தலையீடு கூடாது
2022-11-30@ 00:54:26

கொலீஜியம் என்பது குடியரசுத் தலைவரின் பரிந்துரைப்படி இந்திய தலைமை நீதிபதி மற்றும் உச்சநீதிமன்றத்தின் நான்கு மூத்த நீதிபதிகள் என்று 5 பேரை கொண்ட ஒரு அமைப்பு. உச்சநீதிமன்ற நீதிபதிகளின் நியமனங்கள் மற்றும் பதவி உயர்வு, இடமாற்றம் ஆகியவற்றை இந்த அமைப்பே தீர்மானிக்கிறது. நீதித்துறையின் வேகமான பணிகளுக்கு கொலீஜியமே முதுகெலும்பு. கொலீஜியம் தனது பரிந்துரைகளை ஒன்றிய அரசுக்கு அனுப்ப வேண்டும். இதேபோல் ஒன்றிய அரசும், தனது முன்மொழியப்பட்ட சில பெயர்களை கொலீஜியத்திற்கு அனுப்புகிறது.
ஒன்றிய அரசின் பெயர்கள் மற்றும் பரிந்துரைகளை கொலீஜியம் பரிசீலிக்கும் நிலையில், இறுதி ஒப்புதலுக்கான கோப்பு மீண்டும் ஒன்றிய அரசுக்கு அனுப்பப்படுகிறது. இதுபோன்ற நிலையில் ஒன்றிய அரசு, தனது ஒப்புதலை வழங்க வேண்டும். ஆனால் ஒன்றிய அரசு, பதில் அனுப்புவதற்கான காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. இதை அடிப்படையாக வைத்தே ஒன்றிய அரசு, தற்போது நீதித்துறையிடம் விளையாட்டுக் காட்டியுள்ளது. நீதித்துறையில் நீதிபதிகளாக நியமனம் செய்ய கொலீஜியம் பரிந்துரைத்த பெயர்களை பரிசீலிப்பதில் ஒன்றிய அரசு தொடர்ந்து சில ஆண்டுகளாக தாமதம் செய்து வருகிறது. அரசின் இந்த தாமதம் நீதித்துறையை விரக்தியடைய செய்துள்ளது.
உச்சநீதிமன்றத்தின் 3 நீதிபதிகளைக் கொண்ட அமர்வு, நியமன செயல்முறையை முடிக்க வேண்டிய காலக்கெடுவை வகுத்துள்ளது. அந்த காலக்கெடுவை ஒன்றிய அரசு கடைபிடிக்க வேண்டும். கொலீஜியம் பரிந்துரைத்த சிலரின் பெயர்கள், ஒன்றரை ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. கடந்த காலங்களில் கூட, கொலீஜியம் பரிந்துரைத்ததில் ஒரு பெயரை மட்டுமே ஒன்றிய அரசு தேர்ந்தெடுத்துள்ளது. ஆனால், தற்போது கொலீஜியம் அனுப்பிய 20 கோப்புகளை ஒன்றிய அரசு திருப்பி அனுப்பியுள்ளது. இதனால் நாட்டிலுள்ள 25 உயர் நீதிமன்றங்களில் 402 நீதிபதி பணியிடங்களை நிரப்புவது முடங்கியுள்ளது.
மேலும் இது சீனியாரிட்டியையும் முற்றிலும் சீர் குலைக்கிறது. எனவே கொலீஜியம் எடுக்கும் முடிவுகளை ஒன்றிய அரசு, கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஒன்றிய அரசுக்கு கண்டனம் தெரிவித்து, பெருங்குட்டு ஒன்றை வைத்துள்ளது. குட்டு வாங்கிய பிறகு, நீதிபதிகள் விவகாரம் குறித்து நிச்சயமாக கவனிக்கிறோம் என்பது ஒன்றிய அரசு தரப்பின் பதிலாக கிடைத்துள்ளது. இந்திய அரசியல் வரலாற்றில் இதுபோன்ற மெத்தனப்போக்கு இதுவரை நடந்ததில்லை என்பதும் வேதனைக்குரிய தகவல்.
ஜனநாயகத்தின் நான்கு தூண்களின் முதல் தூணாக இருப்பது நீதித்துறை. இந்த தூணே, நாட்டின் கடைசி குடிமகனுக்கும் நம்பிக்கை ஒளியாக இன்றளவும் திகழ்ந்து கொண்டிருக்கிறது. இந்த தூண், எப்போதும் உறுதியாக இருக்க அடித்தளம் அமைத்துக் கொடுப்பது அரசின் தலையாய கடமையாக இருக்க வேண்டும். இங்கு அதிகாரம் செலுத்துபவர்கள், தனது பிரதிநிதிகளாக, தங்களுக்கு சாதகமாக இருக்க வேண்டும் என்ற எண்ண ஓட்டமே தள்ளிப்போகும் தாமதத்திற்கு முக்கிய காரணம். அடித்தட்டு மக்களுக்கு நீதி போதிக்கும் அரசு, அதன் நியமனங்களில் தலையீடுகளை தவிர்த்து தடையில்லா பயணத்திற்கு வழிவகுக்க வேண்டும் என்பது சமூக மேம்பாட்டு அமைப்புகளின் குரலாக ஒலிக்கிறது.
மேலும் செய்திகள்
சரிகிறதா சாம்ராஜ்யம்
ராகுலின் உறுதி
துணை நிற்போம்
குடியரசு கோலாகலம்
மிகப்பெரும் கவுரவம்
இதுவே சிறந்த வழி
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!