிலையில், திடீரென்று முதல்வர் மு.க.ஸ்டாலினை ஆளுநர் ஆர்.என்.ரவி தொலைபேசியில் தொடர்பு கொண்டு, மாளிகையில் இன்று நடைபெறும் தேநீர் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார். அவரது செயலாளர் நேரில் சந்தித்து அழைப்பிதழ் வழங்கினார். அதேநேரத்தில், ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் என உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அறிவித்துள்ளனர்.

குடியரசு தினத்தையொட்டி,   ஒவ்வொரு ஆண்டும் காலையில் மெரினா கடற்கரை சாலையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் ஆளுநர் பங்கேற்று தேசியக் கொடியை ஏற்றி வைப்பது வழக்கம். அன்று மாலையில், சென்னை, கிண்டியில் உள்ள தன்னுடைய மாளிகையில் தேநீர் விருந்து அளிப்பது மரபாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.  இதில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு விருந்தில் பங்கேற்க ஆளுநர் அழைப்பு விடுப்பார்.

அதன்படி, இந்தாண்டும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அனைத்து கட்சி நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். ஆனால், தேநீர் விருந்தில் பங்கேற்க மாட்டோம் என விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்திருந்தார். இந்தநிலையில், தற்போது ஆளுநரின் தேநீர் விருந்தில் திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.

ஏற்கனவே, ஆளுநர் ஆர்.என்.ரவி அண்மையில் சென்னையில் நடந்த விழா ஒன்றில் தமிழ்நாடு என்பதை தமிழகம் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும் என்றார். அதனை தொடர்ந்து சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆளுநரின் தொடக்க உரையில் சில வார்த்தைகளை சேர்த்தும், சில வார்த்தைகளை தவிர்த்தும் படித்தார். இதற்கு எதிராக உடனடியாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்மானத்தை முன்மொழிய பாதியிலேயே சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் கிளம்பினார். மேலும் அவர் படிக்காமல் விட்ட பகுதிகளும் பேரவை குறிப்பில் இடம்பெறவேண்டும் என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலினின் இந்த அதிரடி நடவடிக்கையால், தமிழக அரசியலில் புதிய பரபரப்பு ஏற்பட்டது. மேலும் ஆளுநருக்கு எதிராக போராட்டங்களும் நடந்தன.

அதைத் தொடர்ந்து தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி மீது, குடியரசு தலைவர் திரவுபதி முர்முவிடம் திமுக சார்பில் புகார் செய்யப்பட்டது. இது குறித்து விசாரிக்கும்படி அவர் ஒன்றிய உள்துறை அமைச்சகத்துக்கு அந்த புகார் மனுவை அனுப்பி வைத்தார். அதைத் தொடர்ந்து ஒன்றிய அரசும், ஆளுநருக்கு சில அறிவுரைகளை வழங்கியதாக கூறப்படுகிறது.
இதன் பின்னர் ‘‘தமிழ்நாடு’’ சர்ச்சைகளுக்கு விளக்கம் அளிக்கும் விதமாக ஆளுநர் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இருப்பினும், ஆளுநரின் தொடர் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ஆளுநரை திரும்ப பெறவும் திமுக கூட்டணி கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

மேலும், 20க்கும் மேற்பட்ட மசோதாக்கள் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்ட நிலையில், அவை இன்றளவும் கிடப்பில் போடப்பட்டுள்ளன. அதேபோல், தமிழ்நாட்டிற்கு எதிரான சில நடவடிக்கைகளில் ஆளுநர் மாளிகை ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு காங்கிரஸ், மதிமுக, மாக்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட திமுகவின் கூட்டணி கட்சிகள், ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.

அதேநேரத்தில் சட்டப்பேரவை கூட்டம் முடிந்ததும் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற தேநீர் விருந்தையும், பொங்கல் நாளான்று நடந்த தேநீர் விருந்தையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள் புறக்கணித்தனர்.  இந்தநிலையில், தமிழகத்தில் பெரும்பாலான கட்சிகள் தேநீர் விருந்தை புறக்கணித்ததால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் கடும் அதிர்ச்சி அடைந்தன.

இந்தநிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் நேற்று மாலை தொடர்பு கொண்டு, இன்று மாலை குடியரசு தின விழாவுக்காக ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். அதைத் தொடர்ந்து, ஆளுநரின் செயலாளர், முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து அழைப்பிதழையும் வழங்கினார். சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுத்த அதிரடி நடவடிக்கைக்குப் பிறகு ஆளுநரின் நடவடிக்கையில் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கியுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். தனது மோதல் போக்கை கொஞ்சம், கொஞ்சமாக மாற்றி வருவதாகவும் கூறப்படுகிறது.

ஆளுநரின் தேநீர் விருந்து புறக்கணிப்பு குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
செல்வப்பெருந்தகை (காங்கிரஸ் சட்டமன்ற தலைவர்):
பல மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பது கண்டனத்துக்குரியது. எனவே, ஆளுநரின் தேநீர் விருந்து நிகழ்ச்சியை தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்கின்றோம்.
பாலகிருஷ்ணன் (மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர்):  மசோதாக்களை கிடப்பில் போட்டு, அரசின் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டை கொடுத்து வருகிறார். எனவே ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிக்கிறோம்.
முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர்): ஆளுநர் தன் அரசியல்  அமைப்புச் சட்ட கடமைகளை  நிறைவேற்றவில்லை. எனவே, அவர் அழைப்பு விடுத்துள்ள தேநீர்  விருந்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக்குழு புறக்கணிக்கின்றது.
இதுபோல, பல்வேறு கட்சிகள் தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் நடைபெறவுள்ள தேநீர் விருந்தில் பங்கேற்காமல் புறக்கணிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • erode-senthilbalaji-8

    சூடுபிடித்தது ஈரோடு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம்..!!

  • athisayangal

    நிலநடுக்கத்தை எதிர்த்து வானுயர்ந்து நிற்கும் பொறியியல் அதிசயங்கள்

  • perunad

    பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!

  • turkeydeath11

    துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!

  • lantern-festival-china

    உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்