SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இரண்டு ஆண்டுக்கு பிறகு வேகமெடுக்கும் இன்ப்ளூயன்சா: வேண்டாம் அச்சம்; நம்பிக்கை தரும் மருத்துவர்கள்

2022-09-27@ 00:54:11

ஒவ்வொரு ஆண்டும் நம் ஊருக்கு வரும் அழையா விருந்தாளி இன்ப்ளூயன்சா. விஷ ஜுரம், வைரஸ் காய்ச்சல், சாதாரண காய்ச்சல் என்று இதற்கு பல பெயர் உண்டு. என்னதான் முன்ஜாக்கிரதையாக இருந்தாலும் எப்படியாவது நம்மிடம் ஒட்டிக்கொள்ளும் இந்த இன்ப்ளூயன்சா. தமிழகத்தை பொறுத்தவரை ஒவ்வொரு ஆண்டும், ஜூலை முதல், நவம்பர் வரை இன்ப்ளூயன்சா தொற்று காலம். இன்ப்ளூயன்சா காய்ச்சல் ஏற்படும்போது, மூக்கு, தொண்டையில் நோய் தொற்று ஏற்படுவது வழக்கம். அரிதாக நுரையீரல் பாதிக்கப்படும். தொண்டை வலி, காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல், உடல் சோர்வு, மூக்கடைப்பு மற்றும் தசை வலி என ஒரு சில நாட்களுக்கு பாடாய் படுத்திவிட்டு நம்மைவிட்டு போய்விடும். பருவ நிலை மாற்றத்தின் ஒரு பகுதியாக ஒவ்வொரு ஆண்டும் இதை சமாளித்தாக வேண்டிய கட்டாயம் மனிதகுலத்துக்கு உண்டு.

 இந்த இன்ப்ளூயன்சா  கடந்த ஒரு மாத காலமாகவே தமிழகத்தில் சுழன்றடித்து வருகிறது. அத்தோடு, இடைச்செருகலாக எச்1என்1 எனப்படும் பன்றி காய்ச்சல், டெங்கு காய்ச்சலும் பரவ, கொரோனா பீதியில் இருந்து தற்போதுதான் முழுமையாக மீண்டு வந்துள்ள மக்கள் அச்சத்தில் மருத்துவமனைகளுக்கு படையெடுக்க தொடங்கிவிட்டனர். தொடர் கண்காணிப்பில் உள்ள தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறை உடனடியாக மருத்துவ நிபுணர்கள் ஆலோசனைப்படி  தொற்று பரவலை தடுப்பதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தி உள்ளது.

 இந்த முறை இதன் தாக்கம் சற்று அதிகமோ என்ற கவலையும், சந்தேகமும் எல்லோர் மனதிலும் எழுந்துள்ளது. இதற்கு அண்மை காலங்களில்  சளி காய்ச்சல், உடல் வலியால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம். குறிப்பாக குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவதுதான் காரணம். ஆனால், இந்த காய்ச்சலால்  உயிரிழப்பு ஏற்படுவது மிகவும் குறைவு என்பது ஆறுதல். அதேசமயம், சமூக இணையதளங்களிலேயே வாழ்ந்து கொண்டிருக்கும் சிலர், உடனடியாக பள்ளிகளுக்கு லீவு விட வேண்டும் என்று கம்பு சுழற்ற, நிலைமை அபாய கட்டத்தை நோக்கி செல்கிறதோ என்ற அச்சம் சாதாரண பொதுமக்களிடையே பரவியது.

 அப்போது, களத்தில் இறங்கிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனும், மருத்துவ நிபுணர்களும் இன்ப்ளூயன்சா காய்ச்சல் கொரோனா அளவுக்கு மோசமான ஆட்கொல்லி இல்லை. இது வருடாவருடம் வரும் காய்ச்சல்தான், இதற்காக பயப்பட வேண்டாம். பள்ளிகளுக்கு விடுமுறை விடும் அளவுக்கு இது பெருந்தொற்று இல்லை என்ற அவர்களது விளக்கம் ஆறுதல் அளிக்கிறது. என்றாலும், பலருக்கு இன்னமும் திருப்தி ஏற்படவில்லை. ஆனால், மருத்துவ நிபுணர்கள் ப்ளூ காய்ச்சலுக்கெல்லாம் பள்ளிக் கூடங்களுக்கு விடுமுறை அறிவித்தால், வருடத்தின் பெரும்பாலான நாட்கள் பள்ளிகளை மூட வேண்டியதுதான் என்று கூறுகின்றனர்.

