SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வெளிநாட்டு மோகம்

2022-09-30@ 01:01:14

அன்றைய காலகட்டத்தில் வெளிநாடு சென்று ஒருவர் மேற்படிப்பு படித்து விட்டு இந்தியா திரும்புகிறார் என்றால் பெரும் மதிப்புடனும், வியப்புடனும் பார்க்கப்பட்டனர். அப்போதைய சூழ்நிலையில் டாக்டர்கள், வக்கீல்கள் உள்ளிட்டோர் தங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ள வெளிநாடு சென்று மேற்படிப்பு படித்தார்கள். ஆனால் தற்போது வெளிநாடு சென்று படிப்பது சர்வசாதாரணமாகிவிட்டது. அந்தளவுக்கு மாணவ-மாணவிகளிடம் மோகம் அதிகரித்துவிட்டது. அதற்கேற்ப விழிப்புணர்வும் அதிகரித்துள்ளது. இந்தியாவில் படித்த மாணவர்கள் உள்நாட்டிலேயே வேலை வாய்ப்பு பெறுவதில் சிரமங்களை எதிர்கொள்கிறார்கள் என்று கூறப்படுகிறது.

இதனால் அவர்கள் வெளிநாட்டு கல்விக்கு முக்கியத்துவம் அளிப்பது அதிகரித்து வருகிறது. உக்ரைன் போரால் அந்நாட்டில் மருத்துவம் படிக்க சென்ற மாணவ-மாணவிகள் சொந்த நாடு திரும்பிய எண்ணிக்கையில் இருந்து அவர்களது ஆர்வத்தை அறியமுடிகிறது. இந்தியாவில் ஆண்டுக்கு ரூ3 முதல் ரூ10 லட்சம் வருமானம் ஈட்டும் நடுத்தர குடும்பத்தினர்களில் 57 சதவீதம் பேர் வெளிநாட்டு கல்விக்கு செலவழிக்க முன்வருகிறார்கள் என்று ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இந்திய மாணவர்களிடையே கொழுந்துவிட்டு எரியும் வெளிநாட்டு கல்வி மோகத்தால் இந்திய வெளிநாட்டு கல்வி சந்தை அபரீத வளர்ச்சி காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2025ம் ஆண்டுக்குள் 20 லட்சம் இந்திய மாணவர்கள் வெளிநாட்டுக்கு படிக்க செல்வார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதற்கான சர்வதேச கல்விச்செலவு ரூ8.18 லட்சம் கோடியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. வெளிநாட்டு பட்டப்படிப்புகள் தங்களுக்கு நல்ல வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகளை அதிகரிக்க செய்வதாக 83 சதவீத  இந்திய மாணவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மேலும் முதல் மொழியாக ஆங்கிலம் அல்லாத நாடுகளை 42 சதவீத இந்திய மாணவர்கள் தங்களது விருப்ப தேர்வாக கொண்டுள்ளதாகவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது. மேலும் எந்த நாட்டில் படித்தால் கல்வி உதவித்தொகை கிடைக்கும், வெளிநாட்டு வாழ்க்கைக்கான செலவு, பகுதி நேர வேலை, பல்கலைக்கழக தரவரிசை ஆகியவற்றை ஆராய்ந்து மாணவர்கள் தங்களுக்குரிய நாடுகளை தேர்வு செய்கின்றனர்.

18 முதல் 24 வயதுக்குட்பட்டவர்கள் 3ல் இரண்டு பங்கும், 25 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் 34 சதவீதத்தினரும் வெளிநாட்டு படிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். மேலும் வங்கிகளில் கல்விக்கடன் பெறுவதற்கு 62 சதவீத இந்திய மாணவர்களும், 53 சதவீத மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கும் முயற்சி செய்வதாகவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது. வெளிநாடு சென்று படிக்க ஆர்வமாக உள்ளவர்களில் 60 சதவீதம் ஆண்களும், 39 சதவீதம் பெண்களும் இடம்பெற்றுள்ளனர். தரமான கல்வி அதற்கு தகுந்த வேலைவாய்ப்பு, அதற்குரிய உயர்ந்த சம்பளம் ஆகியவற்றை மாணவர்கள் திட்டமிடுகின்றனர்.

வங்கி கடன் வாங்கி படிக்கும் மாணவர்கள் அந்த கடனை அடைப்பது மற்றும் குடும்பத்துக்கு பணம் அனுப்புவது ஆகியவற்றை மனதில் கொண்டு அதிக சம்பளம் தரும் நிறுவனங்களை தேர்வு செய்து வேலைக்கு முயற்சி செய்கிறார்கள். எனவே தற்போதுள்ள மாணவர்கள் வெளிநாட்டு கல்விக்கு முக்கியத்துவம் தருவது அதிகரித்து வருவதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • landslide-colombia

    கொலம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 அதிகரிப்பு..!

  • tirupati-murmu-5

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம்..!!

  • brazil-rain-landslide-2

    தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

  • kujarat-election

    குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

  • vinayagar-puduchery-30

    புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்