SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புதிய தொடக்கம்

2022-12-04@ 00:07:13

குஜராத் மாநிலத்தில் 13 ரிசர்வ் தொகுதிகள் உள்பட மொத்தம் 182 தொகுதிகள் உள்ளன. குஜராத் மாநில அரசின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு (2023) பிப்ரவரி மாதம் 18ம்தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதில் டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து 89 தொகுதிகளுக்கான முதல்கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மீதமுள்ள 93 தொகுதிகளுக்கான 2ம்கட்ட தேர்தல் நாளை (5ம்தேதி) நடக்கிறது. தேர்தல் முடிவுகள் வரும் 8ம்தேதி வெளியிடப்படுகிறது.

தற்போதைய நிலவரப்படி குஜராத்தில் 4.9 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஆண் வாக்காளர் 2.53 கோடி ேபரும், பெண் வாக்காளர் 2.37 கோடி பேரும் உள்ளனர். குஜராத்தை பொறுத்தவரை 1995ம் ஆண்டு, முதன்முதலாக பாஜ ஆட்சிக்கு வந்தது. இதையடுத்து கடந்த 27 ஆண்டுகளாக பாஜ ஆட்சியே தொடர்ந்து வருகிறது. 1995 தேர்தலில் பாஜ 121 இடங்களில் வென்றது. காங்கிரசுக்கு 45 இடங்கள் மட்டுமே கிடைத்தது. 1998ல் நடந்த தேர்தலில் பாஜவின் பலம் 117ஆக சரிந்தது. 2002ல் நடந்த தேர்தலில் தற்போதைய பிரதமர் மோடி, குஜராத் முதல்வராக முன்னிறுத்தப்பட்டார்.

அப்போது நடந்த தேர்தலில் 127 இடங்களில் பாஜ வென்றது. 2007ல் மீண்டும் மோடியை முதல்வர் வேட்பாளராக நிறுத்தி போட்டியிட்ட போது 117 இடங்களில் மட்டுமே பாஜ வென்றது. 2017ல் 150 தொகுதிகளை குறிவைத்து போட்டியிட்ட பாஜவுக்கு 99 தொகுதிகள் மட்டுமே கிடைத்தது. ஆனால் காங்கிரஸ் கட்சி 77 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்த வகையில் பிரதமர் மோடி முதல்வராக இருந்த காலகட்டத்தை ‘குஜராத் மாடல்’ என்று வடிவமைத்து பிரசாரம் செய்து வரும் பாஜ, அங்கு அடுத்தடுத்து நடந்த தேர்தல்களில் சரிவையே சந்தித்து வருகிறது. ஆனால் வளைக்கப்படும் வெற்றி, அவர்களின் குஜராத் மாடலுக்கு உயிரூட்டிக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் நாடு முழுவதும் பாஜ மீது தொடரும் அதிருப்தி, குஜராத்தில் ஆம்ஆத்மியின் அசுர வளர்ச்சி, நாடு முழுவதும் பரவலாக பேசப்படும் ராகுலின் நடைபயணம் என்று அனைத்தும் பாஜவே மீண்டும் வெல்லும் என்று திணிக்கப்படும் கணிப்புகளுக்கு உலை வைக்கும் நிலையை உருவாக்கி உள்ளது என்றே அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள். இதனால் கொஞ்சம் வயிற்றில் புளியை கரைத்துவிட்டது என்றே சொல்லுமளவுக்கு மண்ணின் மைந்தர்களான பிரதமர் மோடியும், அதிகார மையமான அமித்ஷாவும் அங்கேயே ஒரு மாதமாக முகாமிட்டுள்ளனர்.

இலவசம் என்பதை ஏளனம் செய்தவர்கள், அதை தங்களது தேர்தல் அறிக்கையில் பிரதானமாக்க வேண்டிய நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர். இவை அனைத்தையும் ஜனநாயகத்தை தூக்கி நிறுத்தும் வாக்காள பெருங்குடி மக்கள் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கின்றனர். வரும் 8ம்தேதி இவர்கள் தரப்போகும் தீர்ப்பு, குஜராத்தில் மட்டுமல்ல, 2024ம் ஆண்டு வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலில் நாட்டின் தலையெழுத்தை மாற்றும் புதிய தொடக்கத்திற்கான புள்ளியாகவும் இருக்கும் என்பது மட்டும் நிதர்சனம்.

Like Us on Facebook Dinkaran Daily News
 • orange-tree-wishes-27

  ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!

 • pet-fesitival-mumbai

  மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி

 • france-reform

  பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!

 • new-parliament-pic-20

  பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!

 • cong-ravi-19

  தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்