ஏனென்றால், இந்தியாவில் குளிர்காலம் முடிந்ததும் ஜனவரி முதல் மார்ச் வரையிலும் பின்னர் தென் மேற்கு பருவமழைகாலத்தின்போது ஆகஸ்ட் முதல் நவம்பர் வரை இன்ப்ளூயன்சா அதிகம் பரவும். இது போதாது என்று டெங்கு, மலேரியா, எலி காய்ச்சல், சாதாரண சளி காய்ச்சல் என்று வருடத்தின் பெரும்பாலான நாட்கள் யாராவது காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கொண்டுதான் இருப்பார்கள். கடந்த 2020, 2021ம் ஆண்டுகளில் கொரோனாவின் பிடியில் சிக்கி பெரும்பாலானவர்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடந்தார்கள்.

இதனால், அந்த 2 ஆண்டும் இந்த இன்ப்ளூயன்சாவின் தாக்கம் மிகவும் குறைவு. இந்த ஆண்டு எல்லாம் சீராகி, வீட்டில் முடங்கியவர்கள் வெளியே சுதந்திரமாக நடமாட துவங்கி விட்டனர். பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் அனைவரும் ஆன்லைனில் இருந்து ஆப்லைன் வகுப்புகளுக்கு செல்கின்றனர். இதன் விளைவுதான், இந்த ஆண்டு இன்ப்ளூயன்சா பாதிப்பு கொஞ்சம் அதிகமாகி உள்ளது. இதனால், உயிர்பலி அதிகமாகிவிடுமோ என்ற அச்சம் தேவையில்லை.
முறையாக சிகிச்சை பெற்றால் உயிர்பலியை பெரும்பாலும் தவிர்த்துவிடலாம். நோய் பாதிப்பை முன்கூட்டியே கண்டுபிடித்தல் அவசியம், இதில் பொதுமக்களின் பங்குதான் அதிகம்.

காய்ச்சல் வந்ததும் அரசு மருத்துவமனைகளையோ, ஆரம்ப சுகாதார நிலையங்களையோ, அரசு நடத்தும் காய்ச்சல் முகாம்களையோ, தனியார் மருத்துவமனைகளையோ நாடினால் போதும். அப்படி செய்யாமல், நாமே மருந்து வாங்கி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இன்ப்ளூயன்சா காய்ச்சல் வந்தவர்களையெல்லாம் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டியதில்லை. வீட்டில் தனிமைப்படுத்தி டாக்டரின் அறிவுரைப்படி மாத்திரை, மருந்து சாப்பிட்டு ஓய்வு எடுத்தாலே மூன்று முதல் ஐந்து நாளில் காய்ச்சல் சரியாகிவிடும்.  

நோய் அறிகுறி கண்டறிதல், பரிசோதனை, தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தல் மூலம் இன்ப்ளூயன்சா பரவலை கண்டிப்பாக தடுத்துவிடலாம். இதில் அரசு தன் பங்களிப்பை செய்து வருகிறது. அதே நேரத்தில், நோய் அறிகுறி வந்தபின்பும், வீட்டில் ஓய்வு எடுக்காமல் வேலைக்கு செல்லுதல், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புதல் போன்ற நடவடிக்கைகளை பொதுமக்களும் தவிர்க்க வேண்டியது அவசியம். மொத்தத்தில் இன்ப்ளூயன்சா வேகமெடுத்தாலும், அச்சப்பட வேண்டாம் என்றுதான் நம் மருத்துவ நிபுணர்களும் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.

