SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஏட்டிக்கு போட்டி

2022-10-07@ 00:51:38

மகாராஷ்டிராவில் மண்ணின் மன்னர்களான மராட்டிய இளைஞர்களை ஒருங்கிணைக்க பால்தாக்கரேவால் தொடங்கப்பட்ட சிவசேனா கட்சி ‘ஒரு தலைவன், ஒரு கொடி, ஒரு மைதானம்’ என்ற முழக்கத்துடன் மும்பை சிவாஜி பார்க்கில் முதல் மாநாட்டை நடத்தியது. அதன் பிறகு கொள்கைப்பிடிப்புடன் மக்களிடம் செல்வாக்கு பெற்ற கட்சியாக வளர்ந்தது. இப்படி 50 ஆண்டுகளுக்கும் மேல் கோலோச்சிய கட்சி தான் தற்போது இரண்டாக பிளவு பட்டு சிவசேனா கட்சிக்கு உரிமை கோரி இரு பிரிவினர் தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டுள்ளனர். சிவசேனா இரண்டாக உடைவதற்கு ஒன்றிய பாஜ அரசு தான் காரணம் என்று வெளிப்படையாகவே குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகிறது. இதை ஆமோதிக்கும் வகையில் சமீபத்தில் நடந்த மாநாட்டில் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவும்  உறுதி செய்துள்ளார்.

பாஜ-சிவசேனா கூட்டணி கடந்த  பேரவை தேர்தலில் வெற்றி பெற்றது. முதல்வர் பதவியை விட்டுத்தர முடியாது என்று சிவசேனா முரண்டு பிடித்ததால் இக்கூட்டணி உடைந்தது. அதன் பிறகு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை இணைத்து மகாவிகாஸ் அகாடி கூட்டணியை உருவாக்கி உத்தவ் தாக்கரே முதல்வராக பதவியேற்றார். இதனால் அதிருப்தியில் இருந்த பாஜவுக்கு துருப்பு சீட்டாக தாக்கரே ஆட்சியில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த ஷிண்டே கிடைத்தார். இவர் ஆளும் கட்சிக்கு எதிராக அதிருப்தி எம்எல்ஏக்களை ஒருங்கிணைத்து போர்க்கொடி உயர்த்தினார். இவருக்கு பாஜவும் ஆதரவளித்தது.

இதனால் உத்தவ் தாக்கரே பெரும்பான்மை இழந்து முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் சிவசேனா இரு அணிகளாக செயல்பட்டு வருகிறது.  முதல்வராக பதவி வகிக்கும் ஏக்நாத் ஷிண்டே தங்கள் அணி தான் உண்மையான சிவசேனா என்று வலியுறுத்திவருகிறார். இதனால் கட்சியின் கொடி, சின்னம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கு தேர்தல் ஆணையத்தில் உள்ளது. இந்நிலையில் தசரா விழாவையொட்டி ஆண்டுதோறும் நடக்கும் சிவசேனா பொதுக்கூட்டத்தை உத்தவ்தாக்கரே தலைமையிலான அணியினர் சிவாஜி பார்க்கில் கூட்டினர். இதற்கு போட்டியாக பிகேசி மைதானத்தில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணி பொதுக்கூட்டத்தை கூட்டியது. இரு அணிகளும் ஏட்டிக்கு போட்டியாக பொதுக்கூட்டம் நடத்தியதால் மும்பை மாநகரம் குலுங்கியது.

பாஜவின் கைப்பாவையாக செயல்படும் ஷிண்டேவுக்கு எப்போதும் துரோகி என்ற பெயர் நிலைத்திருக்கும் என்று உத்தவ்தாக்கரே கடுமையாக விமர்சித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ‘பால்தாக்கரேவின் கொள்கை, கட்சி சித்தாந்தங்களை காற்றில் பறக்கவிட்டவர் உத்தவ் தாக்கரே. பாஜவின் ஆதரவால் சிவசேனா கட்சியை மீட்டு கொண்டுவந்துள்ளேன். என்னை பாஜவின் கைப்பாவை என்று விமர்சித்தாலும் எனக்கு மகிழ்ச்சி தான்’ என்று ஷிண்டே வெளிப்படையாகவே பேசியுள்ளார்.

சிவசேனா கட்சியின் இரு அணியினரும்  அடுத்த மாதம் அந்தேரி கிழக்கு தொகுதிக்கு நடக்கும் இடைத்தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்த முடிவு செய்துள்ளன. இரு அணிகளுக்கும் இந்த இடைத்தேர்தல் பலப்பரிட்சையாகவே அமையும் என்பதில் சந்தேகமில்லை. உத்தவ் தாக்கரே அணிக்கு ஆதரவளித்து காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் வேட்பாளரை நிறுத்தவில்லை. பாஜ வேட்பாளருக்கு ஷிண்டே அணி ஆதரவளித்துள்ளது. எனவே மகாராஷ்டிர அரசியலில் அந்தேரி கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் சிவசேனாவின் இரு அணிக்கும் இடையே நடக்கும் உரிமை போராட்டத்துக்கு நல்ல தீர்ப்பை எழுதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Like Us on Facebook Dinkaran Daily News
 • om-mathan-kark

  சாதனை படைக்க வயசு தடை இல்லை: எவரெஸ்ட் அடிவாரத்துக்கு நடந்தே சென்று சாதித்த 6 வயது சிறுவனின் சாகச பயணம்..!

 • landslide-colombia

  கொலம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 அதிகரிப்பு..!

 • tirupati-murmu-5

  திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம்..!!

 • brazil-rain-landslide-2

  தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

 • kujarat-election

  குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்