SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாரம்பரியம் காப்போம்

2022-12-01@ 00:44:56

ஜல்லிக்கட்டுக்கான காலம் நெருங்க, நெருங்க நெருக்கடியான ஒரு சூழல் கடந்த சில ஆண்டுகளாகவே உருவாக்கப்படுகிறது. இம்முறை மீண்டும் அதுபோன்றதொரு சூழல் உருவாகி உள்ளது. புலி, சிறுத்தை, சிங்கம், கரடி போன்ற விலங்குகளை தொடர்ந்து, காட்சிப்படுத்தக் கூடாத வன விலங்குகள் பட்டியலில் காளையும் சேர்க்கப்பட்டது. இதனால், ஜல்லிக்கட்டுக்கு சிக்கல் ஏற்பட்டது. பீட்டா உள்ளிட்ட விலங்குகள் அமைப்பு எதிர்ப்பை தொடர்ந்து, 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. ஜல்லிக்கட்டை மீண்டும் நடத்த அனுமதிக்கக் கோரி வழக்குகள் தொடரப்பட்டன.

இதையடுத்து நீதிமன்றங்கள் சில கட்டுப்பாடுகளை விதித்தன. அதாவது, பாரம்பரியமாக நடத்தப்படும் ஜல்லிக்கட்டு, ரேக்ளா ரேஸ் போன்றவற்றை நிபந்தனையுடன் நடத்தலாம். விலங்குகள் துன்புறுத்தப்படக் கூடாது. கலெக்டர் அல்லது மாஜிஸ்திரேட் அனுமதியுடன் நடத்தலாம். விலங்குகள் நல வாரியத்தினர் போட்டிகளை கண்காணிக்க வேண்டுமென தெரிவித்தன. ஆனாலும், கடந்த 2017ம் ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்துவதில் மீண்டும் பிரச்னை எழுந்தபோது, தமிழகமெங்கும் போராட்டங்கள் வெடித்தன. இதையடுத்து தமிழக அரசு சார்பில் அவசர சட்டம் நிறைவேற்றப்பட்டு போட்டிகள் நடந்தன. இருப்பினும், பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டு, கம்பளா போட்டிகளுக்கு தடை விதிக்கக்கோரி தொடர்ந்து வழக்கு தொடர்ந்தன.

இந்த வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், முன்வைத்த கருத்துக்கள் மிகவும் முக்கியமானவை. ‘‘மனிதர்கள் காயப்படுகின்றனர், உயிரிழக்கின்றனர் என்ற காரணத்திற்காக ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்க வேண்டும் என கேட்பீர்களா? இதே காரணத்தை கூறி குத்துச்சண்டை போட்டிகளுக்கும் தடை கேட்பீர்களா...’’ என கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்கு பீட்டா அமைப்பு தரப்பில், வரதட்சணை, குழந்தை திருமணம் போல, ஜல்லிக்கட்டும் தடுக்கப்பட வேண்டியதென தெரிவித்துள்ளனர். இந்த கருத்துக்களை எப்படி எடுத்துக் கொள்வதென்று தெரிவதில்லை.

குழந்தை திருமணமும், ஜல்லிக்கட்டு போட்டியும் எப்படி ஒன்றாகும். ஏறு தழுவுதல் என துவங்கி, பல நூறு ஆண்டுகளாக காளைகளை வளர்த்து, வாழ்ந்து, அதனோடு புழுதியில் உருண்டு, புரண்டு வாழ்ந்தவன் தமிழன். ஒரு ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பது, மல்யுத்த வீரரை வளர்ப்பதற்கு சமம். மாதந்தோறும் காளை வளர்ப்புக்காக பல ஆயிரங்களை செலவிட வேண்டும். சத்தான உணவு வகைகளை கொடுக்க வேண்டும். மனிதர்களை போலவே, தினந்தோறும் காளைகளுக்கு நடைப்பயிற்சி, நீச்சல் பயிற்சி என அளிக்க வேண்டும். இன்னும் சொல்லப்போனால், ஜல்லிக்கட்டு காளைகளை தெய்வமாகவே மதிக்கும் பழக்கம் தென்மாவட்ட மக்களிடையே உள்ளது.

செல்லப்பிள்ளை போல வளர்த்த காளைகளோடு, வீரமாய் தழுவும் ஒரு விளையாட்டாகவும், விவசாயம் செழிப்பதற்கான ஒரு சம்பிரதாய நிகழ்வாகவும் ஜல்லிக்கட்டை, தைப்பொங்கல் திருநாளில் தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர். இதை பீட்டா போன்ற அமைப்புகள் புரிந்து கொள்ளவேண்டும். விலங்குகள் துன்புறுத்தல், காயம், பலி ஏற்படுகிறது என்ற சாக்குேபாக்கு காரணங்கள் ஏற்புடையதல்ல. விபத்துகள் ஏற்படுவதற்காக, வாகன பயணங்களை தவிர்த்து வாழ முடியுமா? தொடர் வழக்குகளால் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு ஏற்படும் தொடர் சிக்கல் நிரந்தரமாக நீக்கப்பட வேண்டும். பாரம்பரிய, வீர விளையாட்டாகவே கருதி, ஜல்லிக்கட்டை பிரச்னையின்றி நடத்த சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும். காட்சிப்படுத்தக்கூடாத விலங்குகள் பட்டியலில் இருந்து காளையை நீக்க வேண்டுமென்பதே தமிழக மக்களின் நெடுங்கால வலியுறுத்தல்.

Like Us on Facebook Dinkaran Daily News
 • stalin-corp-31

  மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

 • long-whale-newyork

  35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்

 • pak-blast-30

  பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!

 • china-spring-festival

  சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!

 • orange-tree-wishes-27

  ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்