SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இதுவே சிறந்த வழி

2023-01-24@ 00:06:49

நீட் விலக்கு மசோதா உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் ஒன்றிய அரசு பாரபட்சமாக நடந்து வருகிறது. பாஜ ஆளும் மாநிலங்கள் வைக்கும் கோரிக்கைகளுக்கு உடனே செவிசாய்த்து நடவடிக்கை எடுப்பதும், பிற மாநிலங்களின் கோரிக்கைகளுக்கு விளக்கம் கேட்கிறோம் உள்ளிட்ட காரணங்களை கூறி நீர்த்து போக செய்யும் முயற்சியில் ஒன்றிய அரசு இறங்கியுள்ளது. நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களும் வளர்ச்சி அடைந்தால் மட்டுமே நாடு வல்லரசு என்ற இலக்கை அடைய முடியும் என்பதை ஒன்றிய அரசு அழுத்தமாக புரிந்து கொள்ள வேண்டும்.

குறிப்பாக, நிதி ஒதுக்குவதிலும், வளர்ச்சி திட்டங்களை அறிவிப்பதிலும் பாரபட்சமின்றி ஒன்றிய அரசு நடந்து கொள்ள வேண்டியது மிக அவசியம். நீட்விலக்கு மசோதா விவகாரத்தில் ஒன்றிய அரசு இழுத்தடித்து வருவது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. முக்கியமாக, தமிழ்நாடு அரசு சட்ட, கல்வி மற்றும் மருத்துவ நிபுணர்களை கொண்ட உயர்மட்ட குழு ஆராய்ந்து தந்த அறிக்கையின் அடிப்படையில் நீட் விலக்கு கோரிய மசோதா சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து, நீட்விலக்கு மசோதா குடியரசு தலைவர் ஒப்புதலுக்காக 2021 செப்டம்பர் மாதம் அனுப்பி வைக்கப்பட்டது.

சட்ட மசோதாவை விளக்கம் கேட்கிறோம் என்ற பெயரில் ஆளுநர், பின்னர் ஒன்றிய அரசு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக முடக்கி வைத்துள்ளது. மாநிலங்களில் இருந்து அனுப்பப்படும் சட்ட மசோதாவிற்கு விளக்கம் உள்ளிட்ட காரணங்களை கேட்பது நல்லது தான். ஆனால், ஆண்டு கணக்கில் முடக்கி வைத்து விட்டு, பெயரளவுக்கு அவ்வப்போது விளக்கம் கேட்கிறோம் என்று கூறுவது ஏற்புடையதல்ல. சட்ட மசோதா அனுப்பிய உடனே அல்லது சில வாரங்கள் கழித்த பிறகு கூட அதற்குரிய விளக்கங்களை கேட்டு பெறலாம்.

அவ்வாறு ஒன்றிய அரசு செய்யாமல் இருந்தது ஏன்? இதன் மூலம் நீட்விலக்கு மசோதாவை நீர்த்து போக செய்யும் சூழ்ச்சி நடந்து வருகிறதா என்ற கேள்வியும் அழுத்தமாக எழுந்துள்ளது. நீட் விலக்கு மசோதா விவகாரத்தில், ஒன்றிய அரசின் உண்மையான முகம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மாநில சட்ட பேரவையின் இறையாண்மைக்கு மதிப்பு அளித்து நடந்து கொள்ள வேண்டிய கடமை ஒன்றிய அரசுக்கு உள்ளது. நீட் விலக்கு மசோதாவில் ஒன்றிய அரசு காலதாமதம் செய்து வருவதால், மாணவர்கள் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.

அடுத்த கல்வி ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை நடவடிக்கைகள் விரைவில் தொடங்க உள்ளதால், நீட் விலக்கு மசோதாவை குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பும் முயற்சியில் இறங்க வேண்டியது மிக அவசியம். முக்கியமாக, நீட் விலக்கு மசோதா விவகாரத்தில் ஒன்றிய அரசு பிடிவாதம் கொள்ள வேண்டாம். நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களையும் சமமாக ஒன்றிய அரசு எண்ண வேண்டும். மாணவர்களின் எதிர்கால விஷயங்களில் ஒன்றிய அரசு காலதாமதம் செய்து வருவது ஏன்? தமிழ்நாடு மீது பாசம் உள்ளது போல் அவ்வப்போது காட்டிக்கொள்வதையும், தமிழ்நாடு அரசின் முக்கிய கோரிக்கைகளை கண்டு கொள்ளாமல் இருப்பதையும் ஒன்றிய அரசு வாடிக்கையாக வைத்துள்ளது.

ஒன்றிய அரசின் நாடகம் தமிழ்நாட்டு மக்களிடம் எடுபடாது. மேலும், நீட்விலக்கு மசோதாவில் ஒன்றிய அரசு நாடகம் ஆடி வருவது மக்களுக்கு நன்றாக தெரிந்து விட்டது. அதை மறைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இனியும் காலதாமதம் செய்யாமல் குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டும். இல்லாவிட்டால் அரசமைப்பு சட்டத்தை காக்கின்ற பொறுப்புள்ள குடியரசு தலைவர், நீட் விலக்கு மசோதாவை தானே நேரடியாக கோரி பெற்று ஒப்புதலை வழங்க வேண்டும். இதுவே நீட் விலக்கு மசோதா ஒப்புதல் பெற சிறந்த வழி.

Like Us on Facebook Dinkaran Daily News
  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்