SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜனநாயகம் காப்போம்

2022-11-26@ 00:28:28

இந்திய தேர்தல் ஆணையராக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அருண் கோயல் கடந்த சில நாட்களுக்கு முன்பு நியமிக்கப்பட்டார். இது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம், ஒன்றிய அரசுக்கு பல முக்கிய கேள்விகளை எழுப்பியுள்ளது. பல மாதங்களாக தேர்தல் ஆணையர் பதவி காலியாக இருந்த நிலையில், அதை நிரப்பாதது ஏன், தேர்தல் ஆணையர் அருண் கோயல் நியமனம் அவசரமாக நடந்தது ஏன் என உச்சநீதிமன்றம் அடுத்தடுத்து கேள்விகளை எழுப்பியுள்ளது. 4 பெயர்கள் பரிந்துரையில் இருந்த நிலையில், அதில் இருந்து ஒருவரை சட்ட அமைச்சர் தேர்ந்தெடுத்துள்ளார். அந்த கோப்பு நவம்பர் 18ம் தேதி அனுப்பி வைக்கப்பட்டது. அதே நாளில் அனைத்தும் நடக்கிறது. பிரதமர்கூட அதே நாளில் தேர்தல் ஆணையரை பரிந்துரைக்கிறார்.

கடந்த மே 15ம் தேதி முதல் இந்த பதவி காலியாகவே இருந்தது. அப்போதெல்லாம் இந்த பதவி நிரப்பப்படவில்லை. ஆனால், இந்த வழக்கை நாங்கள் விசாரிக்க துவங்கியதும் மின்னல் வேகத்தில் நியமனம் நடப்பது ஏன்? தேர்தல் ஆணையரை நியமிக்கும் ஒட்டுமொத்த செயல்முறையும் ஒரே நாளில் நடந்தது ஏன்? என்ன மாதிரியான செயல்முறையின்கீழ் தேர்தல் ஆணையர் தேர்வு செய்யப்பட்டார்? எந்த அடிப்படையில் 4 பேர் பெயர்கள் முதலில் பரிந்துரைக்கப்பட்டது? இது, எங்களுக்கு நிஜமாகவே புரியவில்லை. இந்த நான்கு பெயர்களும் கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்டார்களா? நாங்கள் இந்த விவகாரத்தில் அரசுடன் மோதல் போக்கை கடைபிடிக்க விரும்பவில்லை. ஆனால், ஏன் இந்த அவசரம் என அறிய விரும்புகிறோம் என நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, ஒன்றிய அரசுக்கு சாட்டையடி கொடுத்துள்ளது.

அருண் கோயல், பஞ்சாப் கேடரை சேர்ந்த 1985 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். இவர் 37 ஆண்டுகளுக்கும் மேலாக சர்வீசில் இருந்துள்ளார். மத்திய கனரக தொழில்துறை அமைச்சகத்தின் செயலாளராக பணிபுரிந்த இவர், சமீபத்தில்தான் விருப்ப ஓய்வு பெற்றார். இந்நிலையில், அவர் உடனடியாக தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டது குறித்தும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

 தற்போது தலைமை தேர்தல் ஆணையராக உள்ள ராஜீவ்குமாரின் பதவிக்காலம் பிப். 2025 உடன் நிறைவடையும் நிலையில், அடுத்து இவர் தலைமை தேர்தல் ஆணையராகும் வாய்ப்புகள் மிக அதிகம். இந்த நியமனத்தை எதிர்த்து சமூக ஆர்வலரும் வழக்கறிஞருமான பிரசாந்த் பூஷண் தொடர்ந்த வழக்கில்தான் உச்சநீதிமன்றம் இந்த நெத்தியடி கொடுத்துள்ளது. ‘‘நாங்கள் இந்த விவகாரத்தில் தவறு நடந்துள்ளது என்று கூறவில்லை. ஆனால், இதுபோன்ற செயல்முறைகள் வெளிப்படைத்தன்மையுடன் இருப்பதை நாம் உறுதிசெய்ய வேண்டும்’’ என்று நீதிபதிகள் நேரடியாகவே ஒன்றிய அரசை சாடியுள்ளனர்.

 ஜனநாயக நாட்டில், தேர்தல் ஆணையம் என்பது தனி அதிகாரம் கொண்டது. சுதந்திரமானது. இந்த அமைப்பு, எந்த அரசியல் கட்சியையும், ஆட்சியாளர்களையும் சாராதது. தேர்தல் ஆணையத்தின் அதிகாரம் என்ன என்பது பற்றி ஆணையர்கள் பலருக்கு தெரிவதில்லை. டி.என்.சேஷன் இந்த பதவியில் அமர்ந்த பிறகுதான் தேர்தல் ஆணையத்துக்கு என்னென்ன அதிகாரம் உள்ளது என்பது வெளிஉலகிற்கு தெரியவந்தது.

ஒரு நாட்டில் தேர்தல் ஆணையம் எந்த அளவுக்கு சுதந்திரமாக செயல்படுகிறதோ, அதை வைத்தே அந்நாட்டின் ஜனநாயகத்தன்மையை கணக்கிட முடியும். உலகின் மிகப்பெரிய ஜனநாயக கட்டமைப்பு கொண்ட நம் நாட்டில், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு, தேர்தல் ஆணையர் நியமனம் என எல்லாமே வெளிப்படைத்தன்மையாக இருக்கவேண்டும் என்கிறது உச்சநீதிமன்றம். சாமானியனின் கருத்தும் இதுவே. உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்று, ஜனநாயகத்தின் மாண்பை காக்க வேண்டும்.

Like Us on Facebook Dinkaran Daily News
 • orange-tree-wishes-27

  ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!

 • pet-fesitival-mumbai

  மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி

 • france-reform

  பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!

 • new-parliament-pic-20

  பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!

 • cong-ravi-19

  தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்