பொங்கல் பரிசுத் தொகுப்பு தொடர்பாக விவரம் அறியாமல் பேசுபவர்களுக்கு அமைச்சர் சக்கரபாணி பதில் அறிக்கை.!
2022-10-01@ 19:09:29

சென்னை: பொங்கல் பரிசுத் தொகுப்பு தொடர்பாக அபராதம் விதிக்கப்பட்டவர்களுக்குப் பாமாயில், பருப்பு விநியோகிக்க அனுமதி என்று விவரம் அறியாமல் பேசுபவர்களுக்கு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி அவர்களின் பதில் அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டில் கணிதம் படித்தும் கணக்குத் தெரியாத ஒருவரும் சின்னம் பெற இலஞ்சம் கொடுக்க முயன்று கைதான ஒருவரும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கல் தொடர்பாக அபராதம் விதிக்கப்பட்ட நிறுவனங்களுக்குப் பருப்பு மற்றும் பாமாயில் விநியோகிக்க அனுமதி வழங்கப்பட்டதாக விவரம் அறியாமல் குறை கூறியுள்ளனர்.
கணிதம் படித்தும் கணக்குத் தெரியாதவர் பொங்கல் பரிசுத் தொகுப்பில் பருப்பு மற்றும் பாமாயில் இல்லை என்பது கூடத் தெரியாமல் பொங்கல் பரிசுத் தொகுப்பில் பாமாயில் மற்றும் பருப்பு வழங்கியதற்காக அபராதம் விதிக்கப்பட்ட நிறுவனங்கள் என்று தவறுதலாக அறிக்கை விடுகிறார். அரை வேக்காட்டு அரசியல் செய்யும் இவர் ஏற்கனவே பொங்கலின் போது 32 ரூபாய்க்கு வாங்கிய பையை 62 ரூபாய்க்கு வாங்கியதாக வாய் கூசாமல் கூறியவர். இப்படி, வகை தெரியாமல் கூறுகிறாரா அல்லது அவதூறு செய்ய வேண்டும் என்பதற்காகவே பேசுகிறாரா என்பது தெரியவில்லை. இருப்பினும் இவர்களைப் போன்றவர்களுக்காக இது தொடர்பாகச் சில விளக்கங்களைத் தெரிவிக்க விரும்புகிறேன்.
வெல்லம் உருகிவிட்டது என்று சில மாவட்டங்களிலும் திருப்பத்தூர் மாவட்டத்தில் மிளகுக்குப் பதிலாக வேறு பொருள் கொடுத்ததாகவும் வந்த புகார்களையும் சில ஊர்களில் வேறு சிற்சில புகார்கள் வந்ததையும் ஊதிப் பெரிதாக்கி அவதூறு பரப்புவதற்கென்றே சமூக ஊடகங்களில் பல போலிக் கணக்கு வைத்திருப்பவர்கள் சதி செய்தனர். சிறு தவறையும் பொறுத்துக் கொள்ளாத, சொந்தக் கட்சிக்காரர்களே தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்கத் தயங்காத மாண்புமிகு முதல்வர் அவர்கள் எங்களை அழைத்துக் கூட்டம் நடத்தி தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆணையிட்டதோடு அவரே பல பொது விநியோகத் திட்ட அங்காடிகளுக்கும் சென்று பார்வையிட்டார். பொங்கல் பரிசுத் தொகுப்பு பொருள்கள் தொடர்பாகச் சரியாகச் சோதனை செய்யாமல் அனுப்பியதற்காக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் தரக்கட்டுப்பாட்டு முதுநிலை மேலாளர், தரக்கட்டுப்பாட்டு ஆய்வாளர் மற்றும் கிடங்கு பொறுப்பாளர் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
அதோடு தரமற்ற பொருள்களை வழங்கி அவற்றை மாற்றிக் கொடுத்திருந்தாலும் அவற்றிற்காகவும் தாமதமாகப் பொருள்கள் வழங்கியமைக்காகவும் இதர காரணங்களுக்காகவும் விதிகளின்படி மொத்தம் ஐந்து நிறுவனங்களுக்கு ரூ.7.04 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இத்தகைய அபராத விதிப்பு என்பது இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய தண்டனை என்று விநியோகிப்பாளர்களே முறையிட்டார்கள்.
பொருள்கள் விநியோகிக்க ஒப்பந்தப் புள்ளியில் விதிக்கப்பட்டிருந்த நிபந்தனைகளை நிறைவு செய்யாத நிறுவனங்கள் மீது எந்தெந்த வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அந்தந்த வகைகளில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அபராதம் விதிக்கப்பட்ட நிறுவனங்கள் பிற பொருள்கள் வழங்கும் ஒப்பந்தப் புள்ளியிலேயே பங்கெடுத்துக் கொள்ளக் கூடாது என்று எந்த விதியும் இல்லாத நிலையில், இரு சக்கர வாகனத்தை வேகமாக ஓட்டியதற்காக அபராதம் விதிக்கப்பட்ட ஒருவர் நான்கு சக்கர வாகனம் ஓட்டக் கூடாது என்று சொல்வது போல், திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி மீது குற்றம் சொல்ல ஏதாவது காரணம் கிடைக்காதா என்று ஏங்கித் தவிப்பவர்கள் சிலர் ‘பேனைப் பெருமாள் ஆக்க’ முயல்கின்றனர். அவர்களுக்கெல்லாம் ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இழிச்சொல்லையும் பழிச்சொல்லையும் புறந்தள்ளிவிட்டு, தமிழ்நாட்டு மக்களுக்குப் பணியாற்றித் தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக முன்னேற்றப் பாடுபடுங்கள் என்ற எங்கள் தலைவரின் ஆணையினைத் தாரக மந்திரமாக ஏற்றுச் செயல்பட்டு வருகிறோம். தரமான அரிசி வழங்கல், மாணவ, மாணவிகளுக்கு காலைச் சிற்றுண்டி, அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு கல்லூரிப் படிப்புக்கு மாதம் ரூ. 1000/- எனப் பல சாதனைகளைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் அரசு மீது வீண்பழி சுமத்துவதை விட்டு விட்டு ஆக்கப்பூர்வமாகச் செயல்படத் தமிழர்களாகிய அவர்களிருவரையும் அவர்களைப் போன்றோர்களையும் கேட்டுக் கொள்கிறேன்.
மேலும் செய்திகள்
டான்செட், சிஇஇடிஏ தேர்வு முடிவுகள் ஏப்.15-க்குள் வெளியீடு: அண்ணா பல்கலைக்கழகம் தகவல்
இந்தியாவால் கொடையாக வழங்கப்பட்ட கச்சத்தீவில் மிகப்பெரிய புத்தர் சிலையை சிங்களக் கடற்படை அமைத்திருப்பதற்கு ராமதாஸ் கண்டனம்!!
அடுத்த 3 மணி நேரத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி உட்பட 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
சென்னை விமான நிலையத்தில் பயணிகள் பேட்டரி வாகனங்கள் எண்ணிக்கை 8 ஆக அதிகரிப்பு
ராகுல் காந்தி தகுதி நீக்க விவகாரம் சட்டமன்றத்தில் எதிரொலித்தது: நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேச்சு
தமிழ்நாட்டின் மின்தேவையை நிறைவு செய்வது என்எல்சி மின் உற்பத்தியை கருத்தில் கொண்டு பொறுப்புணர்வோடு அணுக வேண்டும்: அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி