SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தாம்பரம் அருகே பிரபல நகைக்கடையில் லிப்ட் வழியாக உள்ளே இறங்கி ரூ.1.5 கோடி நகைகள் கொள்ளை: அசாமை சேர்ந்த சகோதரர்கள் 3 பேர் அதிரடி கைது

2022-11-27@ 00:25:52

சென்னை: தாம்பரம் அருகே பிரபல நடைக் கடையில் புகுந்து ரூ.1.5 கோடி மதிப்புள்ள தங்கம், வைர நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டன. இதுதொடர்பாக, துரித நடவடிக்கை எடுத்து 2 மணி நேரத்தில் கொள்ளையர்களான அசாமை சேர்ந்த அண்ணன், தம்பிகள் 3 பேரை போலீசார் மடக்கிப் பிடித்தனர். குற்றவாளிகளை கைது செய்த போலீசாரை தாம்பரம் மாநகர காவல் ஆணையர் பாராட்டி உள்ளார். தாம்பரம் - வேளச்சேரி பிரதான சாலையில் கவுரிவாக்கம் பகுதியில் ப்ளூ ஸ்டோன் என்ற தங்கம் மற்றும் வைர நகைகள் விற்பனை செய்யும் பிரபல நகைக்கடை உள்ளது. கீழ்தளம், முதல் தளம், 2ம் தளம் என கொண்டுள்ள நகை கடையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல வியாபாரம் முடிந்து, கடையை பூட்டிவிட்டு ஊழியர்கள் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில், நேற்று அதிகாலை சுமார் 4.30 மணியளவில் கடையின் மேலாளர் ஜெகதீசனின் செல்போனுக்கு எச்சரிக்கை ஒலி மற்றும் குறுஞ்செய்தி வந்துள்ளது.
ஆனால், கடையில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை பெங்களூருவில் உள்ள தலைமை அலுவலகத்தில் இருந்துதான் ஆய்வு செய்ய முடியும் என்பதால் ஜெகதீசன் பெங்களூருவில் உள்ள கடையின் தலைமை அலுவலக அதிகாரி ஒருவருக்கு தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அவர் அழைப்பை எடுக்காததால் கடையின் மற்ற 2 மேலாளர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார். பின்னர் கடையின் மேலாளர்கள் கடைக்கு வந்து கடையை திறந்து பார்த்தபோது கடையின் உள்ளே சுவர்களில் உள்ள கபோர்டுகளில் டிஸ்ப்ளேக்காக வைக்கப்பட்டிருந்த ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, காலை 6 மணி அளவில் கொள்ளை சம்பவம் குறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர், தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவின்பேரில் தாம்பரம் துணை கமிஷனர் சிபிசக்கரவர்த்தி, பள்ளிக்கரணை காவல் துணை ஆணையர் ஜோஸ் தங்கையா, பள்ளிக்கரணை போக்குவரத்து துணை ஆணையர் குமார், சேலையூர் காவல் உதவி ஆணையர் முருகேசன், பள்ளிக்கரணை காவல் உதவி ஆணையர் ரியாசுதீன், தாம்பரம் உதவி ஆணையர் சீனிவாசன், சிட்லபாக்கம் காவல் ஆய்வாளர் மகுடீஸ்வரி, பள்ளிக்கரணை காவல் ஆய்வாளர் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்தனர். மேலும், 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு சென்னை, ஆவடி, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு உட்பட்ட இடங்களில் போலீசார் உஷார்படுத்தப்பட்டு வாகன சோதனைகள் நடத்தப்பட்டன.

கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் சேகரிக்கப்பட்டது. தொடர்ந்து, கடையின் உள்ளே உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை சேகரித்து அதில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், ஒல்லியான உருவம் கொண்ட நபர் தனது சட்டையை கழற்றி முகத்தில் கட்டி முகத்தை மறைத்தபடி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. எனவே, போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சியில் பதிவான நபர் குறித்து அருகிலுள்ள கடைகளில் விசாரித்தனர். அப்போது, அங்கிருந்து டீக்கடைக்காரர் ஒருவர் கண்காணிப்பு கேமரா காட்சியில் பதிவாகி இருக்கும் நபர் செம்பாக்கம், சிவகாமி நகர், திருவள்ளுவர் தெருவில் வசித்து வந்த வடமாநிலத்தை சேர்ந்த நபர்தான் எனவும், இப்போதுதான் இங்கு டீ குடித்துவிட்டு சென்றார் எனவும் கூறியுள்ளார்.
 
சிறிது நேரத்தில் டீக்கடைக்காரர் உடைகளை மாற்றியபடி எதிரே நடந்து வரும் நபர் தான் அவர் என போலீசாரிடம் தெரிவித்ததை அடுத்து, போலீசார் அந்த நபரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவன் எனவும், அவரது சகோதரர்களுடன் அறை எடுத்து தங்கி இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர் தங்கியிருந்த அறைக்கு சென்று 17 வயது மதிக்கத்தக்க சகோதரர்கள் இருவரையும் பிடித்தனர். வீட்டில் சோதனை செய்தபோது அங்கு எதுவும் சிக்கவில்லை, அதை தொடர்ந்து வீட்டின் மேல் தளத்தில் போலீசார் ஏறி பார்த்தபோது அங்கு ஆரஞ்சு நிற பனியனில் சிறிய மூட்டையாக நகைகள் கட்டி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நகையை மீட்ட போலீசார், அவர்கள் மூன்று பேரையும் பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில், கைது செய்யப்பட்ட நபர்கள் தாம்பரம் - வேளச்சேரி பிரதான சாலையில், கவுரிவாக்கம் பகுதியில் உள்ள ரோஸ் மில்க் ராஜா என்ற கடையில் வேலை செய்து வருவதாகவும், மூன்று பேரும் கடந்த இரண்டு மாதங்களாக திட்டம் தீட்டி பின்னர் அதில் ஒருவர் மட்டும் கடையின் பின்புறம் உள்ள பைப்புகள் மூலம் இரண்டாம் தளத்தில் ஏறி லிப்ட் இருக்கும் பகுதி வழியாக கடையின் உள்ளே இறங்கி நகைகளை கொள்ளையடித்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, தாம்பரம் கமிஷனர் அமல்ராஜ் கூறியதாவது: அசாம் மாநிலத்தில் இருந்து வந்து அறை எடுத்து தங்கி ஒரு ஜூஸ் கடையில் வேலை செய்து வந்த மூன்று சிறுவர்கள் நகைக்கடையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு பிடிபட்டுள்ளனர். கொள்ளை சம்பவம் நடந்த நகைக்கடையில் மொத்தம் சுமார் மூன்று கோடி ரூபாய்க்கு மேல் நகைகள் உள்ளன.

இதில் பெரும்பாலான நகைகள் லாக்கரில் வைக்கப்பட்டிருந்ததால் அவைகள் கொள்ளையடிக்கப்படவில்லை. வெளியே வாடிக்கையாளர்கள் பார்ப்பதற்கு டிஸ்ப்ளேக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் ஒன்றரை கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. கொள்ளையர்கள் நகை கடையின் உள்ளே புகுந்தவுடன் கடையின் ஊழியர்களுக்கு எச்சரிக்கை தகவல் சென்றுள்ளது. ஆனால், அவர்கள் தாமதமாக போலீசாருக்கு தகவல் தெரிவித்ததால் குற்றவாளிகளை பிடிப்பதில் சிறிது நேரம் தாமதம் ஏற்பட்டது. எச்சரிக்கை தகவல்களை உடனடியாக தெரிவித்து இருந்தால் அப்போதே கொள்ளையர்களை பிடித்திருக்கலாம்.

வீட்டின் உரிமையாளர்கள் வீட்டிற்கு வாடகைக்கு கேட்கும் நபர்களிடம் அவர்களது அடையாள அட்டை போன்றவற்றை சரிபார்த்து முறையாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே அவர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும். எந்த ஒரு ஆவணமும் இன்றி யாருக்கும் வீடு, கடைகள் ஆகியவற்றை வாடகைக்கு தரக்கூடாது. இந்த கொள்ளையில் வேறு யாராவது பின்புலத்தில் இருக்கிறார்களா என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. கொள்ளை சம்பவம் நடந்த 2 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்த போலீசாருக்கு எனது பாராட்டுகள். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • orange-tree-wishes-27

  ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!

 • pet-fesitival-mumbai

  மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி

 • france-reform

  பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!

 • new-parliament-pic-20

  பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!

 • cong-ravi-19

  தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்