SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கல்வித்துறையில் வர்ணஜாலம்

2022-11-28@ 01:08:31

தமிழக கல்வித்துறையில் சமீபகாலமாக பல்வேறு புதுமைகள் புகுத்தப்பட்டு வருகின்றன. அரசு பள்ளிகள் என்றாலே ஏதோ மரத்தடியில் இயங்கும், கல்வித்தரமும் எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது என்ற மாயைகள் இப்போது உடைபடத் தொடங்கியுள்ளன. அரசு பள்ளிகளிலும் ஆங்கில வழிக்கல்வி, நான் முதல்வன் திட்டம், அரசு பள்ளிகளில் பயின்ற மாணவிகளுக்கு கல்லூரிகளில் ஊக்கத் தொகை உள்ளிட்ட திட்டங்கள் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையில் மாற்றத்தை உருவாக்கி வருகின்றன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் வகுப்பறைகள், கல்வி உபகரணங்கள், கழிப்பிடம், குடிநீர் வசதிகள் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளிலும் தமிழக அரசு இப்போது தனி அக்கறை காட்டி வருகிறது.

அனைத்து மாணவர்களின் தனித்திறன்களை வெளிப்படுத்தும் வகையில் ‘கலைத்திருவிழா’ திட்டமும் மாணவர்கள் சமுதாயத்தை மறுமலர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. பேச்சு, ஓவியம் உள்ளிட்ட கலைத்திறமைகள் கொண்ட மாணவர்கள் மாவட்ட அளவில் மட்டுமின்றி, மாநில அளவிலும் பள்ளியில் படிக்கும் காலத்திலே இனி சூரியனாக பிரகாசிக்க முடியும். தனித்திறமைகளை வளர்ப்பது ஒருபுறம் இருக்கட்டும், மாணவர்களின் அறிவியல், கணித ஆர்வத்தை தூண்டவும் மறுபுறம் திட்டம் தயார் நிலையில் உள்ளது. அதற்காக ரூ.25 கோடி மதிப்பில் ‘வானவில் மன்றம்’ என்னும் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் ‘எங்கும் அறிவியல், யாவும் கணிதம்’ என்பதாகும். ஏன், எதற்கு, எப்படி என்ற சாக்ரடீஸ் மனப்பாங்கில் எதையும் கேள்வி கேட்டு ஆராயும் பழக்கத்தை இளமை பருவத்திலே உருவாக்கிட இத்திட்டம் துணை நிற்கும். படிக்கும் காலத்தே படைப்பாற்றலை ஊக்குவிக்கவும் வழிகோலும். இதற்கென 710 ஸ்டெம் கருத்தாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் நடமாடும் அறிவியல் ஆய்வக வாகன வசதிகளோடு, மாணவர்களுக்கு பரிசோதனைகளை செய்து காண்பிப்பர். மேலும் மாணவர்கள் அவர்களோடு இணைய வழியில் உரையாடவும் முடியும்.

ஏட்டுக்கல்வி என்ற முறை மாற்றப்பட்டு, மாணவர்களும், ஆசிரியர்களும் சேர்ந்து தொழிற்சாலைகள், ஆராய்ச்சி நிறுவனங்கள், சுற்றுச்சூழல் சார்ந்த இடங்களுக்கு நேரடியாக சென்று அனுபவ கல்வியை பயிலவும் இத்திட்டத்தில் வழியுண்டு. இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரும்போது ஆசிரியர்களின் வகுப்பறை கற்பித்தல் எளிதாக்கப்படுவதோடு, அறிவியல், கணித பாடங்களில் மாணவர்களுக்கு மேம்பட்ட அறிவு கிட்டும். வானவில் மன்றத்தில் பாடங்களை கற்பிக்க ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சிகளும் வழங்கப்பட உள்ளன. அன்றாட வாழ்க்கையில் இருக்கும் அறிவியலை மாணவர்கள் படிக்கும்போது இனி உணர தொடங்குவர். கல்வித்துறையில் இன்று முதல் ‘வானவில் மன்றம்’ மூலம் நிகழவிருக்கும் வர்ணஜாலத்தை மாணவர்கள் மலர் தூவி வரவேற்க காத்திருக்கின்றனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
 • stalin-corp-31

  மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

 • long-whale-newyork

  35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்

 • pak-blast-30

  பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!

 • china-spring-festival

  சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!

 • orange-tree-wishes-27

  ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்