SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிடி இறுகுகிறது

2022-11-20@ 00:06:39

கடந்த அதிமுக ஆட்சியில், தேனி மாவட்டம், வடவீரநாயக்கன்பட்டி, தாமரைக்குளம், கெங்குவார்பட்டி கிராமங்களில், அரசுக்கு சொந்தமான 182 ஏக்கர் நிலம், தனியாருக்கு மோசடியாக மாற்றப்பட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இவ்வழக்கை தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இவ்வழக்கில் கைதான அதிமுக பிரமுகர் அன்னப்பிரகாஷ் குறித்து, பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. அதிமுகவில் அக்கட்சி தொண்டர்களாலேயே அதிகம் அறியப்படாத சாதாரண தொண்டராக இருந்தவர் அன்னப்பிரகாஷ். பின்னர் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு நெருக்கமானதை தொடர்ந்து, பெரியகுளம் ஒன்றிய செயலாளராக நியமிக்கப்பட்டார்.

அவரது உதவியாளர் நிலையில், வலக்கரமாகவும் இருந்துள்ளார். அமைச்சருக்கு அடுத்தபடியாக கருதப்படும் மாவட்ட செயலாளரை விட, ஒன்றிய செயலாளர் நிலையில் உள்ள ஒருவருக்காக, வருவாய்த்துறை அதிகாரிகள் வளைந்து கொடுத்தது ஏன்? மிகப்பெரிய நில மோசடியில் ஈடுபடும் அளவுக்கு அவருக்கு எப்படி அதிகாரம் வந்தது போன்ற கேள்விகள் இந்த வழக்கில் சிபிசிஐடி தரப்பில், வலுவாக முன் வைக்கப்படுகின்றன. இவ்வழக்கில் விரைவில் முக்கிய புள்ளியிடம் விசாரணை நடத்த வாய்ப்புகள் உள்ளன. இவர் மீதான பிடியும் இறுகுகிறது.

வழக்கில் சிக்காத வரை ஓபிஎஸ்க்கு நெருக்கமாக இருந்த அன்னப்பிரகாஷ், திடீரென எடப்பாடி அணிக்கு தாவினார். இந்த அணி மாற்றமும் சந்தேகத்தை அதிகப்படுத்தி உள்ளது.பட்டா மாறுதல் செய்த நிலத்தில், பல நூறு கோடி மதிப்புள்ள கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டதும் சாட்டிலைட் சர்வே மூலமாக தெரிய வந்துள்ளது. இவ்வழக்கில் தொடர்புடைய சில அதிகாரிகள் தலைமறைவாக உள்ளனர். இவர்கள் விரைவில் சிக்கும்பட்சத்தில், இவ்வழக்கில் பல உண்மைகள் வெளிவரும். முக்கிய அதிமுக பிரமுகர்களும் விசாரணை வளையத்தில் சிக்கி கைதாகும் வாய்ப்புள்ளது.

மேலும், ஓபிஎஸ் மகனும், தேனி எம்பியுமான ரவீந்திரநாத்துக்கு சொந்தமான தோட்டத்தில், மின்வேலியில் சிக்கி சிறுத்தை இறந்த விவகாரமும் பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்த தோட்டம் வாங்கியதில் முறைகேடு உள்ளதா, தோட்ட இடம் வனப்பரப்பில் உள்ளதா அல்லது வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதியா எனவும் விசாரிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன், தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் சிறுத்தை தோல் சிக்கிய விவகாரமும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே லட்சுமிபுரத்தில், ஓபிஎஸ் மனைவிக்கு சொந்தமான நிலத்தில், பிரமாண்ட ஆழ்துளை கிணறு வெட்டிய விவகாரம் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதனால் சுற்றுவட்டார கிராமங்களுக்கு குடிநீர் பிரச்னை ஏற்படும்; நிலத்தடி நீர்மட்டம் பாதிக்குமென கூறி பெரும் போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டனர். அதன்பிறகே அந்த கிணறானது தமிழக ஆளுநர் பெயரில் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதிமுகவில் பல முன்னாள் முதல்வர்களை தந்த மாவட்டம் என்ற பெருமை தேனி மாவட்டத்திற்கு உண்டு. அந்த ஒற்றைப்பெருமையை கொண்டே அம்மாவட்டத்தில் பல முறைகேடு சம்பவங்களை அதிமுகவினர் தொடர்ந்து அரங்கேற்றி வருகின்றனர். 10 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சியில் இருந்தும், அதிமுகவிற்கு 3 முதல்வர்களை தந்தும் தேனி மாவட்டத்தை யாருமே வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு செல்லவில்லையே என்ற ஆதங்கம் அம்மாவட்ட மக்களிடையே நிலவுகிறது. மேலும், அதிமுக ஆட்சியில் நடந்த மோசடிகள் தொடர்பாக விரிவாக விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
 • stalin-corp-31

  மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

 • long-whale-newyork

  35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்

 • pak-blast-30

  பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!

 • china-spring-festival

  சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!

 • orange-tree-wishes-27

  ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்