SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மிகப்பெரும் கவுரவம்

2023-01-25@ 00:10:22

‘உழுதவன் கணக்கு பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது’ என்பது ஒரு பழமொழி. இது உண்மை தான். நாட்டின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகளுக்கு நிலவும் அவலமும், தொடரும் துயரமும் இதை உறுதிப்படுத்திக் கொண்டு இருக்கிறது. ஆனால், இந்த பழமொழியை போகியில் எரித்த சாம்பலாய் பொசுக்கி போட்டுள்ளது தமிழ்நிலம். உழவர்களுக்காகவே அரசே கணக்கிட்டு, வாழ்வு மேம்பட வழிவகுத்தது இதன் பெருமிதம். தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றிலேயே முதல் முறையாக, வேளாண்துறைக்கு தனி பட்ஜெட்டை சமர்ப்பித்து புதிய அத்தியாயத்தை துவங்கி வைத்தவர் நமது முதல்வர் மு.க.ஸ்டாலின்.

இயற்கை வேளாண்மைக்கு தனிப்பிரிவு, மரபுசார் நெல்ரகங்கள் பாதுகாப்பு இயக்கம், இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோர் ஆக்குதல், ஊரக இளைஞர் வேளாண்திறன் மேம்பாட்டு இயக்கம், சிறுதானிய இயக்கம், ஏற்றம் தரும் எண்ணெய் வித்துக்கள் திட்டம், சீர்மிகு தென்னை சாகுபடி, அண்ணா பண்ணை மேம்பாட்டுத்திட்டம், கூட்டுப்பண்ணை திட்டம், மாநில அளவிலான வேளாண் உயர்நிலைக்குழு, சிக்கன நீர்ப்பாசன திட்டம் என்று அவர் அறிவித்த திட்டங்கள் ஒவ்வொன்றும் ஒன்றையொன்று விஞ்சி நின்று பாராட்டுகளை குவித்தது.

இது மட்டுமன்றி, சென்னையில் மரபுசார் வேளாண்மைக்கான அருங்காட்சியகம், கடலூரில் பலாவிற்கான சிறப்பு மையம், வடலூரில் புதிய அரசு தோட்டக்கலை பூங்கா, பண்ருட்டி, ஒட்டன்சத்திரத்தில் ரூ.10 கோடியில் குளிர்பதன கிடங்குகள், சென்னை, திருச்சி, கோவை, சேலம், திருப்பூர் மாவட்டங்களில் இல்லம் தேடி பண்ணைக் காய்கறிகள் வழங்கும் நடமாடும் காய்கனி அங்காடிகள், கொல்லிமலையில் மிளகு பதப்படுத்தும் மையம், முருங்கை ஏற்றுமதி மண்டலம், சென்னை கொளத்தூரில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களுக்கான நவீன விற்பனை மையம், நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம் என்ற அறிவிப்புகள் அனைத்தும், விவசாயத்தை உச்சத்தில் சேர்ப்பதற்கான அடித்தளங்கள்.

இப்படிப்பட்ட நிலையில் விவசாயிகள், விஞ்ஞானிகள், பொதுமக்களின் கருத்துகளை உள்வாங்கி, அதன் அடிப்படையில் வேளாண் பட்ஜெட் தயாரிக்கப்படும் என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்பு, ஒட்டுமொத்த மக்களுக்கும் அரசு வழங்கியுள்ள மிகப்பெரும் கவுரவமாக மாறி நிற்கிறது. இதில் விவசாயிகள் மட்டுமின்றி சங்கங்களின் பிரதிநிதிகள், விளைபொருள் ஏற்றுமதியாளர்கள், வேளாண் ஆர்வலர்கள் என்று அனைவரும் தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் நேரடியாக கருத்துகள் கேட்டுப்பெறப்படுகிறது. இது மட்டுமன்றி இதற்காக தனி வாட்ஸ்அப் எண்ணையும் அரசு அறிவித்துள்ளது.

இதில் ஆர்வத்துடன் ஆயிரமாயிரம் கருத்துகளை, லட்சோபலட்சம் மக்கள் தெரிவித்து வருகின்றனர். இது விவசாயிகளின் பிரச்னைகள் மட்டுமன்றி, அதற்கான தீர்வுகளுக்கும் வழிகாட்டியாக அமையும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. எழுச்சியூட்டும் எதிர்க்கட்சியாக இருந்த போது, ‘மக்களிடம் செல், மக்களிடம் பேசு, மக்களின் பிரச்னைகளை அறிந்து போராடு’ என்று தம்பிகளுக்கு அறிவுறுத்தினார் அறிஞர் அண்ணா. அப்படி பல்வேறு போராட்டங்களுக்கு பிறகே உதயமானது திமுக ஆட்சி. ஆட்சியில் இருந்தாலும், அதிகார கர்வம் துளியும் இல்லாமல், மக்களிடமே சென்று கருத்துகளை கேட்டு, அதற்கேற்ற வகையில் பட்ஜெட் போட்டு, நாட்டுக்கு நன்மை செய்து நலம் சேர்ப்பதிலும், அண்ணாவின் தம்பிகளுக்கு நிகரானவர்கள் யாருமில்லை என்பதற்கும் இந்த பட்ஜெட் கருத்தாய்வு  ஒரு சிறந்த உதாரணம்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்