SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தலைநிமிர்ந்த பாரம்பரியம்

2023-01-19@ 00:18:00

தைப்பொங்கல் திருவிழாவை முன்னிட்டு கடந்த 15ம் தேதி பொங்கலன்று அவனியாபுரம், மாட்டுப் பொங்கலன்று பாலமேடு, காணும் பொங்கலன்று அலங்காநல்லூர் என மதுரை மாவட்டத்தில் அடுத்தடுத்து நடந்த ஜல்லிக்கட்டு போட்டிகள் தென்மாவட்ட மக்களை உற்சாக வெள்ளத்தில் மிதக்க வைத்துள்ளன. மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதில், இரு தரப்பினரிடையே எழுந்த பிரச்னையால் நடக்குமா என்ற சந்தேகம் எழுந்தது. அரசின் சமாதான பேச்சு, சாமர்த்தியமான நடவடிக்கைகளால் பிரச்னையின்றி ஜல்லிக்கட்டு நடந்தது. மாட்டுப்பொங்கலன்று பிரமாண்ட திடலில் நடந்த பாலமேடு ஜல்லிக்கட்டுதான் மதுரை மாவட்ட ஜல்லிக்கட்டில் அதிக காளைகள் களமாடிய பெருமையை பெற்றது. மொத்தம் 889 காளைகள் களமிறங்கி காளையரை பந்தாடின. தொடர்ந்து அகில உலகமும் எதிர்பார்த்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நேற்று முன்தினம் நடந்தது. இம்முறை 3 போட்டிகளிலுமே முதலிடம் பெற்ற வீரர்கள், 20க்கும் மேற்பட்ட காளைகளை அடக்கி உள்ளது பாராட்டிற்குரியது.

கடந்த அதிமுக ஆட்சியில் நடந்த ஜல்லிக்கட்டில் ஆள் மாறாட்டம் உள்பட பல்வேறு குளறுபடிகள் நடந்தன. திமுக ஆட்சிக்கு வந்த பின் கடந்தாண்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் மிகச்சிறப்பாக நடந்தன. அதேபோல இம்முறையும் வீரர்கள், காளைகள் முன்பதிவு ஆன்லைனில் நடத்தப்பட்டது. காளைகள் டோக்கன் வரிசைப்படியே முறையாகவே அனுப்பப்பட்டன. உடல் தகுதி அடிப்படையிலேயே காளைகள், வீரர்கள் களமிறக்கப்பட்டு போட்டிகள் நடந்தன. மேலும், ஜல்லிக்கட்டு உள்ளிட்ட வீர விளையாட்டு போட்டிகளில் விலங்குகள் துன்புறுத்தப்படுவதை தடுக்க உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, விலங்குகள் நல வாரியம் சார்பில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவினர் ஜல்லிக்கட்டு, கம்பலா உள்ளிட்ட காளைகள் பங்கேற்கும் போட்டிகளை பார்வையிட்டு மத்திய அரசுக்கு அறிக்கை அளிப்பர். மிட்டல் தலைமையிலான இக்குழுவினர் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளை முழுமையாக ஆய்வு செய்தனர். போட்டிகளுக்கு பின் மிட்டல் கூறும்போது, ‘‘கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்தாண்டு ஜல்லிக்கட்டு போட்டிகளை தமிழ்நாடு அரசு மிகச்சிறப்பாக நடத்தி உள்ளது. நாங்கள் வகுத்து கொடுத்த விதிமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டன. வீரர்களும் சரியான அளவில் போட்டியில் களமிறக்கப்பட்டனர். இதனால் அதிகளவிலான காயங்கள் தவிர்க்கப்பட்டன. தமிழ்நாட்டு மக்கள் காளைகளை குழந்தையாக பாவித்து வளர்க்கின்றனர்.

பாரம்பரியமிக்க ஜல்லிக்கட்டு தேசிய அங்கீகாரம் பெற, பிரதமர் மற்றும் ஒன்றிய அமைச்சர்களிடம் பரிந்துரைக்கப்படும்’’ என கூறி உள்ளார். விலங்குகள் நல வாரிய கண்காணிப்புக்குழு தலைவரே, தமிழ்நாடு அரசின் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகளை பாராட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது. ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்குகளில் இது முக்கிய கருத்தாக ஏற்கப்படும் வாய்ப்புகள் உள்ளன. இம்முறை ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் அனைத்து வீரர்கள், காளைகளின் உரிமையாளர்கள், போலீசார் உள்ளிட்டோருக்கு உணவு, தங்குமிடம், காளைகளுக்கு குடிநீர், தீவனம் உள்ளிட்ட வசதிகளும் தரமாகவே செய்யப்பட்டிருந்தன. தமிழ்நாட்டு மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றி வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழரின் பாரம்பரியத்தை உலக அரங்கில் மீண்டும் தலைநிமிர செய்திருக்கிறார்.

Like Us on Facebook Dinkaran Daily News
 • spain-trees-24

  ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

 • gandhi-13

  ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

 • taipei-fashion-week-taiwan

  தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

 • kalifffo1

  தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

 • pak-123

  பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்