* 1.8 கோடி பேரை பலி கொண்ட 1918 பம்பாய் ப்ளூ
1918ல் இந்தியாவில் இன்ப்ளூயன்சா வேகமாக பரவியது. ஐரோப்பாவில் ஸ்பானிஷ் ப்ளூ என்ற பெயரில் பரவிய அந்த காய்ச்சலில், முதலாவது உலகப் போரில் பங்கேற்று இந்தியா திரும்பியவர்களால் மும்பையில் 1918 ஜூன் மாதம் முதலில் பரவியது. ஆகஸ்ட் மாதத்துக்கு இந்தியா முழுவதும் இந்த நோய் பரவியது. அப்போது பம்பாய் என்று அழைக்கப்பட்ட  மும்பையில் இருந்து பரவ துவங்கியதால், அதற்கு பம்பாய் காய்ச்சல் என்று பெயரிட்டனர். கிட்டதட்ட 1.8 கோடி இந்தியர்கள் ப்ளூ காய்ச்சலுக்கு பலியானார்கள்.

* தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள்
தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், புறநகர் மருத்துவமனைகள் என மொத்தம் உள்ள 11,333 மருத்துவமனைகளில் மருந்துகள் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 21ம் தேதி தமிழகம் முழுவதும் 1000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டன. மூன்று பேருக்கு மேல் இன்ப்ளூயன்சா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், மருத்துவ முகாம்கள் நடத்த தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.

* இது வைரசா? பாக்டீரியாவா?
இன்ஃப்ளூயன்சா ஒரு வைரஸ் நோய்.

* எத்தனை வகை?
ஏ,பி,சி என 3 வகை இந்தியாவில் பரவுகிறது.

* தடுக்க வழி?
ஒவ்வொரு ஆண்டும் தடுப்பூசி போடுவது.

மக்களை ஆண்டுதோறும் தாக்கும் பிற தொற்று நோய்கள்
1    சின்னம்மை
2    மூளை காய்ச்சல்
3    காலரா
4    தட்டம்மை
5    பிளேக்
6    டைபாய்டு
7    மஞ்சள் காமாலை
8    மலேரியா

ஆண்டு வாரியாக பாதிப்பு
2017
இந்தியா    38,811    
தமிழகம்    3,315
2018
இந்தியா    15,266    
தமிழகம்    2,812
2019
இந்தியா    28,798
தமிழகம்    1038
2020
இந்தியா    2,752    
தமிழகம்    276
2021
இந்தியா    778    
தமிழகம்    11
2022(இதுவரை)
தமிழகம்    1166

ஆபத்து யாருக்கு?
* கர்ப்பிணிகள்
* குழந்தைகள்
* முதியோர்
* நோய் எதிர்ப்பு குறைவாக உள்ளவர்கள், பிற நோயால் பாதிக்கப்பட்டவர்கள், அறுவை சிகிச்சை செய்தவர்கள்.
* நீண்ட நாட்களாக மருந்து மாத்திரை சாப்பிடுபவர்கள்.

எப்படியெல்லாம் பரவும்
* காய்ச்சல்
* இருமல்
* தொண்டை வலி
* உடல் வலி
* மூச்சு வாங்குதல்

தடுப்பது எப்படி?
* தும்மும்போதும், இருமும் போதும் மூக்கு, வாயை கைகுட்டையால் மூட வேண்டும்.
* அடிக்கடி கைகளை சோப் பயன்படுத்தி கழுவ வேண்டும்.
* கண்கள், மூக்கு, வாயை தொடுவதை தவிர்க்கவும்.
* கைகுலுக்காதீர்கள்.
* காய்ச்சல் வந்தால் தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள்.
* நீங்களாகவே மாத்திரை வாங்கி சாப்பிடாதீர்கள்.
* நீராகாரங்களை அதிகம் பருக வேண்டும்.
* கூட்டமான இடங்களை தவிர்த்துவிடுங்கள்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • landslide-colombia

  கொலம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 அதிகரிப்பு..!

 • tirupati-murmu-5

  திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம்..!!

 • brazil-rain-landslide-2

  தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

 • kujarat-election

  குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

 • vinayagar-puduchery-30

  புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்