SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முக்கிய பொறுப்பு

2022-12-06@ 00:21:56

இந்தியா உள்பட 20 வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பு கடந்தாண்டு இந்தோனேஷியாவிடம் இருந்தது. தொடர்ந்து, கடந்த மாதம் பாலி நகரில் ஜி-20 உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டின் முடிவில், ஜி-20 தலைமை பொறுப்பு இந்தியாவிடம் வழங்கப்பட்டது. ஜி-20 தலைமை பிரதமர் மோடியிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து, டிசம்பர் 1ம் தேதி ஜி-20 தலைமை பொறுப்பை இந்தியா அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டது. இது மிக முக்கியமான பொறுப்பு. உலகின் சக்தி வாய்ந்த அமைப்பான ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பில் உள்ள இந்தியா, ராஜதந்திர முறையில் செயல்பட வேண்டியது மிக அவசியம்.

பல்வேறு விஷயங்களுக்கான தீர்வை உலக நாடுகள் இந்தியாவிடம் எதிர்பார்க்கிறது. எனவே, உலகிற்கு மிக சிறந்த ஆக்கப்பூர்வமான ஆலோசனை வழங்க வேண்டும். ஜி-20 மாநாடு தொடர்பாக, 32 துறைகளின் சார்பில் 200 ஆலோசனை கூட்டங்களை நாட்டின் முக்கிய நகரங்களில் நடத்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இவ்விஷயத்தில் மாநிலங்களுக்கு இடையே எவ்வித பாகுபாடும் இல்லாமல் ஒன்றிய அரசு நடந்து கொள்ள வேண்டும். முக்கியமாக, எரிசக்தி பாதுகாப்பு, உணவு பாதுகாப்பு, சுகாதாரம், காலநிலை உள்ளிட்ட பிரச்னைகளில் இந்தியா தனது குரலை தெரிவிக்க வேண்டியது கட்டாயம். குறிப்பாக, காலநிலை குறித்து வல்லரசு நாடுகள் உள்பட அனைத்து நாடுகளும் பேசி வருகின்றன.

ஆனால், ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுத்து, அதற்கு தீர்வு காண முடியவில்லை. ஒரு விஷயத்திற்கு நிரந்தர தீர்வு வேண்டும் என்றால், உலக நாடுகளுக்கு இடையே முதலில் கருத்து ஒற்றுமை இருக்க வேண்டியது அவசியம். அப்போது தான் பிரச்னைக்கு தீர்வு காண முடியும். உலக நாடுகள் நினைத்திருந்தால் காலநிலை உள்பட பல பிரச்னைகளுக்கு தீர்வு கிடைத்திருக்கும். முக்கியமாக, ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பில் உள்ள ஒன்றிய அரசு வளர்ந்து வரும் நாடுகளின் நலன்களை பாதுகாக்கும் வகையில் செயல்பட வேண்டும். தற்போது, ஐரோப்பியா உள்பட பல நாடுகள் சந்தித்து வரும் பொருளாதார வீழ்ச்சியை மேம்படுத்தும் வகையில் புதிய பொருளாதார ஒப்பந்தங்களை ஏற்படுத்த வேண்டியது அவசியம்.

குறிப்பாக, உக்ரைன்- ரஷ்யா இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வருவதில் இனி இந்தியா தீவிர முயற்சி மேற்கொள்ள வேண்டியது அவசியம். இது எளிதான காரியம் கிடையாது. உக்ரைனுடனான போர் குறித்து, ரஷ்யாவிடம் இந்தியா தனது கருத்துகளை வலுவாக பதிவு செய்ய வேண்டும். உக்ரைன்-ரஷ்யா போர் பல ஆண்டுகள் நீடித்தாலும் ஆச்சரியமில்லை. போர் நிறுத்தத்திற்கு ரஷ்ய அதிபர் புடின் சம்மதிக்கமாட்டார். இவ்விஷயத்தில் ராஜதந்திர முறையில் இந்தியா செயல்பட்டு போரை முடிவுக்கு கொண்டு வந்து விட்டால் வரலாற்று சிறப்பு மிக்கதாகும்.

 உலக அளவில் நிலவி வரும் பிரச்னைகளுக்கு எவ்வாறு தீர்வு காண வேண்டும். அதற்கான திட்டங்கள், செயல்பாடுகள் குறித்தும் மற்றும் சுகாதார மேம்பாடு குறித்தும் புதிய ஆலோசனையை இந்தியா தெரிவிக்க வேண்டும். ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பில் பல நாடுகள் இருந்தாலும், முக்கிய ஆலோசனையை தெரிவிக்காமல் போனது துரதிர்ஷ்டவசமானது. ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பில் உள்ள இந்தியா, இக்கட்டான நேரங்களிலும் முக்கிய முடிவுகளை எடுப்பதிலும் மிக சிறந்து விளங்கி உலகிற்கே வழிகாட்டியது என்ற பெருமையை அடைய வேண்டும். அதற்கு, ராஜதந்திர முறையை இந்தியா கடைபிடித்து உலகை வழி நடத்த வேண்டியது அவசியம். வளர்ந்து வரும் நாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதன் மூலம் அவர்கள் இந்தியாவிடம் நட்பாக இருப்பார்கள்.

Like Us on Facebook Dinkaran Daily News
 • orange-tree-wishes-27

  ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!

 • pet-fesitival-mumbai

  மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி

 • france-reform

  பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!

 • new-parliament-pic-20

  பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!

 • cong-ravi-19

  தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்